
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால், ஒரு நாட்டு மக்கள் அங்கே வாழ்வது மிக மிக கடினம். இன்று நேற்றல்ல... பூமி தோன்றிய காலத்தில் இருந்தே ஒவ்வொரு கடைசி மூன்று யுகங்களிலும், சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் தான் இருந்து வருகிறது.
நம் பூமியை, பிருத்வி என்பர். பிருத்வி என்றால், மண் என்றும் பொருளுண்டு. இந்த மண்ணை ஆண்ட மன்னன் ஒருவன் பெயரால் தான், பிருத்வி என்ற சொல்லே ஏற்பட்டது.
இந்த பூமி, ஒவ்வொரு முறையும் கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைச் சந்திக்கிறது. கிருத யுகம், 17.௨௮ லட்சம் ஆண்டுகள். திரேதா யுகம், 12.௯௬ லட்சம் ஆண்டுகள். துவாபர யுகம், 8.௬௪ லட்சம் ஆண்டுகள். கலியுகம், 4.௩௨ லட்சம் ஆண்டுகள். மொத்தம், 43.௨௦ லட்சம் ஆண்டுகள்.
முதல் யுகத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையின்றி, அமைதியாக வாழ்வர், மக்கள். நியாய தர்மத்துக்கு கட்டுப்படுவர். அடுத்த யுகங்களில் கொஞ்சம் கொஞ்மாக தவறுகளின் எண்ணிக்கை கூடும். கலியுகத்தில் கடவுளைக் கூட மதிக்க மாட்டார்கள். சட்டம் - ஒழுங்கு கெடும்.
ஒரு சமயம், திரேதா யுகத்திலேயே தவறுகள் நடக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்த பிரம்மா, குற்ற செயல்களுக்கு தண்டனை கொடுக்க முடிவெடுத்தார். இதற்காக லட்சம் ஷரத்துக்களைக் கொண்ட, தண்டனை தொகுப்பை வரையறுத்தார். இதற்கு தண்ட நுால் என, பெயரிடப்பட்டது. தண்டனைக்குப் பயந்து, குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தது.
அடுத்தடுத்த யுகங்களில் வந்த மன்னர்கள், தண்டனைகளின் அளவை குறைத்தனர். கடைசியாக, அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், தண்டனைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக சுருக்கி விட்டார்.
இதையடுத்து குற்றங்கள் ஏராளமாக நடந்தன. இந்த விஷயத்தை தேவர்களும், முனிவர்களும் திருமாலின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
தன் மனதில் இருந்து, விரஜன் என்பவனை படைத்தார், திருமால். அவனை பூமியின் தலைவன் ஆக்கி, குற்றங்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தினார். அவனது வம்சாவழியில் வந்த பிருது என்ற மன்னன், இந்த சட்டங்களை கடுமையாக அமல் படுத்தினான்.
இதனால் சட்டம் - ஒழுங்கு சீரானது. தப்பு செய்தவர்கள் பயந்து அலறினர். உலகமெங்கும் அமைதி நிலவியது. இந்த அமைதியான பூமிக்கு, அந்த மன்னனின் பெயரால், பிருத்வி என, பெயர் சூட்டினர்.
அது மட்டுமல்ல, பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் வரிசையில் பிருத்வி ஆகிய நிலத்தையும் சேர்த்து, ஒவ்வொன்றுக்கும் கோவில்கள் எழுப்பினர்.
பிருத்வி கோவில்கள் இரண்டும், தமிழகத்தில் இருப்பது நமக்கு பெருமை. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், திருவாரூர் புற்றிடங்கொண்டார் (தியாகராஜர்) கோவில்கள் பிருத்வி தலங்களாக உள்ளன.
இந்த தலங்களிலுள்ள சிவனிடம், இந்த கலியுகத்திலும் சட்டம் - ஒழுங்கு அமைதியாக இருக்க வேண்டுவோம்.
தி. செல்லப்பா