sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தலைவன்!

/

தலைவன்!

தலைவன்!

தலைவன்!


PUBLISHED ON : ஜூன் 12, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 12, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாளை புதிய புராஜெக்ட் மேனேஜர் வரப் போறார் என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு மாதச் சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் என்பதை, எச்.ஆரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம்.

'வரவிருக்கும் புதிய புராஜெக்ட் மேனேஜர், தன் புதிய யோசனைகளால் சரியும் நம் நிறுவனத்தின், 'இமேஜை' தூக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கு; அவருக்கு, உங்களோட முழு ஒத்துழைப்பை தரணும்...' என்று, ஒரு வாரத்திற்கு முன்பே, நிர்வாக இயக்குனர் எங்களிடம் கூறியிருந்தார்.

எங்கள் என்றால் நான், சொர்ணலதா, ராகுல் மற்றும் பிரகாஷ். இதைக் கூறிய போது, நிர்வாக இயக்குனரின் முகத்தில் மர்ம புன்னகை!

அடுத்தநாள், அப்புன்னகைக்கான அர்த்தம் புரிந்தது. எங்கள் அணிக்கு, தலைமை பொறுப்பை ஏற்க இருப்பது ரவிகிரண் என்ற தகவலை அறிந்ததும் அதிர்ச்சியில் திணறி விட்டோம்.

இதே நிறுவனத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தவன் தான் ரவிகிரண். எங்களை விட ஜூனியர்; ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இங்கு வேலையை விட்டு விட்டு, வேறொரு நிறுவனத்தில் சேர்ந்தான். இத்தனைக்கும் அங்கும் இதே ஊதியம், இதே போன்ற பதவி தான்!

இப்போது அவன் எங்கள் நிறுவனத்தில் எங்களுக்கே லீடராக வரவிருக்கிறான்.

''பாக்காமல் கீ போர்ட்டை கூட கையாளத் தெரியாது அவனுக்கு...'' என்று அங்கலாய்த்தான், பிரகாஷ்.

''கிறுக்கு பிடிச்ச மாதிரி பேசுவான்,'' என்றாள் சொர்ணலதா.

''டார்கெட்டை எப்படி அடையணும்ங்கிற வழிமுறையை எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும், சரியா புரிஞ்சிக்க மாட்டான்,'' என்றான் ராகுல்.

'அவனை எப்படி இங்கே மறுபடியும் சேர்த்துக் கொண்டனர்...' என்று மனதுக்குள் குமுறினோம்.

மறுநாள், கையில் பூங்கொத்துடன் காத்திருந்த நிர்வாக இயக்குனர், ''நம்மோடு மீண்டும் பணியாற்ற போகிற ரவிகிரணுக்கு, உங்களில் யார் இந்த பூங்கொத்தை கொடுக்கப் போறீங்க...'' என்று கேட்டார்.

நால்வரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டோம். அப்பார்வையில் மறுப்பு இருந்ததை, நிர்வாக இயக்குனர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

''தீபக்... நீங்களே அவருக்கு பூங்கொத்தை கொடுங்க,'' என்று என்னிடம் கொடுத்தார்.

வெறுப்பாக இருந்தது; கூடவே, 'எப்படி இவனுக்கு கீழே வேலை செய்யப் போறேன்...' என்று தர்மசங்கடமாகவும் இருந்தது.

முன்பு எங்களுடன் பணியாற்றிய போது, பலமுறை அவனுக்கும், எனக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. நாங்கள் எல்லாம் வேலை நேரம் முடிந்த பின்னரும், வேலை செய்து கொண்டிருப்போம். அவன் சரியாக மாலை, 5:30 மணிக்கு கிளம்பி விடுவான். குடும்பச் சுமை எதுவும் கிடையாது. டென்னிஸ் விளையாடப் போவான்; எனக்கும் நீச்சலில் ஈடுபாடு உண்டு. ஆனால், இந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தபின், எதற்கும் நேரமில்லாமல் போய் விட்டது.

மேலிடத்தில் ரவிகிரணைப் பற்றி மூன்று முறை புகார் செய்துள்ளேன். இரு முறை, நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளான். ஆனால், இப்போது நடப்பது நேரெதிராக அல்லவா நடக்கிறது.

