
டிச., 6 ஆனாயர் குருபூஜை
இசை, அனைவரையுமே வசமாக்கக் கூடியது. அத்தகைய இசையின் மூலம், இறைவனையே பூமிக்கு வரவழைத்தவர் தான், ஆனாயர் நாயனார்! முன்னொரு காலத்தில், திருச்சி அருகில் லால்குடியை சுற்றியுள்ள பகுதிகள், மழநாடு என்று அழைக்கப்பட்டது. இப்போது திருமங்கலம் என அழைக்கப்படும் லால்குடி அருகில் உள்ள திருவிருந்தமங்கலத்தில், சாமவேதீஸ்வரர் கோவிலில், லட்சுமி தாயார், சிவனை வழிபட்டதாக, தல வரலாறு கூறுகிறது. லட்சுமியை, 'திருமகள்' என்பர். இதனால், இவ்வூர், 'திருமங்கலம்' எனப் பெயர் பெற்றது.
அத்துடன், பசுக்களை எந்த ஊரில் பாதுகாக்கின்றனரோ, அவ்வூரில் லட்சுமி தாயார் தங்கி விடுவாள். அதனால் தான் இவள் தங்கும் ஊர்களை, 'திரு இருந்த மங்கலம்' என்று சொல்வர்.
தன் தாயைக் கொன்ற பாவம் தீர, இங்கு வந்து சிவனை வழிபட்டார் பரசுராமர். அதனால், சிவனுக்கு, 'பரசுதாமீசுரம் உடையார்' என்ற பெயர் ஏற்பட்டது.
இவ்வூரில் வசித்து வந்த ஆனாயர், சிவன் மீது பெரும் பக்தி உடையவர். பசுக்களை மேய்ப்பது அவரது தொழில். பசுக்களை காட்டிற்கு ஓட்டிச் சென்று, மேய்ச்சல் நிலத்தில் விட்டு விட்டு, தன்னை மறந்து புல்லாங்குழல் இசைப்பார். அப்போது, மாடுகள் புல் மேய்வதையும், கன்றுகள் தாயிடம் பால் குடிப்பதையும், சிங்கம் மற்றும் புலி போன்றவை மான்களை வேட்டையாடுவதையும் மறந்து, அந்த இசையில் மயங்கி நிற்கும்.
ஒருநாள், காட்டில் மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கிய நிலையில், கொன்றை மரத்தை பார்த்தார் ஆனாயர். சிவன் விரும்பி அணிவது, கொன்றைப் பூ! இதனால், அம்மலர்களை சிவனாகவே நினைத்து பார்த்தவர் மனதில், மகிழ்ச்சி பெருக்கெடுக்க, புல்லாங்குழலை எடுத்து, 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை வாசிக்க ஆரம்பித்தார். இதைக் கேட்ட விலங்குகள் மட்டுமல்ல, காற்றும் கூட அசையாமல் நின்றது. உலகமே இயக்கமில்லாமல், இசையை ரசித்துக் கொண்டிருந்ததால், பூலோகம் நோக்கி ஓடி வந்தனர் தேவர்கள். ஆனால், அவர்களும் ஆனாயரின் இசை மழையில் நனைந்து, அசைவற்று போயினர்.
இந்த கீதம், கைலாயத்தை எட்ட, தன் பக்தன் வாசிக்கும் இசையைக் கேட்க சிவனும், பார்வதியும் வந்து விட்டனர். ஆனாயரின் இசையில் மயங்கிய சிவபெருமான், தன் அருகில் எப்போதும் இசை மீட்டியபடியே இருக்கும்படி, அருள்பாலித்தார். பின், அவரோடு இரண்டற கலந்து விட்டார் ஆனாயர்.
இறைவனைக் கூட இசையால் வசமாக்கலாம் என்பதற்கு, ஆனாயரின் வாழ்க்கை எடுத்துக்காட்டு. அவரது குருபூஜை, கார்த்திகை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தில் நடைபெறும். இந்நாளில், அந்த மெல்லிசை மன்னர் வழிபட்ட லால்குடி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
இசைக்கலைஞர்கள் அங்கு சென்று, புல்லாங்குழல் இசைத்து, சிவனை மகிழ்விக்கலாம்!
தி.செல்லப்பா

