
இளைஞர்களின் புது முயற்சி!
நான், கிராமத்தில் செயல்படும் அரசு துறை ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். அந்த கிராமத்தில், சுமார், 2000 வீடுகள் இருக்கும்.
கிராமத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள், ராணுவம், காவல்துறை மற்றும் பிற அரசு பணிகளில் பல்வேறு ஊர்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வங்கி கணக்கு துவங்கி, மாதா மாதம், 500 ரூபாய் வீதம், தங்களது ஊதியத்திலிருந்து, சேமித்து வருகின்றனர்.
இந்த பணத்தைக் கொண்டு, கிராமத்தில் நன்றாக படிக்கக் கூடிய ஏழை மாணவ - மாணவியரின் கல்லுாரி கட்டணத்தை செலுத்துகின்றனர். படித்து முடித்து, ராணுவம் மற்றும் காவல்துறையில் சேரத் துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், உடற்பயிற்சி கூடம் ஒன்றை அமைத்துள்ளனர்.
விவசாயிகளுக்கு, வட்டி இல்லாமல் கடன் வழங்குகின்றனர். மேலும், ஊரில் உள்ள நுாலகத்திற்கு தேவையான அலமாரிகள், வாசகர்கள் வசதியாக உட்கார்ந்து படிக்க இருக்கைகளும் வழங்கி உள்ளனர். இன்னும், பல உதவிகளையும் தங்கள் கிராமத்திற்கு செய்து வருகின்றனர்.
இதுபோல, நல்ல நிலையில் இருக்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தாங்கள் பிறந்த கிராமத்துக்கு தேவையான உதவிகளை செய்தால், நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் வளர்ச்சி அடையுமே!
க. சரவணகுமார், திருநெல்வேலி.
அவசியமான சேவை!
வார விடுமுறையில், உழவர் சந்தைக்கு, காய்கறிகள் வாங்க சென்றிருந்தேன். அங்கு, 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், காய்கறி விற்பவர்களிடமிருந்து அழுக்கான, கிழிந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி, தன் பர்சிலிருந்து வேறு புது ரூபாய்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.
காய்கறிகள் விற்பவர்கள் எல்லாரும், அந்த நபருடன், புன்னகையுடனும், நட்புடனும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அவரிடம் விசாரித்தேன்.
'தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், மேனேஜராக இருக்கிறேன். விடுமுறை நாட்களில் மார்க்கெட்டுக்கு வந்து, காய்கறிகள் விற்பவர்களிடமிருந்து கிழிந்த, அழுக்கான ரூபாய்களை வாங்கி, அதே இடத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை தருகிறேன்.
'கிழிந்த, அழுக்கான ரூபாய்களை, வங்கியில் மாற்றிக் கொள்ள, ரிசர்வ் வங்கி வழி செய்தும், சிலர், இதுபோன்ற பொது இடங்களில் விபரம் தெரியாத ஏழை, எளியவர்களிடம் கொடுத்துச் சென்று விடுகின்றனர்.
'இதற்காக, என் மேலதிகாரியிடம் அனுமதி பெற்று, விடுமுறை நாட்களில், இதை பொது சேவையாக செய்து வருகிறேன்...' என்றார்.
சேவை மனப்பான்மை உள்ள வங்கி ஊழியர்களும், மொபைல் பேங்கிங் மூலமாகவாவது அழுக்கான, கிழிந்த ரூபாய்களை வாங்கி, புதிதாக கொடுத்தால், அனைவரிடமும் நல்ல ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்குமே!
- சோ. குமார. நாகேந்திரன், மதுரை.
புத்தாண்டு சபதத்தை நிறைவேற்ற...
ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் ஜனவரியில், நான் ஜனரஞ்சகமாக எடுக்கும் சபதம், பிப்ரவரியில் பின் தங்கி, மார்ச்சில் மங்கி, ஏப்ரலில் எங்கோ போய் விடுவதாக, என் நண்பரிடம் சொன்னேன்.
'என் புத்தாண்டு சபதம் அனைத்தும், ஒவ்வொரு ஆண்டும் நிறைவேறி விடும்...' என்றார்.
'எப்படி...' என்று கேட்டபோது, 'பனிரெண்டு மாதங்களையும் நான்காக, அதாவது, மூன்று மூன்று மாதங்களாகப் பிரித்துக் கொள்வேன். ஒரு ஆண்டில் நான் முடிக்க வேண்டிய வேலையையும் நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்வேன்.
'அதன்படி முதல் மூன்று மாதத்தில் முடிக்க வேண்டிய வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முடிப்பேன். அது முடிந்ததும், அடுத்தடுத்து வேலைகள் சுலபமாக நடந்து, அந்த ஆண்டிற்குள் என் சபதம் நிறைவேறி விடும்...' என்றார்.
இந்த பாணியை நானும் பின்பற்ற முடிவெடுத்து விட்டேன். நீங்கள்?
ஆர்.பி. பொன் சரவணகுரு, ராஜபாளையம்.