PUBLISHED ON : ஜூன் 12, 2016

பாட்மின்டன் - இறகுபந்து ஆட்டத்தின் போது, 'சக ஆட்டக்காரர் சரிவர ஆடாததால் தோற்றுப் போனோம் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதை, நான் ஏற்கவே மாட்டேன். அவர் சரியில்லை என்று தெரிந்ததுமே, நீங்கள், அவரது பலவீனங்களை சரிக்கட்டி, கூடுதல் திறமைகளை வெளிப்படுத்தி ஆட வேண்டியது, உங்கள் வேலை...' என்பார், என் பயிற்சியாளர் ஜெய்சங்கர்.
வாழ்க்கையிலும் இப்படித்தான். 'அப்பா என்னை படிக்க வைக்கவில்லை; அதனால், இப்படி ஆகிவிட்டேன். பணத்தையெல்லாம் ஆடித் தீர்த்து விட்டார்; அதனால், எங்கள் நிலைமை இப்படி ஆகிவிட்டது. எங்கள் வீட்டை, நிலத்தை குறைந்த விலைக்கு விற்று விட்டார். இன்றைக்கு இருந்தால், அது எத்தனை கோடி பெறும் தெரியுமா, ஏழ்மை தொடர்ந்திருக்குமா...' என்றெல்லாம் புலம்புகிற பிள்ளைகளைப் பார்க்கிறோம்.
ஒரு மகன், தன், 40 வயதில், தந்தையைப் பார்த்து, 'என்னை அப்பவே காதைப் பிடித்து திருகி, கன்னத்தில ரெண்டு அரை குடுத்து, முதுகில நாலு போடு போட்டு, 'தரதர'ன்னு இழுத்து பள்ளிக்கூடத்துல தள்ளியிருந்தீங்கன்னா, இப்படி நான் கஷ்டப்படுவேனா...' என்றார்.
டூ லேட்!
ஒரு பெரிய கல்வித் தொழிலதிபரின் (இப்ப அப்படித் தானே ஆகிப் போச்சு!) மகனை சந்தித்து, பேசிக் கொண்டிருந்தேன். சில ஆயிரம் கோடிக்கு அதிபதியாகிய இவரது மகன், என்னிடம் புலம்பினார் பாருங்கள், அப்படி ஒரு புலம்பல். 'அவர் ஜெயிச்சுட்டாரு; என்னை ஜெயிக்க விட மாட்டேங்குறாரு; எல்லாம் அவர் கையில; வாயைத் திறக்க முடியல; சம்பளம் வாங்குற இடத்துல கூட, இப்படி அடிமையா வேலை செய்ய மாட்டான் எவனும்...' என்றார்.
பெற்றோரின் அறியாமை, உரிய நேரத்தில், போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் விட்டு விடுகின்றனர். காலமெல்லாம் கஷ்டப்படும் மாற்றுத்திறனாளி இளைஞர், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், தன் பெற்றோரை கரித்துக் கொட்டுகிறார்.
மகளாக இருந்தால், 'என்னை இப்படி பாழுங்கிணத்துல கொண்டு வந்து தள்ளிட்டீங்களேம்மா...' என்கிறாள். 20 - 25 வயதுக்குரிய வளர்ப்பில், பெற்றோர் எடுத்த எல்லா முடிவுகளும், சரியான முடிவுகளாக இருந்திருக்கவே முடியாது.
அறிந்தோ, அறியாமலோ பெற்றோர் பிழை செய்து விடுகின்றனர்.
சபிக்கப்பட்ட இவ்வாழ்விலிருந்து மீண்டு வெளிவந்து ஒரு பிள்ளை சாதித்தால், அதுதான், சாதனையாக உலகில் பேசப்படும். 'அப்பன் வீணாப்போனவன்; இவனுமா இப்படி வீணாப் போகணும்...' என்கிற விமர்சனம் இடம்பெறாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது, மகனது கடமையல்லவா! சேற்றில் முளைத்த செந்தாமரையாய், குப்பையிலும் கெடாத குன்றிமணியாய், கரிகளுக்குள் விளையும் வைரமாய் ஒருவன் வெளிவந்தால், அதுதானே சாதனை!
பாட்மின்டன் பயிற்சியாளர் கூறியதை இங்கே மீண்டும் நினைவுபடுத்துகிறேன்... பெற்றோர் தங்கள் கடமைகளைச் சரிவர செய்திராவிடினும், சொத்துச் சேர்த்திராவிடினும், இளைய தலைமுறையினர், அவர்கள் கோட்டை விட்ட விஷயங்களையும் சேர்த்து, தம் பங்களிப்பை, ஒன்றரை மடங்காக ஆக்க வேண்டாமா?
காரணங்களும், சாக்குபோக்குகளும் சொல்லி, காலத்தை ஓட்டினால், உலகமும், நம்முடன் சேர்ந்து, 'ஆமாமா... ரொம்ப பாவம்; அவன் என்ன செய்வான்...' என்று அருமையாகத் தாளம் போடும். 'அட... நாம் வளராமல் போனது சரி தான் போலிருக்கிறதே, பரவாயில்லையே... இந்த உலகம், நம் நிலைமையை நன்கு புரிந்து பேசுகிறதே...' என்று, ஆறுதலடையலாம். ஏன் மகிழக் கூடச் செய்யலாம்.
ஆனால், இந்த ஆறுதலும், மகிழ்வும் மனது, வயிறு மற்றும் பணப்பையை நிரப்புமா?
மாறட்டும் குணம்; தெளியட்டும் மனம்!
லேனா தமிழ்வாணன்

