
வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்த குக்கிராமம், சொக்கதேவன்பட்டி. கண்ணாத்தாளின் வீட்டிற்கு பின்புறம், அவளுக்கு சொந்தமான நஞ்சை நிலம் இருந்தது. அவ்வூரில், செல்வாக்கும், பணம் மற்றும் ஆள் பலம் உள்ள மனிதர், கருப்பசாமி; கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர். கண்ணாத்தாளின் நிலத்திலிருந்து ஐம்பதடி தூரத்தில் அவரது புஞ்சை நிலம் இருந்தது.
கண்ணாத்தாளின் வீட்டிற்கு பின்புறம் பாசன வாய்க்கால் இருந்ததால், அவளது காலி மனையின் குறுக்கே வாய்க்கால் வெட்டினால், தன்னுடைய புஞ்சை நிலம், நஞ்சையாகுமென நினைத்தார், கருப்பசாமி. ஆனால், அவர் ஆசைக்கு, கண்ணாத்தா குடும்பம் தடையாயிருந்தது.
அன்று, ஒரு முடிவோடு, தன் மகன்களை அழைத்துக் கொண்டு, கடப்பாரை, மண்வெட்டி சகிதம், கண்ணாத்தாளின் மனைக்கு வந்த கருப்பசாமி, கால்வாய் வெட்ட ஆரம்பித்தார்.
அதைப் பார்த்த கண்ணாத்தா, ஆவேசத்துடன், ''என்னாண்ணே... என் இடத்துல வந்து, எங்கிட்ட கேட்காம வாய்க்கால் வெட்டுறே... இது, உனக்கே நியாயமாபடுதா...'' என்று சத்தம் போட்டாள்.
''இங்க பாரு... நானும் உன்கிட்ட பலமுறை கேட்டுப் பாத்துட்டேன்; நீ வழிக்கு வர்ற மாதிரி தெரியல. என் புஞ்சைக்கு தண்ணி வேணும்; அதான், வாய்க்கால் வெட்டுறேன். வீம்பு செய்யாம பேசாம போயுடு; இல்ல அடிபட்டு சாவே...'' என்றபடி, அவளை அடிக்க கையை உயர்த்தினார். கண்ணாத்தாளின் கணவரும், அவளின் மூன்று மகன்களும் ஓடி வந்து, கருப்பசாமியின் கையை பிடித்தனர்.
''கருப்பசாமி... நீ செய்றது நல்லால்லே... என் வீடு, என் மனை. அராஜகமா அதில் வாய்க்கால் வெட்டுறது தப்பு. உன் புஞ்சைய, நஞ்சையா மாத்த, என் வீட்டு மனை தான் கிடைச்சுதா... போயுரு; இல்ல... இங்க என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...'' என்றார், கண்ணாத்தாளின் கணவன்.
மீசையை முறுக்கியபடி, முறைத்து பார்த்த கருப்பசாமி, ''வாய்க்கால வெட்டவா விடமாட்டேங்கிறீங்க... உங்கள வச்சுக்கிறேன்டா...'' என்று கறுவி, ''வாங்கடா...'' என்று தன் மகன்களை அழைத்து, அவ்விடத்தை விட்டு அகன்றார்.
சிலநாட்களுக்குப் பின் -
தூரத்தில், கண்மாய்க்கரை மேட்டில், சத்தம் போட்டபடி நிறைய ஆட்கள் வருவது தெரிந்தது. அடியாட்களை பணம் கொடுத்து அழைத்து வந்திருந்தார், கருப்பசாமி. போதையில் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி, கண்ணாத்தாளின் வீடு நோக்கி வந்தது, அக்கூட்டம். அக்கம் பக்கத்தினர், 'என்ன ஆகுமோ...' என்று பதற்றமாயினர்.
கண்ணாத்தாளின் கணவர் மற்றும் மகன்கள் மூவரும் நிலைமையை புரிந்து, வீட்டிற்குள் ஓடி, ஆளுக்கொரு அரிவாள், கம்பை எடுத்தபடி வாசலுக்கு வந்தனர். அப்போது, அவர்களை இழுத்து, வீட்டிற்குள் தள்ளிய கண்ணாத்தா, ''என்ன நடந்தாலும் நீங்க யாரும் வெளியே வரக் கூடாது; நான் பாத்துக்கிறேன். அவனுங்க பெருங்கூட்டமா வர்றானுங்க; நீங்க, வீட்டில இருக்கிறதே தெரியக்கூடாது...'' என்று சொல்லி, 'படக்'கென்று கதவைச் சாத்தி, பூட்டி, வாசற்படியில், இடுப்பில் கை வைத்தபடி நின்றாள்.
'திமுதிமு'வென்று, முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் வீட்டின் முன் வந்து நின்றனர். எல்லாருடைய கையிலும் கம்பு இருந்தது. அதில் பருமனான ஒருவன், கண்ணாத்தா முன் வந்து, ''அடியே கண்ணாத்தா... வாய்க்கால் வெட்ட விட மாட்டேங்கிறியாமே... உன்னை வெட்டிப் போட்டா என்ன செய்வே... எங்கே உன் மகன்கள்... டேய்... ஆம்பளையா இருந்தா வெளியே வாங்கடா...'' என்ற ஆங்காரமாக கர்ஜித்தான்.
