PUBLISHED ON : அக் 08, 2023

கொலு பொம்மைகளை, விருப்பப்படி வைக்காமல், அதற்கு ஒரு விதியை ஏற்படுத்தி வைத்தனர், நம் முன்னோர்.
மகிஷாசுர வதத்தின் போது, பிரம்மன், சிவன், விஷ்ணு மற்றும் தேவர்கள் ஆகியோரின் சக்திகளை ஒன்று சேர்த்து, விஸ்வரூபமாக தோன்றினாள், சக்தி தேவி. அந்த சமயம், மும்மூர்த்திகள், தேவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை கொடுத்து விட்டு, நிராயுதபாணியாக நின்றனர். எனவே தான், அவர்களை பொம்மைகளாக்கி, கொலுவில் நிலை நிறுத்தி தெய்வங்களாக வழிபடுகிறோம்.
தவிர, சிறு குழந்தைகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும், கொலு என்றாலே சந்தோஷம் தான். நவராத்திரி நேரங்களில், அவற்றை சுற்றி வந்தபடி, 'இது என்ன பொம்மை, ஏன் இந்த வடிவில் நிற்கிறது?' என்று, கேள்வி கேட்பர்.
அப்போது, நாம் சொல்கிற தெய்வ கதைகளை கேட்டு, பிற குழந்தைகளுக்கும் சொல்லும் போது, பக்தி நெறிக் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவை எளிதாக பரவும். சிறு வயது முதலே அந்தக் குழந்தைகள், தெய்வ பக்தி, ஆன்மிக ஈடுபாடு, தல தரிசனம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு, நல்லவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளர்வர்.
மனிதர்களுக்கு ஆறறிவும் வேலை செய்து, உலக இயக்கத்தை அறிய வேண்டும் என்பதே, கொலுவின் முக்கிய தத்துவம்.
