
அம்பாளுக்கு உரிய ஒன்பது சிறப்பு நாட்கள், நவராத்திரி. இந்நாட்களில், அம்பாளை பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் பலன் போன்று, வேறு எப்போது பிரார்த்தனை செய்தாலும் கிட்டாது. கலை, பொருள் மற்றும் சக்தியின் அம்சமான அம்பாளை, இந்த ஒன்பது நாட்களும் பிரார்த்தனை, பாராயணம் செய்தால், மேற்கூறிய பலன்களையும் நமக்கு நல்குவாள். உலகில் உயிர் வாழ, இந்த சக்திகளும் இன்றியமையாதவை. வரும் நவராத்திரி கொலுவை வித்தியாசமாக கொண்டாட சில, 'டிப்ஸ்' இதோ...
* கொலு ஷாப்பிங் செல்பவர்கள், புத்தக கடைகளுக்கு சென்று, 'ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள், விவேகானந்தர், ரமண மகரிஷி மற்றும் காஞ்சி பெரியவரின் உபதேசங்கள், 'வாழ்வில் சிறக்க' மற்றும் 'மனஅமைதி பெற என்ன செய்யலாம்' இப்படி பல குட்டி புத்தகங்கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கின்றன. இவற்றை கொலுவிற்கு வருவோருக்கு தரலாம். 50 ரூபாய் பிளவுஸ் பிட்டில் கிடைக்கும் திருப்தி, இப்புத்தகத்திலும் கிடைக்கும்.
* குழந்தைகளுக்கு நம் நாட்டு கலாசாரம், பண்பாடு மற்றும் இதிகாச புராணங்களை தெரிய வைக்க, நவராத்திரி பண்டிகை நல்ல சந்தர்ப்பம். கொலுவில், ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளின் முக்கிய நிகழ்வுகளை, 'தீமாக' அமைக்கலாம். அத்துடன், ஹாரிபார்ட்டர் கதைகள் மற்றும் டோரா புஜ்ஜி போன்றவற்றை கூட அமைக்கலாம். இது, பழமைக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து, இந்த நவராத்திரியை களை கட்ட வைக்கும்.
* உங்கள் பிள்ளைகளை, கரும் பலகையில், நவராத்திரி பற்றிய விஷயங்களை தினம் ஒன்று எழுதச் சொல்லி, கொலுவில் வைக்கலாம். நவராத்திரி கலச தத்துவம், நவராத்திரி நாயகியரின் நாமங்கள், ஸ்ரீசக்ரம் பற்றிய விளக்கம், அபிராமி அந்தாதி என, அம்பிகையை பற்றிய விஷயங்கள் அனைவரையும் கவரும்.
* நவராத்திரியின்,ஒன்பது நாட்களிலும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தாம்பூலம் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்றார், உறவினர்களுடன் உணவருந்தி மகிழலாம்; உறவுகளுக்குள் நல்ல இணக்கம் ஏற்படும்.
* குழந்தைகளுக்கு, 'க்விஸ்' போட்டிகள் வைத்து, அவர்களுக்கு பயன்படும் கலர் பென்சில், ஸ்கேல், பென்சில் பாக்ஸ் போன்றவற்றை பரிசளிக்கலாம். குழந்தைகள் குதூகலமாகக் கலந்து கொள்வர்; அவர்களது தயக்கமும் மறையும்.
* நவராத்திரியில் பிளவுஸ் பிட் கொடுப்பது விசேஷம் தான். ஆனால், அது, அதிகம் பயன்படாமல் கை மாறிக் கொண்டே இருக்கும். அதனால், சுமங்கலிகளுக்கு நவதான்ய பிள்ளையார், குபேர விளக்கு, மூங்கில் பூக்கூடை போன்றவற்றை கொடுக்கலாம்.
* கொலு பார்க்க வருவோருக்கு தாம்பூலத்துடன் ஒரு பூந்தொட்டியை தந்து, 'பூமி வெப்பமடைவதை தடுக்க, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்; முடியாதவர்கள் இந்த பூச்செடியையாவது வளர்ப்போம்...' என்று சொல்லி, இயற்கையை வாழ்விப்போம்.
* ஒரு நாளும் எந்த கொலுவையும், மற்றவர் வீட்டு கொலுவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். சின்ன கொலுவாக இருந்தாலும், அதில், ஏதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கும். அதை சிலாகித்து பேசுங்களேன். ஆக்கபூர்வமாக உங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றினால், புதிதாக கொலு வைக்கும் இளசுகளுக்கு இதமாக சொல்லுங்கள்.
கொலு வைக்கும் பழக்கமில்லாதவர்கள் இந்நாளில் தோழிகள் மற்றும் உறவினர்களை அழைத்து, வெற்றிலை, பாக்கு கொடுக்கலாம்.