கண்ணாத்தா மிரளவில்லை.
''ஏலேய்... என்னடா சவுண்ட் விடுறே... இந்த பொட்டச்சிக்கிட்ட சண்டை போடவா இத்தனை பேரு வந்தீக... என் வீட்டு மனையிலே வாய்க்கால் வெட்ட, அது, என்ன புறம்போக்கா... பட்டா இடம்டா! எங்க பரம்பரை சொத்து; எவன் பேச்சைக் கேட்டு இங்கே வந்தீக...'' என்று சீறினாள்.
கருப்பசாமியின் மூத்த மகன், கையில் அரிவாளை தூக்கியபடி, ''ஏ கிழவி... உனக்கு அவ்வளவு திமிரா... ஒரே போடு, போய்ச் சேர்ந்திடுவே... பேசாம உன் புருஷன வரச்சொல்லு,'' என்றான்.
''எதுக்கு என் புருஷன வரச்சொல்ற... எம்பேருல தான் இந்த இடம் இருக்கு; புருஷனோ, புள்ளைகளோ வரமாட்டாங்க. எதப் பேசுறதா இருந்தாலும் எங்கிட்டே பேசு...'' என்றாள்.
''வாய்க்கால் வெட்ட வழி விடப் போறியா இல்லியா...''
''முடியாது,'' என்று கண்ணாத்தா சொன்னதும், ஆவேசமான கருப்பசாமி, ''அந்த சிறுக்கிய அடிச்சு தூக்கியெறியுங்கடா,'' என்று சொன்னவுடன், தன் கையிலிருந்த கம்பால், கண்ணாத்தாளை தலையில் தாக்கினான், கருப்பசாமியின் மூத்த மகன். அலறியவாறு, மண்ணில் வீழ்ந்தாள், கண்ணாத்தா. கருப்பசாமியின் இளைய மகன், கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி, அவளை ஓங்கி மிதித்தான்; கையால் கன்னத்தில் குத்தினான், மூத்தவன்.
நான்கு பேர் சேர்ந்து, கண்ணாத்தாளை அலாக்காக தூக்கி, பக்கத்திலிருந்த சீமைக்கருவேல முட்புதரில் வீசியெறிந்தனர்.
அக்கம் பக்கத்தினர் யாரும் இந்த அராஜகத்தை தட்டிக் கேட்க முன்வரவில்லை. பூட்டிய வீட்டிற்குள்ளிலிருந்த கண்ணாத்தாளின் கணவன் மற்றும் மகன்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியாமல், மவுனமாக அழுது கொண்டிருந்தனர்.
தன் புருஷன், பிள்ளைகள் வெளியே வந்தால், இந்த சண்டாளர்கள் அவர்களை கொன்று விடுவரென்று பயந்து, அவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டி, தன்னை முன்னிறுத்தி போராடி வீழ்ந்தாள், கண்ணாத்தாள்.
அவளை வெற்றி கண்ட பெருமிதத்தில், அவ்விடத்தை விட்டு அகன்றது, அடியாட்கள் கூட்டம்.
அவர்கள் போன பின், ரத்தம் வழிந்தோட, உடலில் முட்கள் குத்திய காயங்களுடன், அலங்கோலமாய் மயங்கிக் கிடந்த கண்ணாத்தாளை, தூக்கி, வீட்டுத் திண்ணையில் கிடந்தினர், அவ்வூர் மக்கள்.
'நாசமாய் போறவனுக; இவனுகளுக்கு என்ன கதி கிடைக்கப் போகுதோ...' என்று சபித்தனர்.
ஒருத்தர் ஓடிப் போய் பூட்டிய வீட்டின் கதவை திறந்தார். கண்ணாத்தாளின் நிலை கண்டு, அவளது கணவரும், மகன்களும் அழுது புரண்டனர்.
பிரச்னை போலீசுக்குப் போய், வழக்கு நடந்தது.
ஓர் ஆண்டுக்கு பின் - பக்கத்துக் கிராமமான பாவூரில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், கருப்பசாமியும் அவர் மகன்களும் ஒருவரை கொலை செய்ய, அதற்கு பழி வாங்க துடித்தனர், பாவூர்காரர்கள்.
அன்று நடுச்சாமம், அமாவாசை இருட்டு; தெருவில் இருந்த ஒரே தெரு விளக்கும் எரியவில்லை. முண்டாசு கட்டி முகத்தை மறைத்தபடி, ஐந்து பேர் ஆயுதங்களுடன் வந்தனர் நாய்கள் குரைக்கவும், கொண்டு வந்திருந்த கறித்துண்டுகளை வீசினர்; அவை, 'கம்'மென்று அடங்கி விட்டன.
வீட்டுத் திண்ணையில், கயிற்றுக் கட்டிலில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் கருப்பசாமி. டார்ச் லைட்டை அடித்து, அவர்தானா என்று உறுதி செய்து கொண்ட பாவூர்காரர்கள், அடுத்த நிமிடம், அவரை வெட்டி சாய்த்தனர்.
