PUBLISHED ON : செப் 03, 2023

* மதுராவில், தேவகி - வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில், 'கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
* நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் கோவிலில் உள்ள வேணுகோபாலன் சிலை, நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராம கல்லால் செய்யப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியன்று, பெருமாளுக்கு கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்கள் நடக்கின்றன.
* கடலூர், புதுப்பாளையத்தில், கண்ணன் ராஜகோபாலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருள்பாலிக்கிறார். திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம்.
* திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் கோபிநாதன் சுவாமி கோவிலில், மூலவர் கோபிநாதராகவும், உற்சவர் கிருஷ்ணராகவும் அருள்பாலிக்கும் கண்ணன், கால்நடைகளை காப்பதாக ஐதீகம்.
* மதுரை - கள்ளிக்குடியில், கண்ணன், பாமா - ருக்மணியுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளிமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. குழந்தைகள் கல்வியில் சிறக்க, மாவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.
