PUBLISHED ON : ஜூலை 21, 2024

ஜூலை 27, அப்துல் கலாம் நினைவு நாள்
கனவு காணுங்கள் என்று
தரிசாகக் கிடந்த
கரிசல் காடுகளிலும்
கனவுகளை விளைவித்தவர்!
வீடுகள் தோறும்
செய்தித்தாள் வீசியபோதே
தானும் ஒருநாள்
தலைப்புச் செய்தியாக
வருவோம் என்று கனவு கண்டவர்!
மண் வெளியில் விளையாடும்போதும்
விண்வெளிக் கனவுகளில்
வலம் வந்தவர்!
கொண்ட கனவை நனவாக்ககண்ணுறங்காமல் உழைத்தவர்
இயலாது என்று இருந்து விடாமல்
இன்னும் இன்னும் என்று
இறக்கைக் கட்டி பறந்தவர்!
பிறப்பு
ஒரு சம்பவமாக இருந்தாலும்
இறப்பு
ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்றவர்!
சொன்னது போல இந்தியாவின்
முதல் குடிமகனாய் உயர்ந்தார்
முன்மாதிரி குடி மகனாய் வாழ்ந்தார்!
நேர்மையும், எளிமையும்இவரது வாழ்க்கை வண்டிக்கு
இரு தண்டவாளங்கள்!
மாணவர் மத்தியில்
மகிழ்ச்சியோடு உரை நிகழ்த்தி
மாணவர் எழுச்சிக்கு வித்திட்டவர்!
சும்மா கிடந்த காகிதங்களை
சித்திரக் காகிதங்களாய் மாற்றி
சரித்திரம் படைத்தவர்!
இவர் சொன்ன பொன்மொழிகள்
எம்மொழியிலும் இல்லாத
விண் மணிகளாய் மின்னுகின்றன!
இவரது
ஏவுகணையின் வீரியம் கண்டு
விண்வெளியே வியந்து போனது!
கூடங்குளம் அணுமின் நிலைய
பயன்பாடு குறித்த - இவரது
கட்டுரை படித்தபோது,
அணு உலையே ஆச்சரியப்பட்டது!
மரம் நடச்சொல்லி
மனித இதயங்களில்
மனிதம் நட்டவர்; சிகரம் தொட்டவர்!
இளைஞர்களுக்கு வழிகாட்டி
வாழ்க்கையில் நம்பிக்கையூட்டி
வெளிச்சம் காட்டிய மாமனிதர்!
இவர் நினைவாக
இளைஞர்கள் நட்ட மரங்கள்
இப்போது நிழல் தருகின்றன!
அதனால் இனி -
அசோகர் மட்டுமல்லாமல்
அப்துல் கலாமும்
மரம் நட்டார் என்று சொல்லுங்கள்!
என்.ஆசைத்தம்பி, சென்னை.