'நம்ம தலைமை நிர்வாக அதிகாரியின் மகளுக்கு திருமணம் நிச்சயமாச்சுன்னு சொன்னாங்களே... ஒரு வேளை இந்த ரவிகிரண் தான் மாப்பிள்ளையோ...' என்ற சந்தேகத்தை எழுப்பினான் ராகுல்; அப்படியெல்லாம் இல்லை என்பதும் தெரிந்து விட்டது.

ரவிகிரண் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், அவன் கை குலுக்கி, வரவேற்றார், நிர்வாக இயக்குனர்.

அவன் முகத்தில், கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருக்கும் என எதிர்பார்த்தோம். தான் வேலையை விட்டுப் போன நிறுவனத்துக்கு, மீண்டும் அதிக சம்பளத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோமே எனும் சங்கட உணர்ச்சி, துளியும் இல்லை.

நான் கொடுத்த பூங்கொத்தை வாங்கி பக்கத்தில் வைத்தான். நிர்வாக இயக்குனரை பார்த்து தலையசைத்தான்; 'அப்ப நீங்க கிளம்பலாமே...' என்கிற பாவம், அதில் புலப்பட்டது. சிறிதும் அவமானமோ, கோபமோ படாமல் நிர்வாக இயக்குனர் அங்கிருந்து கிளம்பியது, எங்களுக்கு வியப்பாக இருந்தது.

''மறுபடியும் உன்னை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி,'' என்றபடி கைகுலுக்கினோம். வேறு வழி!

தலையை மட்டும் அசைத்து, புதிய புராஜெக்ட் பற்றி பேச துவங்கினான். எனக்குள் கட்டுக்கடங்காத கோபம்; என்ன ஒரு திமிர்!

இவனுக்கு கீழே வேலை செய்யப் போவதே கசப்பை தந்தது. அன்று மதிய உணவு கூட, சரியாக இறங்கவில்லை. வழக்கத்தை விட, இரு கோப்பை காபிகளை அதிகமாக குடித்தோம்.

சரியாக மாலை, 5:30 மணிக்கு கிளம்பி விட்டான் ரவிகிரண். நாங்களும் கிளம்ப துவங்கினோம். 'கூடுதல் நேரம் உட்கார்ந்து வேலை செய்ததற்கு என்ன அங்கீகாரம் கிடைத்து விட்டது. எதற்காக நேர்மையாகவும், அதிகப்படியான நேரமும் இந்த நிறுவனத்துக்கு உழைக்க வேண்டும்...' மனதுக்குள் பொருமினேன்.

அப்போது, அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த நிர்வாக இயக்குனர், எங்கள் அறைக்குள் எட்டிப் பார்த்து, ''எப்படி இருக்கிறார் உங்க புதிய மேனேஜர்?'' என்று கேட்டார்.

இதை, பிரகாஷால் தாங்க முடியவில்லை. ''பிரமாதமாக இருக்கார்; நாங்க தான் முட்டாள்கள்; அதனால்தானே, விசுவாசம் இல்லாமல் ஓடிப் போன ஒருத்தனுக்கு, எங்கள விட இரு மடங்கு சம்பளம் கொடுத்து, மீண்டும் அழைச்சுட்டு வந்திருக்கீங்க,'' என்றான் எரிச்சலுடன்!

சட்டென நின்ற நிர்வாக இயக்குனர், ''எல்லாரும் என்னோட கேபினுக்கு வாங்க; ரெண்டு நிமிஷம் உங்க கூட பேசணும்,'' என்றார்.

கேபினுக்குள் சென்று அமர்ந்தோம்; காபி வரவழைத்தார்.

''ரவிகிரண் தனித்துவம் மிக்கவன்; அற்புதமான யோசனைகளை கொண்டவன். அவன் நமக்கு கிடைத்திருக்கும் சொத்து. அதை நீங்க உணரணும்,'' என்றார்.

அலட்சியமாக சிரித்தோம். ஒருவருக்கொருவர் கேலியாக பார்த்துக் கொண்டோம். நிர்வாக இயக்குனர் புரிந்து கொண்டார்.

