PUBLISHED ON : டிச 19, 2021

இப்படியும், 'பிளாஸ்டிக்'கை ஒழிக்கலாம்!
இனிப்பு வாங்க, கடைக்கு சென்றிருந்தேன். பனை ஓலை பெட்டியில், நான் கேட்ட ஸ்வீட்டை வைத்து தந்தார், கடைக்காரர்.
வழக்கமாக, அட்டை பெட்டி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் தருவர். இது வித்தியாசமாக இருக்கவே, அது குறித்து, அவரிடம் கேட்டேன்.
'பிளாஸ்டிக் ஒழிப்பில் நான் தீவிரமாக இருப்பவன். கடை திறந்ததிலிருந்தே பிளாஸ்டிக் கவர் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்துவதில்லை. மெழுகு தடவிய அட்டைப் பெட்டிகள், உடல் நலத்திற்கு கேடு தரும். மேலும், பிளாஸ்டிக் கவர் மற்றும் பெட்டிகள் மண் வளத்தை பாதிக்கக்கூடியவை.
'இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, பனை ஓலை பெட்டிகளையே பயன்படுத்துகிறேன். ஸ்வீட் தீர்ந்த பிறகும், பனை ஓலை பெட்டிகளை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம். மேலும், பனை பொருட்கள் தயார் செய்யும் ஏழைகள், ஒளிபெறுவதோடு, மண்வளமும் காக்கப்படுகிறது.
'பல ஆண்டுகளுக்கு முன்பே மூங்கில் கூடையில் இனிப்பும், மந்தார இலையில் கார வகைகள் வைத்து தருவது வழக்கத்தில் இருந்தது தான். எங்களிடம் ஸ்வீட் வாங்கி செல்வோர், பனை ஓலை பெட்டிக்காகவே, மீண்டும் கடைக்கு வருகின்றனர். இதனால், கடையில் வியாபாரமும் அதிகமாக நடக்கிறது...' என்றார்.
சமுதாயத்தின் மீது, அவர் கொண்டுள்ள அக்கறையை பாராட்டிவிட்டு வந்தேன். இதை, மற்ற கடைக்காரர்களும் பின்பற்றலாமே!
— எ. மகேஷ், கோவை.
பெண்களின் தன்னலமற்ற சேவை!
எங்கள் பகுதியில் உள்ள, மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து, சமீபத்திய தொடர் மழையால் சேதமடைந்து, சேறும் சகதியுமாகவும், தண்ணீர் தேங்கியும் கிடந்த தெருக்களை, தன்னலம் பாராமல் சுத்தப்படுத்தினர்.
அதுமட்டுமின்றி, தங்களுக்குள் செலவை பகிர்ந்து, கிருமிநாசினியை வாங்கி வந்து தெளித்தனர். வீடு வீடாக சென்று, கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி, ஆலோசனைகளையும் வழங்கினர்.
கண்ட இடங்களில் குப்பைகளை போடாமல், அந்தந்த தெருவில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுமாறு வேண்டுகோள் வைத்தனர். நோய் வந்தபின் பதறுவதை விட, வரும்முன் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, வீட்டுக் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடாதவாறு பார்த்துக் கொள்ள கனிவோடு சுட்டிக் காட்டினர்.
அவசியமான நேரத்தில், அற்புதமான சேவையை செய்த, மகளிர் சுயஉதவி குழுவினரை, அனைவருமே நன்றியோடு பாராட்டினோம்.
வாசகர்களே... உங்கள் பகுதியிலும், இதுபோன்ற பொதுநல சேவைகளை செய்து, பொதுமக்களின் நலன் காக்கலாமே!
— கே.கல்யாணி, விக்கிரவாண்டி.
வாயை பூட்டி வைக்கலாமே!
நண்பரின் மகளுக்கு குழந்தை பிறந்திருந்தது. 'கொரோனா' காலம் என்பதால், முக்கியமான சிலருக்கு மட்டும் தகவல் தெரிவித்திருந்தார். எனக்கும் அழைப்பு வர, நான் பார்க்கச் சென்றேன். பக்கத்து வீட்டுப்பெண் ஒருவர் வந்தார்.
'குழந்தை கலரா இல்லியே... குழந்தை பெரிசா அழவே இல்லையே... பேச்சு வருமா, சிறிய குழந்தையாக இருக்குதே... இத்தனை நாளாயிற்றே... கையை காலை ஆட்ட வேண்டுமே...' என்று, குழந்தை பற்றி, 'நெகட்டிவ்' ஆன, 'கமென்ட்'டுகளையே கூறிக்கொண்டிருந்தார்.
குழந்தையைப் பெற்ற பெண்ணுக்கோ கண் கலங்கி விட்டது.
இவ்வாறு குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பெண்கள், வாயைக் கொஞ்சம் பூட்டி வைக்கலாமே... மற்றவர் மனம் வெதும்பும்படி பேசும் இவர்கள், எப்போது தான் திருந்துவரோ!
தே.ராஜாசிங், தஞ்சை.
