தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (5)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (5)

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (5)


PUBLISHED ON : டிச 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகவதரிடம், தான் எழுதிய ஒரு நாடகத்தை படிக்க கொடுத்து, அதில் நடிக்க வேண்டும் என்று கேட்டார், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை.

படித்து பார்த்த பாகவதர், 'வசனமெல்லாம் அருமை தான். ஆனால், நாஸ்திக வாடை அதிகம் வீசுகிறது. நான் சுபாவத்தில் ஆஸ்திகன். நடிப்பு என்றால் கூட, நாஸ்திகம் பேச மாட்டேன். அது, என் கொள்கைக்கு விரோதமானது. எனவே, என்னை மன்னித்து விடுங்கள்...' என்றார்.

'சொர்க்கவாசல்' என்ற அந்த நாடகத்தில், பிறகு, கே.ஆர்.ராமசாமி நடித்தார்.

நாகர்கோவிலில், புது வீடு கட்டி, விழாவை சிறப்பாக கொண்டாடினார், என்.எஸ்.கிருஷ்ணன். சிறப்பு நிகழ்ச்சியாக, பாகவதரின் கச்சேரி.

பல முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். அதில், மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சதாவதானி செய்குத்தம்பி பாவலர், நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றோர் இருந்தனர்.

பாகவதரின் கச்சேரி முடிந்ததும், 'நான் இங்கு வரும்போது, நோயுற்று வந்தேன். இவருடைய கச்சேரியை கேட்ட பிறகு, நோய் நீங்கி மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

'அதுமட்டுமல்ல, சங்கீதத்திற்கு நோய் தீர்க்கும் ஆற்றல் உண்டு என்பது ஏட்டுச் செய்தி மட்டும் தான் என்று எண்ணியிருந்தேன். பாகவதரின் கச்சேரியை கேட்ட பிறகு, அது முற்றிலும் உண்மை தான் என்ற எண்ணமே ஏற்படுகிறது...' என்றார், பிள்ளையவர்கள்.

பாகவதர் மேல் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர், டி.ஆர்.மகாலிங்கம்.

மகாராஜாவை போல் வாழ்ந்த பாகவதருக்கு, பிற்காலத்தில், படங்கள் குறைந்ததால், சிறிய அளவிலேனும் உதவ நினைத்தார், மகாலிங்கம்.

தன் மகன் சுகுமாரனை பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சியின் போது, பாகவதரை அணுகி, 'என்னுடைய இல்லத்திற்கு வந்து, விழாவில் கலந்துகொண்டு, எங்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்...' என்று, மிகுந்த மரியாதையுடன் கேட்டுக் கொண்டார், மகாலிங்கம்.

'உனக்கு இல்லாததா, மகாலிங்கம், அவசியம் வருகிறேன்...' என்றார், பாகவதர்.

மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற, மகாலிங்கம், விழாவன்று சிறப்பான முறையில், பாகவதரை வரவேற்றார்.

குடும்பத்தாருடன் பாகவதரை வணங்கி, 'அண்ணாவுடைய கலைப்பணிக்கு, எங்களால் முடிந்த காணிக்கை...' என்று சொல்லி, ஒரு கவரில், 1,000 ரூபாயை வைத்து, தந்தார்.

'ஓ அப்படியா... சரி கொடு...' என்று வாங்கிக் கொண்டார், பாகவதர்.

'என்ன இது, பாகவதர் பணத்தை வாங்கிக் கொண்டாரே...' என, அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். இந்த நேரத்தில், இது, அவருக்கு மிகுந்த உபகாரம் தான் என்றும் நினைத்தனர்.

அதன் பிறகு நடந்தது தான் ஆச்சரியம்.

மகாலிங்கத்தின் பையன், பெரியோர்களிடம் நமஸ்காரம் செய்து, ஆசி வாங்கினான். பாகவதரிடமும் வந்து, நமஸ்கரித்தான்.

'அப்பாவை போல், நீயும் பெரிய ஆளாக வரவேண்டும்...' என்று ஆசிர்வதித்த, பாகவதர், தன் சட்டை பையிலிருந்து, ஒரு ரூபாயை எடுத்து, கவரில் போட்டு, 1,001 ரூபாயாக பையனுக்கு தந்து விட்டார்.

இதை பார்த்து பதறிய மகாலிங்கம், 'என்ன அண்ணா இது... அது, நாங்கள், தங்களுக்கு தந்த காணிக்கை...' என்றார்.