''இங்கே அவன் வேலையில் இருக்கும் போது இல்லாத ஞானோதயம் இப்போது எப்படி உண்டானது என்கிறீர்களா... இந்த வேலையை விட்டு, போட்டி நிறுவனத்தில் அவன் சேருவதாக முடிவு எடுத்து, ராஜினாமாவை என்னிடம் கொடுத்த போது, என்னிடம் அவன் சொன்னது இதுதான்... 'இன்னும் ஒரே வருஷத்துல இந்நிறுவனத்துக்கே மறுபடி வருவேன். நானாக வர மாட்டேன்; நீங்களாகவே என்னை கூப்பிடுவீங்க. அங்கு எனக்கு கிடைக்கும் சம்பளத்தைப் போல, இரு மடங்கு அதிகம் தர தயாராக இருப்பீங்க...' என்றான். எனக்கு அப்போது விளங்கவில்லை. ஆனால், அவன் சொன்னதை நடத்தி காட்டி விட்டான்,'' என்றவர், காபியை பருக துவங்கினார்.

'இதென்ன வேடிக்கை... ஏதோ சவால் விட்டு போயிருக்கான். இவரும் அதற்கு எதிரான சவால் விடாமல், வளைந்து கொடுத்ததை, பெருமையாக பேசுகிறாரே...' என நினைத்தேன்.

நிர்வாக இயக்குனர் தொடர்ந்தார்...

''கீழ் மட்டத்தில் வேலை செய்வதை அவன் விரும்பலை; அவனைப் பொறுத்தவரை, அதிக வேலை செய்வதைவிட, 'க்ரியேடிவாக' சிந்தித்து, அதற்கு தீர்வு காண்பது தான் சிறந்த வழின்னு நினைக்குறான்; நம் போட்டி நிறுவனத்தில் சேர்ந்தவன், இந்த ஒரு வருஷத்துல, பல மேம்பாடுகளை செய்துள்ளான். அதனாலே அங்க அவனுக்கு ஏகப்பட்ட பாராட்டு,'' என்றவர், அதோடு நிறுத்திக் கொள்ளாமல், ''நாமெல்லாம் ஆற்றைக் கடக்க, கஷ்டப்பட்டு ஒரு படகை தயார் செய்தோம்; ஆனால், அவனோ, எப்படியும் நதிக்கு சற்று தள்ளியாவது பாலம் இருக்கும் என்பதை அனுமானித்து, அப்பாலத்தை பயன்படுத்திக் கொண்டான். நாமோ, படகை தயாரிப்பதில், அவன் உதவவில்லை என்று, அவனை குறை கூறினோம்,'' என்றார்.

நாங்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றோம். ஒப்புக்கு, 'நாம்' என்று அவர் கூறினாலும், அவர், எங்களை தான் விமர்சிக்கிறார் என்பது புரிந்தது.

சொர்ணலதாவால் தாங்கிக் கொள்ள முடியாமல், ''அவ்வளவு ஐடியாக்காரன் என்றால், நம் நிறுவனத்தில் வேலை செய்த போதே, அந்த புதுமையான ஐடியாக்களை பகிர்ந்து கொண்டிருக்கலாமே,'' என்றாள்.

''தன்னுடைய சீனியர்கள், இங்கே தன் கருத்துகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க மாட்டார்கள் என்கிற எண்ணம், அவனுக்கு இருந்திருக்கலாம்,'' என்றார் எங்களை உற்றுப் பார்த்தபடி!

நாங்கள் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். பின், பிரகாஷ் சீற்றத்துடன், ''போட்டி நிறுவனத்தில் இவனுக்கு அவ்வளவு அங்கீகாரம் என்றால், அங்கேயே இருந்திருக்கலாமே...'' என்றான்.

சில நொடிகள் யோசித்த நிர்வாக இயக்குனர், பின், ''யார் கண்டது... 'இன்னும் ஒரே வருஷத்துல இங்கேயே, மறுபடியும் சேருவேன். ஜெனரல் மேனேஜராக பத்து மடங்கு சம்பளத்தில்...' என்று, அந்த நிறுவனத்தில், சவால் விட்டு வந்திருக்கிறானோ என்னவோ...'' என்றார் புன்னகையுடன்!

அருண் சரண்யா






      Dinamalar
      Follow us