
பா - கே
நான், லென்ஸ் மாமா, மூத்த செய்தியாளர் ஆகியோர், வேலை விஷயமாக, சேலத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். மாமா, காரை ஓட்டினார்.
வழியில், பை - பாசில் இருந்த ஒரு டிபன் கடையில் காரை நிறுத்திய மாமா, 'மணி... இங்கு டீயும், மசால் வடையும் சூப்பரா இருக்கும். சாப்பிட்டுட்டு போகலாம்...' என்று கூறி, இறங்கினார்.
மறுத்தால், மாமா கோபித்துக் கொள்வாரே என்று, அவரை பின் தொடர்ந்து நாங்களும் இறங்கினோம்.
கடை வாசலில் இருந்த பெஞ்சில் அமர்ந்தோம். எதிரில் இருந்த பெஞ்சில், பெரியவர் ஒருவர் பேப்பர் படித்தபடி, டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, இரு இளைஞர்கள், சைக்கிளில் வேகமாக அவர் மீது மோதுவது போல் வந்து, சைக்கிளை ஸ்டேண்டு போட்டு நிறுத்தி, இரண்டு டீக்கு, 'ஆர்டர்' கொடுத்தனர். 'புத்தாண்டு வாழ்த்துகள் பெரிசு...' என்று சத்தமாக கூவ, கடும் கோபத்துக்கு ஆளானார், அந்த பெரியவர்.
'போடா போக்கத்தவனே... வருஷம் பிறக்க இன்னும் ஒரு வாரம் இருக்கு. இப்ப எதுக்கு முந்திரி கொட்ட மாதிரி வாழ்த்து சொல்லிட்டு இருக்கிற. புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டதால, இந்த வருஷம் பூரா நாம சந்தோஷமா இருந்துட போறோமா அல்லது நம் வாழ்நாளில் ஒரு வருஷம் கூடிட போகுதா...
'நம் ஆயுளில் ஒரு வருஷம் குறைய தான் போகிறது. அப்படி இருக்கறப்ப, என்னமோ வருஷா வருஷம் வளர்ந்துட்டு இருக்கிற மாதிரி வாழ்த்து சொல்ல வந்துட்டானுங்க. இப்படி வாழ்த்து சொல்றது, ஒரு சம்பிரதாயமா போயிடுச்சு. நாம எப்படி வரும் வருஷத்தை பயனுள்ளதாக்கி கொள்ள போகிறோம் என்று யோசித்தாலாவது பரவாயில்லை.
'அப்பா - அம்மாவுக்கு உபயோகமா இருக்கிறோமா, ஊருக்கு நாலு பேருக்கு நல்லது செய்தோமான்னு இருங்கடா. சும்மா ஊர் சுத்திட்டு, சினிமா பார்த்துட்டு கெட்டு அலையாதீங்க. அதுக்கு, இதயம் என்ற பூட்டை, மனம் என்ற சாவியால் திறக்கணும்...' என்றார், அந்த பெரியவர்.
'எங்களுக்கு பூட்டையெல்லாம் சாவி போட்டு திறக்கிற பழக்கமே இல்ல, பெரிசு... சிறு கம்பி போட்டு தான் திறப்போம்...' என்று அவ்விருவரும் கூறியதும், நாங்கள் வாய் விட்டு சிரித்து விட்டோம்.
அந்த பெரியவரோ, தலையில் அடித்தபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். காரில் ஏறி, நாங்களும் கிளம்பினோம்.
புத்தாண்டு செய்தி வாங்க, ஒரு வி.ஐ.பி.,யை சந்தித்தபோது, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூற ஆரம்பித்தார், மூத்த செய்தி ஆசிரியர்:
புத்தாண்டு வாழ்த்து செய்தி வேண்டி, அந்த வி.ஐ.பி.,யை சந்தித்து, விஷயத்தை கூறியதும், என்னை வரவேற்பு அறையில் அமர செய்து, உள்ளே சென்று ஒரு பேப்பரை எடுத்து வந்து, படித்து பார்க்க கொடுத்தார்.
