சந்திரனில் எடுக்கப்பட்ட கற்களை, "லபக்'கிய அமெரிக்க பெண்மணி!
சந்திரனில் எடுக்கப்பட்ட கற்களை, "லபக்'கிய அமெரிக்க பெண்மணி!
PUBLISHED ON : ஜூலை 10, 2011

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர்கள், பல முறை சந்திரனுக்கு சென்று ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். அவர்கள், அங்கிருந்து திரும்பும் போது, சந்திரனில் காணப்படும் பாறை, கற்கள் போன்ற பொருட்களை எடுத்து வருவது வழக்கம்.
இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள், அமெரிக்காவின் கருவூலக சொத்துக்களாக கருதப்பட்டு, அங்குள்ள அருங்காட்சியகங்கள், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள் சிலவற்றுக்கும், இந்த கற்கள், பரிசாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கற்களை திருடுவதோ, விற்பனை செய்வதோ, அமெரிக்காவை பொறுத்தவரை பெரும் குற்றமாக கருதப்படும்.
இவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கற்களில் சிலவற்றை, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்மணி சமீபத்தில், எங்கிருந்தோ திருடி விட்டார். அதோடு மட்டுமல்லாமல், அந்த கற்களை விற்பதற்கு முயற்சித்த போது, கையும், களவுமாக, போலீசாரிடம் வகையாக சிக்கிக் கொண்டார். நாசா அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த பெண்மணியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கற்கள், உண்மையிலேயே, சந்திரனில் இருந்து எடுக்கப்பட்டவையா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். அதிகபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் இந்த கற்கள், திருடு போவது என்பது, நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது...' என்றார்.
— ஜோல்னா பையன்.