மொட்டை மாடியில் படுத்திருந்த கருப்பசாமியின் இளைய மகன், அப்பனின் குரல் கேட்டு பதறியெழுந்து, எட்டிப் பார்த்தான். நிலைமையை அறிந்து மாடியிலிருந்து குதித்து, தப்பி ஓடி விட்டான்; மாட்டுக் கொட்டடியில் ஒளிந்திருந்த கருப்பசாமியின் மூத்த மகனோ, பதுங்கி பதுங்கி கண்ணாத்தா வீடு நோக்கி, ஓடி வந்தான்.
'டொக் டொக்'கென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டு விழித்தெழுந்த கண்ணாத்தா, கதவை திறந்தாள்.
தலையில் முக்காடு போட்டு, உள்ளே நுழைந்த கந்தசாமியை பார்த்து, ''நீயா...'' என்று பயத்தில் படபடத்தாள்.
''ஆத்தா... பாவூர்காரனுங்க என்னை கொல்லவர்றானுங்க; நீ தான் என்னைக் காப்பாத்தணும்...'' எனக் கதறியவாறு, கண்ணாத்தாளின் காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான், கருப்பசாமியின் மூத்த மகன்.
ஒன்றுமே பேசவில்லை, கண்ணாத்தா. உறக்கத்திலிருந்த அவளின் கணவன் மற்றும் மகன்கள் விழித்துக் கொண்டனர். குரலை வைத்து, வந்திருப்பது யாரென தெரிந்து கொண்டனர். நிலைமை புரிந்தது; பனிக் காலமானாலும், பதற்றத்தில் அனைவருக்கும் வியர்த்தது.
ஏதோ ஒரு அசம்பாவிதம் அரங்கேறிவிட்டதென்று நினைத்தாள், கண்ணாத்தா. அடைக்கலம் கேட்டு வந்திருப்பது, தன் பரம எதிரியின் மகன் என்றாலும், 'உள்ளே போயி ஒளிந்து கொள்...' என்று சைகை காட்டினாள்.
தூரத்தில், கருப்பசாமி வீட்டிலிருந்து, ''ஐயோ... யாராவது எங்களை காப்பாத்துங்களேன்...'' என்ற, கருப்பசாமி மனைவியின் அலறல் சத்தம் கேட்டது.
இருட்டில் ஒருவன், ''மகன்கள் ரெண்டு பேரையும் காணலே; தப்பிச்சுட்டானுக போலிருக்கு,'' என்று குசுகுசுத்தான்.
''ஏண்டா... கண்ணாத்தா வீட்டிற்கு போய்ப் பாப்போமா...'' என்று கேட்டான், ஒருவன்.
''வேணாம்; இவனுகளுக்கு அவ, எதிரி. அங்க போனா, நாம வெட்டுறதுக்கு பதிலா, அவளே போட்டுத் தள்ளிடுவா,'' என்றான், மற்றொருவன்.
பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த கண்ணாத்தா, ''யாரப்பா அது... இந்நேரத்திலே...'' என்றாள்.
'யாரு கண்ணத்தாவா... பாவூர்காரங்க ஆத்தா... கொலைகாரப்பாவி, கருப்பசாமிய பொளந்துட்டோம்...' எனச் சொல்லி, முண்டாசு கட்டிய அந்த உருவங்கள், இருட்டில் நடந்து சென்றது.
ஊரே உறங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கையில், தைரியத்துடன் அவள், அவர்களிடம் பேசியது, வியப்பூட்டுவதாயிருந்தது.
வீட்டினுள் வந்ததும், அவள் காலில் விழுந்த கருப்பசாமியின் மகன், ''என்னை மன்னிச்சுடு ஆத்தா... உனக்குச் செஞ்ச கொடுமைக்கு, நீயென்ன வெட்டிப் போட்டிருக்கலாம்; ஆனா, நீ, என்னை கொல்ல வந்தவனிடமிருந்து என் உயிரை காப்பாற்றி, நீ மனுஷிங்கறத நிரூபிச்சுட்டே; நீ தான் என் சாமி...'' என்று, கும்பிட்டு, கதறியழுதான்.
அன்று, தன் கணவனையும், மகன்களையும் காத்தாள், கண்ணாத்தா; இன்று எதிரியையும் காத்தாள்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' தன்னை அழித்திட நினைத்த பகைவனுக்கும் வாழ்வளித்த கண்ணாத்தா, மன்னிக்கும் குணத்தால் குன்றிலிட்ட விளக்கானாள்.
மு.சுந்தரம்
வயது: 68.
சொந்த ஊர்: மதுரை.
கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி.,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், 'ஸ்பெஷல் கிரேடு' போர்மேனாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். கதை மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். 30 ஆண்டு கால, தினமலர் - வாரமலர் வாசகர். வாரமலர் இதழுக்கு, தொடர்ந்து, சிறுகதைகள் எழுத வேண்டும் என்பது இவரது லட்சியம்.

