
கனடா நாட்டின், பிரிட்டிஷ் கொலம்பியா ஓசோயூஸ் அருகிலுள்ள பள்ளத்தாக்கு பகுதியில், படத்தில் உள்ள புள்ளிகளாலான ஏரியை காணலாம். 1.7 கி.மீ., பரவியுள்ள இது, குளிர் காலம் மற்றும் இளவேனில் காலத்தில், தண்ணீர் நிரம்பிய ஏரியாக காணப்படும்.
இது ஒரு உப்பு ஏரி. மேலும், அக்கம் பக்க மலைகளிலிருந்து வழிந்து வரும் தண்ணீரால், ஏகப்பட்ட கனிமங்கள், ஏரியில் இறங்கி, வண்ணங்களை வாரி வழங்குகிறது.
இந்த நீரில், 'கால்சியம், சோடியம், சல்பேட், மெக்னீசியம் சல்பேட், சில்வர் மற்றும் டைட்டானியம்' ஆகிய வேதிப் பொருட்கள் கலந்துள்ளதாக கூறுகின்றனர், விஞ்ஞானிகள். குறிப்பாக, 'மெக்னீசியம் சல்பேட்' கலப்பு தான், இந்த வண்ணங்களுக்கு முக்கிய காரணி எனவும், கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு காலத்தில், உள்ளூர் மக்களால், ஏரி, மிக புனிதமாக கருதப்பட்டது. காரணம், இந்நீரால், பல வியாதிகளை குணப்படுத்த இயலும். ஒவ்வொரு வட்டமும், வெவ்வேறு குணநலன் கொண்டவை எனவும் நம்பினர்.
முதலில், ஏரியை சுற்றிய தரைப் பகுதி, தனியார் வசம் இருந்தது. பின், அரசால் வாங்கப்பட்டு, இன்று, சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
முதல் உலகப் போரின்போது, இங்கிருந்து எடுக்கப்பட்ட கனிமங்களை வைத்து, வெடிமருந்து மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அத்துடன், ஊழியர்களை நியமித்து, தினமும், 1 டன் உப்பும் எடுக்கப்பட்டது. தற்சமயம் உப்பு எடுப்பது நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது, முழுமையான சுற்றுலா தலமாக மாறி விட்டது.
— ஜோல்னாபையன்.

