PUBLISHED ON : செப் 17, 2023

தேசிய தலைவர், பாலகங்காதர திலகரை நாம் அனைவரும் அறிவோம். இவரது மிக நெருங்கிய நண்பர், தகடுஷேத் கத்வே; கணபதியின் தீவிர பக்தர்.
இந்தியா, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலம் அது. பொது மக்களிடையே சிறு கூட்டம் போட்டால் கூட, போலீசாரால் கைது செய்யப்படுவர், தேசிய தலைவர்கள். தன் நண்பர், விநாயகரை வணங்கி வந்ததைப் பார்த்த, பாலகங்காதர திலகருக்கு, ஒரு யுக்தி தோன்றியது.
தகடுஷேத் கட்டிய கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தியன்று, ஒரு பெரிய கணபதியை பிரதிஷ்டை செய்யும்படி, நண்பரிடம் கூறினார்.
விநாயகர் பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடப் போவதாக வாய்மொழி செய்தி, மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது.
அந்த காலத்தில், பிரமாண்ட அளவில் கடவுள் சிலைகளை வைத்து பூஜிக்கும் வழக்கம் இல்லை. எனவே, 10 அடி உயரத்துக்கு மண் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்பட்டிருந்த பெரிய விநாயகரை பார்க்க, மக்கள் வெள்ளம் அலைமோதியது.
கோவில் பண்டிகை என்பதால், மக்கள் கூடியிருப்பதாக நினைத்த ஆங்கிலேய அரசு, எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஒருபுறம், விநாயகருக்கு பூஜை நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம், ஆங்கிலேயர் எதிர்ப்பு பிரசாரம் நடந்து கொண்டிருந்தது.
இந்தியா முழுவதுமாக மக்கள் நிலை என்ன; ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் எந்த நிலையில் இருக்கிறது; மக்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்; அடுத்த போராட்ட யுக்தி என்ன என்பதை, மக்களிடம் எடுத்துக் கூறினர், தேசிய தலைவர்கள்.
அன்று, வெற்றிகரமாக முடிந்தது, கூட்டம்.
ஒரு இடத்தில் மட்டும் இப்படி ஒரு கூட்டம் நடத்துவது போதாது என்று யோசித்தார், திலகர். எல்லா இடத்துக்கும் தங்களின் வெள்ளையர் எதிர்ப்பு பிரசாரத்தை கொண்டு போக, அலங்கரிக்கப்பட்ட விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.
விநாயகர் நகர் வலம் வர, அவரை தரிசிக்க வரும் மக்களிடம், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான ரகசிய கூட்டம் பற்றிய தகவலை எல்லாம் இப்படித்தான் மக்களுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர், தலைவர்கள்.
இந்த கோவிலில் விநாயகர் ஊர்வலம் சென்றதை பின்பற்றி தான், மும்பையிலும், பிற நகரங்களிலும் தற்போது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.
ஒருமுறை, தேசபக்தர் சித்ரஞ்சன் தாஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த பெட்டியில், மற்றொரு பெண்மணியை தவிர, அப்போது யாரும் இல்லை. தாசிடமிருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி செய்தாள், அப்பெண்மணி.
தாஸ் அணிந்திருக்கும் மோதிரம் மற்றும் பணத்தை தன்னிடம் தந்துவிட வேண்டும். மறுத்தால், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முற்பட்டதாக கூச்சலிடுவதாக மிரட்டினாள்.
அப்பெண்ணிடமிருந்து சமயோசிதமாய் தப்பிக்க முடிவு செய்த தாஸ், செவிடரை போல நடிக்க துவங்கினார்.
அப்பெண்மணியிடம், 'தாங்கள் பேசுவது என் காதில் விழவில்லை; என்ன சொல்ல வருகிறாயோ அதை ஒரு காகிதத்தில் எழுதிக் காட்டவும்...' என்று, சைகையால் பேசினார்.
இதை புரிந்து கொள்ளாத அப்பெண்மணி, தான் சொன்னதை ஒரு காகிதத்தில் எழுதி, தாசிடம் காட்டினாள்.
உடனே, அந்த காகிதத்தை பிடுங்கிக் கொண்டு, ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினார்; அப்பெண்ணை ரயில்வே அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்தார், தாஸ்.
வாழ்க்கையில் புத்திசாலியாக மட்டும் இருந்தால் போதாது. ஆபத்தான சூழ்நிலையில் சமயோசிதமாய் நடந்து தப்பிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- நடுத்தெரு நாராயணன்