நான் படித்ததுமே, இது கடந்த ஆண்டு கொடுத்த அதே செய்தி தான் என்று தெரிந்து, அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், 'வேறு என்னத்தை புதுசா சொல்றதுக்கு இருக்கு. போன வருட கஷ்டமெல்லாம் கடந்து போகட்டும். பொறக்க இருக்கிற வருஷம் மக்களுக்கு எல்லா நலன்களும் வாரி வழங்கட்டும் என்று தான், சொல்ல வேண்டியுள்ளது.
'கஷ்டத்தை, வருஷமா நமக்கு கொடுக்கிறது. நமக்கு நாமே ஏற்படுத்திக்கிறது தான் கஷ்டங்களும், பிரச்னைகளும். 'கஷ்டம் வராம, என்ன செய்வதுன்னு யோசிங்க...' என்று, நான் மக்களிடம் சொன்னா, 'நீ பதவியில இருக்கற வரைக்கும், எங்களுக்கு கஷ்டம்தான்'னு சொல்லிடுவாங்களே... அதுதான் பட்டும் படாம வாழ்த்து செய்தி கொடுத்துட்டு இருக்கிறேன்...' என்றார்.
இதைக் கேட்டு நான் தான், 'மெர்சல்' ஆயிட்டேன்.
- இவ்வாறு சொல்லி முடித்தார், மூத்த செய்தி ஆசிரியர். சிரிப்பலையில், கார் குலுங்கியது.
இவ்வளவுக்கு பிறகும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வேன்னா நினைக்கிறீங்க... ஹூ ஹூம்... ஆல் தி பெஸ்ட்!
ப
அடுத்தவங்க மனசு புண் படாம நடந்துக்கிறதுங்கிறது, ஒரு தனிக் கலை. இதைவிட பெரிய கலை ஒண்ணு இருக்கு. அது என்ன தெரியுமா?
ஒருத்தர் ஒரு தவறு செஞ்சுடறார். அவர் செஞ்ச தப்பை, அவருக்கு நாசூக்கா சுட்டிக் காட்டணும். அதே நேரத்துல, அவங்களுக்கு நம்ம மேல கோபமோ, வருத்தமோ வரக்கூடாது.
சிலருக்கு இது கை வந்த கலையா இருந்திருக்கு. அவங்கள்லாம் வாழ்க்கையில வெற்றிகரமா இருந்திருக்காங்க.
'சார்லஸ் ஸ்வாப்'ன்னு ஒருத்தர். பல இரும்பு ஆலைகளுக்கு, சொந்தக்காரர். சிறந்த நிர்வாகின்னு பேரு எடுத்தவர். பகல் உணவு சமயத்துல, தொழிற்சாலையை சுற்றிப் பார்த்துட்டு வரலாம்ன்னு புறப்பட்டார்.
ஒவ்வொரு இடமா பார்த்தபடி போயிகிட்டே இருந்தார். ஒரு இடத்துல, தொழிலாளர்கள் சிலர், இயந்திரங்களுக்கு பக்கத்துல நின்னுகிட்டு புகைப் பிடிச்சிட்டிருந்தாங்க. அவங்க தலைக்கு மேல ஒரு அறிவிப்பு பலகை. அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா?
'இங்கே புகை பிடிக்காதீர்கள்'ன்னு எழுதியிருந்தது. அந்த இடத்துல செய்யக் கூடாத ஒரு காரியத்தை அவங்க செஞ்சுகிட்டிருந்தாங்க.
இதைப் பார்த்தார், ஆலை அதிபர்.
அவர் கொஞ்சம் கூட கோபப்படல, கத்தல. என்ன பண்ணினார் தெரியுமா?
தன் பையில இருந்த விலை உயர்ந்த சுருட்டுப் பெட்டியை எடுத்து பிரிச்சார். ரொம்ப உயர்ந்த ரக சுருட்டு.
அங்கே இருந்த தொழிலாளிகள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒண்ணு கொடுத்து, 'இது ரொம்ப அருமையான சுருட்டு. பிடிச்சு பாருங்க, அப்புறம் சொல்லுங்க. ஆனா ஒண்ணு, இதை நீங்க இங்கேயே புகைக்க வேணாம். வெளியே போய் புகைச்சுப் பாருங்க'ன்னு சொல்லிட்டு, அந்த இடத்தை விட்டு போய் விட்டார்.
அதுக்கப்புறம் அவங்க அந்த தப்பை செய்யலையாம்!
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.