
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின், தென் மேற்கில், இகா நகர் பகுதியில் தான், படத்தில் காணும் பாலைவனச் சோலை உள்ளது. சுற்றிலும் மணல் குன்றுகள், பள்ளத்தில், பாலைவனச் சோலை அமைந்துள்ளது.
இங்கு, நிரந்தரமாய் வசிப்பவர்கள், 115 பேர் தான். ஆனால், ஆண்டுக்கு, பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்த தண்ணீருக்கு, மூலிகை குணங்கள் அதிகம் என்பதால், அதிகளவில் வருகின்றனர். மேலும், இதன் மணலை எடுத்து பூசிக்கொண்டால், மூட்டு வீக்கம், வாத நோய் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
பாலைவனச் சோலை உருவானது பற்றி, ஒரு கதை உண்டு. ஒரு தேவதை, இந்த ஏரியை உருவாக்கி, அதில், நிர்வாணமாக குளிக்க இறங்கும் முன், கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாளாம். அப்போது, துாரத்தில், வேட்டையாடும் ஒருவர், தன்னை உற்றுப் பார்ப்பதை கண்ணாடியில் பார்த்ததும், ஓட்டமாய் ஓடி மறைந்து விட்டாள். ஆனால், ஏரி மட்டும் நிரந்தரமாய் தங்கி விட்டது.
கடந்த, 70 ஆண்டுகளாக, இந்த இடம், சுற்றுலா தலமாக உள்ளது. சில நாட்களில், தண்ணீர் அளவு குறைந்து விடும். விடுவரா... வியாபாரிகள் ஒன்று சேர்ந்து, வெகு துாரத்திலிருந்து தண்ணீரை லாரியில் எடுத்து வந்து ஏரியில் கொட்டி, தண்ணீரின் அளவை உயர்த்தி விட்டனர்.
மற்றொரு பக்கம், இதன் இயற்கை தன்மையை பேணி, பராமரிப்பது எப்படி என ஆராய, ஒரு விஞ்ஞானியையும் நியமித்துள்ளனர்.
—ஜோல்னாபையன்.

