PUBLISHED ON : டிச 25, 2022

கடந்த, 1974ம் ஆண்டு, ஜெய்சங்கருக்கும், மாடர்ன் தியேட்டர்சுக்குமான தொழில் உறவு முடிவுக்கு வந்த துரதிர்ஷ்டவசமான ஆண்டு.
சரியான கதைக்குழு அமையாததால், தொடர்ந்து வெற்றிகரமான படங்களை தர முடியாமல் தடுமாறிய மாடர்ன் தியேட்டர்ஸ், சில ஆண்டுகளில் முற்றிலும் தன் திரைப் பயணத்தை நிறுத்திக் கொண்டது.
தமிழ்த் திரையுலகத்தையே சோகம் கொள்ள வைத்த இந்த நிகழ்வு, ஜெய்சங்கரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது. அந்நிறுவனத்தின் வீழ்ச்சியை தடுக்க, பல வழிகளில் அவர் முயன்றார்.
மிகப்பெரிய நிறுவனமான, மாடர்ன் தியேட்டர்சின் வருமானம் பாதிப்பது, தொழிலாளர்கள் வாழ்வை பாதிக்கும் என, கவலைப்பட்டார். படம் தயாரிக்காத சமயங்களில், ஸ்டுடியோவை வாடகைக்கு விடும் யோசனையை ராமசுந்தரத்துக்கு வழங்கினார், ஜெய்.
ஸ்டுடியோவை வாடகைக்கு விடுவதை கவுரவக் குறைவாக கருதி, முதலில் ஏற்க மறுத்த, ராமசுந்தரம், பிறகு ஏற்றார்.
தன் யோசனையை உதட்டளவில் நிறுத்தி விடாமல், தன் படங்களின் பெரும்பாலான படப்பிடிப்புகளை அங்கு நடத்தினார். தனக்கு தெரிந்த தயாரிப்பாளர் நண்பர்களிடமும் மாடர்ன் தியேட்டர்சை பயன்படுத்திக் கொள்ள பரிந்துரைத்தார், ஜெய்.
இதன் மூலம், பரஸ்பரம் இரு தரப்பும் லாபமடையச் செய்தார்; தானே முன்னின்று வாடகை பேசியும் விட்டார். இதனால், படம் எடுக்காத போதும், ஸ்டுடியோ, 'பிசி'யாகவே இயங்கி வந்தது. படம் தயாரிக்காததால் ஏற்பட்ட வருமான இழப்பை, இது ஓரளவு சரிகட்டியதால், தொழிலாளர்கள் வேலை இழப்பிலிருந்து தப்பினர்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய, மயங்குகிறாள் ஒரு மாது திரைப்படம் முழுக்க, மாடர்ன் தியேட்டர்சில் எடுக்கப்பட்டது.
நடித்தோம், சம்பளம் பெற்றோம் என சிந்திக்காமல், தன்னை வளர்த்த நிறுவனம் நொடிந்த போது, ஆதரவாய் கை கொடுத்த ஜெய்சங்கரின் நல்ல உள்ளத்துக்கு ஈடு ஏது?
ஆக., 9, 1974ல் அவரது, 100வது படமான, இதயம் பார்க்கிறது வெளியானது. அந்த ஆண்டு, அதிக படங்களில் நடித்த கதாநாயகன் என்ற சாதனையும் அவருடையதே.
தன், 100வது படம், வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் பாணியில் இல்லாமல், புது முயற்சியாக இருக்க வேண்டும் என விரும்பினார், ஜெய். படத்தை தயாரிக்கும் வாய்ப்பை, தன் நெருங்கிய நான்கு நண்பர்களுக்கு வழங்கினார். எம்.ஜி.ஆரின் வெற்றிப் படமான, இதயக்கனி படத்தை இயக்கிய, ஏ.ஜெகந்நாதனை நியமித்தார்.
பார்வையற்றவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், கண் பார்வையற்றவராக நடித்திருந்தார், ஜெய்சங்கர்.
பெரிய நடிகர்களே நடிக்கத் தயங்குகிற வேடத்தை துணிந்து எடுத்ததோடு, படம் முழுவதும் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப் படுத்தினார். படம், ரசிகர்களை ஏமாற்றவில்லை. தங்கள் ஆதர்ச நாயகரின் இத்தகைய வித்தியாசமான முயற்சியை வரவேற்று, ஆதரவளித்தனர்.
'ஜேம்ஸ்பாண்ட் நடிகரா இப்படி தன்னை வருத்தி நடித்திருக்கிறார்...' என, பாராட்டு மழை. 'ஹைகிளாஸ் படம்...' என, பாராட்டப்பட்டு, ஜெய்சங்கரின் மாறுபட்ட நடிப்புக்கு இன்றும் சாட்சியாக இருக்கிறது.
திரைப்படத்தின் வெற்றியில், கதாநாயகன் - நாயகிக்கு முக்கிய பங்கு உண்டு. துரதிர்ஷ்டவசமாக, வெற்றியின் போது, நாயகனை கொண்டாடும் திரையுலகம், நாயகியை கை கழுவி விடும். அரிதாகத்தான் கதாநாயகியரை பற்றி பேசியிருப்பர், கதாநாயகர்கள். அதிலும் வித்தியாசமானவர் தான், ஜெய்சங்கர்.
ஏறக்குறைய, 68 நாயகியருடன் நடித்துள்ள ஜெய்சங்கர், அவர்களில் சிலர் குறித்து வெவ்வேறு காலங்களில் பத்திரிகைகளில் பேட்டியளித்திருக்கிறார். வெற்றியை பகிர்ந்து கொள்ள விரும்பாத ஆணாதிக்க திரையுலகில், ஜெய்சங்கரின் இந்த பண்பும் பாராட்டத்தக்கது.
பத்திரிகை பேட்டிகள் மற்றும் மேடைப் பேச்சுகளில், வழக்கமான சினிமாவை தாண்டி, அரசியல் கருத்துக்களும் அவர் பேச்சில் எட்டிப் பார்க்க துவங்கியிருந்ததை, ரசிகர்களும் மற்ற தலைவர்களும் உற்றுக் கவனிக்கத் தவறவில்லை.
திரையுலகில் துவக்க காலத்திலிருந்தே அவர், எந்தக் கட்சியின் அனுதாபியாகவும் தன்னை காட்டிக் கொண்டதில்லை. கட்சிகளின் தலைவர்களிடத்தில் நெருக்கம் கொண்டதில்லை.
ஏற்கனவே, அரசியல் ரீதியாக, பல நடிகர்கள் பிரிந்து, மேடையில் சவால் விட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தாமரை இலை தண்ணீர் போல் எதிலும் ஒட்டாமல் கிடந்தார்.
ஆனால்...
- தொடரும்.இனியன் கிருபாகரன்
1973ல், ஜெய்சங்கருக்கு, கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது, தமிழக அரசு. சினிமா வரலாற்றில் அறிமுகமான, ஒன்பது ஆண்டுகளில், கதாநாயகனாகவே, 100 படங்களை எட்டிய முதல் நடிகர், ஜெய்சங்கர் தான்.
ஜெய்யின் இன்னொரு திரையுலக சாதனையையும் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பிறகு, மூன்று தலைமுறை நாயகியரான ஜமுனா, ஜெயலலிதா, ஸ்ரீதேவியுடன், கதாநாயகனாக நடித்த நடிகர், அவர் ஒருவர் தான்.