PUBLISHED ON : டிச 19, 2021

டிச., 20 - மார்கழி திருவாதிரை
சில இடங்களுக்கு செல்லும்போது, 'இந்த பயணம் இன்னும் கொஞ்சம் நீளாதா ...' என்று நினைப்போம். செல்லும் வழியில் உள்ள இயற்கை காட்சிகள் மனதை அந்தளவு கவரும். எதுவுமே இல்லையென்றால், ஊருக்கு எப்போது போய் சேர்வோம் என்று சலிப்பு தட்டி விடும்.
இதே போல், 'திரைப்படங்கள், நாடகங்கள், நாட்டியங்களிலும் இன்னும் கொஞ்சம் பார்க்கலாமே, சிறப்பாக உள்ளதே ...' என தோன்றும். இவ்வாறுதான், பதஞ்சலி, வியாக்ர பாதர் என்ற முனிவர்களுக்கும், 'சிவனின் நாட்டியத்தை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாமே ...' என தோன்றியது. அதைப் புரிந்து கொண்டு, அந்த இரவை இன்னும் கொஞ்ச நேரம் நீட்டித்தார் , சிவன்.
மார்கழி திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள், பெரும்பாலும் பவுர்ணமியாக இருக்கும். பவுர்ணமி நிலவில் நடனம் காண்பது மனதிற்கு மேலும் உற்சாகத்தை தரும். இந்த இரவை, 'நீண்ட இரவு' என்பர். திருவாதிரை என்ற சொல்லுக்கு, 'பரந்த புனிதமான அலை' என, பொருள்.
அதாவது, இந்த நாளில் தான், பரந்த இந்த உலகத்தை படைத்தார், சிவன். கடல், வானம், பூமி, கிரகங்கள், நட்சத்திரங்கள் என, எல்லை காண முடியாத அளவுக்கு அந்த படைப்பு அமைந்தது. இதற்கு உலகம் என்று பெயர் சூட்டாமல், 'பிரபஞ்சம் ' என, பெயர் சூட்டினர், தேவர்கள்.
இதை அண்டம் என்றும் சொல்வர். எல்லை காண முடியாத இந்த பிரபஞ்சம் உருவான நாளே, திருவாதிரை. அவருடைய நடன அசைவு ஒவ்வொன்றுக்கும் ஒரு கிரமமோ, பொருளோ உருவானது
இந்த அரிய நடனத்தை ரசித்துப் பார்த்தார், திருமால். இந்த விபரத்தை தன்னைத் தாங்கும் ஆதிசேஷன் என்ற பாம்பிடம் கூறினார். ஆதிசேஷனும் இதைப் பார்க்க ஆசைப்பட்டது. திருமாலும் அனுமதித்தார். மனித தலை, பாம்பு உடல் கொண்டு சிதம்பரம் வந்து தவமிருந்தது. ஆதிசேஷன் போலவே, புலிக்கால் கொண்ட வியாக்ர பாத முனிவரும் அங்கே தவமிருந்தார்.
இருவருக்கும் விடிய விடிய நடனக்காட்சி அருளினார், சிவன். தீபாவளிக்கு வடை, பஜ்ஜி, இனிப்பு செய்வது விசேஷம். இதுபோல், மார்கழி திருவாதிரை விழாவுக்கு களி முக்கியம். இனிப்பு மட்டும் போதுமா, நடராஜருக்கு கூட்டாஞ்சோறு மிகவும் பிடிக்கும்.
வட மாநிலங்களில், இதை ஏழு கறி கூட்டு என்பர். தென் மாவட்டங்களில், காய்கறி கலவையுடன் அரிசி சேர்த்து கூட்டாஞ்சோறாக தயாரிப்பர். நடனம் என்பது அறுசுவை உணவு போல் அமைய வேண்டும் என்பது, இதன் உட்தத்துவம்.
நடராஜரின் திருநடனம், திருவாதிரையன்று அதிகாலையில் சிவாலயங்களில் நடத்தப்படும். இதை தரிசிப்பதுடன், களியும், கூட்டாஞ்சோறும் சமைத்து, நாமும் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் தானம் செய்து, மகிழ்வோம்.
தி. செல்லப்பா
