ஒப்பிலா உறவு!
உயிர் தந்தோர் இருவர்
கல்வி தந்தோர் பலர்
உலக அறிவு தந்தோர்
நீங்கள் தான்!
உங்களை
என் வாழ்க்கையில்
நான் தான்
இணைத்துக்
கொண்டேன்
உற்ற தோழனாய்
காலம் பல கடந்தும்
என்னை விட்டு
நீங்கள் பிரியவில்லை!
சிலரை வேண்டுமென்றே
பிரிந்து விட்டேன்
வெறுப்பினால் அல்ல
என் வீட்டில் இடம் இல்லாததால்!
அப்படிப் பிரிந்த சிலரும்
இன்றும் என் மனதில்!
என்று உங்களிடம் நான்
வந்தாலும்
ஏன் இத்தனை நாள்
என்னை மறந்தாய் என்று
கேட்க மாட்டீர்கள்
அதே அன்பு, அதே பாசம்
அதே நேசம், அதே பகிர்தல்!
உங்களை என்ன
உறவென்று சொல்வது...
வாழ்க்கையின் அர்த்தத்தையும்
அனர்த்தங்களையும் அவசியத்தையும்
இத்தனை வயதான பின்பும்
இன்றும் அயராது
எடுத்துச் சொல்கிறீர்கள்!
உங்களின் உயர்ந்த உறவைப் புரிந்து கொள்ளாதவர்களும்
இந்த உலகில் உண்டு!
போனால் போகட்டும்
எனக்கு மட்டும்
நான் மறையும் வரை
உங்கள் உறவு வேண்டும்!
உங்களுக்கும் விலை உண்டு
என் அன்பான புத்தகங்களே...
ஆனால், உங்கள் ஒப்பிலா
உறவுக்கோ இந்த
உலகில் விலையே இல்லை!
- தேவவிரதன்,
சென்னை.