சிரித்தபடியே, 'அதனாலென்ன, குழந்தைக்கு என்னுடைய பரிசு இது...' என்றார், பாகவதர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர், டி.ஆர்.சுந்தரத்தை, அனைவருமே மரியாதையாக, 'முதலியார் ஐயா' என்று தான் அழைப்பர்.

பாகவதர் நடித்த, இசை நாடகம் ஒன்று, திருச்சி வானொலியில் ஒலிபரப்பாகியது. அந்த நாடகத்தை எழுதியவர், ஏ.எஸ்.ஏ.சாமி.

'ரேடியோ பெட்டியிலும்' பாகவதர் நடிக்கிறாரா என்று சந்தோஷத்தின் உச்சிக்கே சென்ற மக்கள், அதை கேட்டு மகிழ்ந்தனராம்.

அந்த காலத்தில், ரேடியோ என்பது, மிகுந்த வசதி வாய்ப்பு உள்ளவர்களின் ஆடம்பர பொருளாகத்தான் பார்க்கப்பட்டது. பெரும்பாலான வீடுகளில், அரிக்கேன் விளக்கு, லாந்தர் விளக்கு, சிம்னி விளக்கு தான் இருந்தன. மின்சார வசதி இல்லை.

அதுமட்டுமல்ல, டிரான்சிஸ்டரும் பிற்பாடு வந்தது தான். எனவே, ஏழை மக்கள் கேட்டு மகிழ்வதற்காக, தங்கள் ரேடியோவை ஜன்னல் ஓரமாக வைத்து விடுவர், வசதியான வீட்டுக்காரர்கள்.

வானொலி நாடகத்திலும், பாகவதருக்கு அபார வெற்றி கிடைத்து விட்டது. அந்த நாடகத்தின் பெயர், 'பில்ஹணன்!'

இந்த நாடகத்தை படமாக்க முடிவு செய்தார், டி.ஆர்.சுந்தரம்.

பாகவதரை வைத்து தயாரிக்கும் முதல் படம் என்பதால், தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏனோ, அது ஈடேறாமல் போய் விட்டது.

பாகவதருக்கு, கோவிந்தன் என்றொரு ரசிகர் இருந்தார். அவரை, ரசிகர் என்பதை விட, வெறியர் என்று தான் சொல்ல வேண்டும். பாகவதர் மேல் அப்படியொரு தனி பற்று. பாகவதர் நடித்த, சத்யசீலன் படம் பார்த்து, அவரது வீட்டிற்கு வந்தவர், அங்கேயே தங்கி விட்டார். பாகவதர் இருந்த காலம் வரை அவருடன் நிழல் போல் விசுவாசமிக்க ஊழியராகவே இருந்தார்.

பாகவதருடைய வீட்டில், கோபால் என்ற சமையல்காரர் இருந்தார்.

ஒருநாள், 'கோபால் கோபால்...' என்று, பாகவதர் பலமுறை கூப்பிட்டும், அவர் வரவில்லை.

சற்றே உஷ்ணமான குரலில், 'கோபாலுக்கு பதில் வேறு யாராவது வரமாட்டீர்களா...' என்று சத்தம் போட, பாகவதர் முன் ஆஜரானர், கோவிந்தன். அந்த நொடி முதல், தன் பெயரை கோபால் என்றே மாற்றிக் கொண்டார்.

கோவிந்தன் என்ற கோபாலின் திருமணத்தை, தன் சொந்த செலவில் நடத்தி வைத்தார், பாகவதர். இவர், தன் பெயரை, பாகவதரின் எம்.கே.டி., என்ற இனிஷியலோடு தான் சொல்வார், எழுதுவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

— தொடரும்

வாத்தியார் என்றால், அனைவர் மனதிலும் உடனே தோன்றுபவர், எம்.ஜி.ஆர்., தான். பாகவதர் மீது அளவிடற்கரிய அன்பும், மரியாதையும் வைத்திருந்தவர், எம்.ஜி.ஆர்.,'பாகவதர் என் தெய்வம்...' என்று, அவரே பலமுறை சொல்லியுள்ளார்.அதுமட்டுமா, முதல்வராக பதவியேற்ற போது, 'நான் நடிகனாக அங்கீகரிக்கப்பட்டது, அசோக்குமார் படத்தில் தான். அந்த அங்கீகாரம் பாகவதரால் தான் எனக்கு கிடைத்தது...' என்றார், எம்.ஜி.ஆர்.,பாகவதர், இறைவனடி சேர்ந்தபோது, அவரது குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் தந்தார், எம்.ஜி.ஆர்., அதன் இன்றைய மதிப்பு, 5 கோடி ரூபாய்.

எஸ்.கார்முகிலோன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us