தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/களி சிந்தட்டும்!

களி சிந்தட்டும்!

களி சிந்தட்டும்!


PUBLISHED ON : ஜன 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு இருந்தால், அகிலத்தை ஆள்வதுடன், ஆண்டவனையே நம்மை தேடி வர வைக்கலாம் என்பதற்கு, சேந்தனார் வரலாறே சான்று...

சிவ பக்தரான சேந்தனார், விறகு வெட்டி, அதை விற்று கிடைத்த காசில், உணவு சமைத்து, அடியார்களுக்கு உணவு இட்ட பின், தான் உண்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஒரு நாள் கொட்டும் மழையிலும், கிடைத்த தானியத்தை வைத்து களி தயாரித்து, அடியாரை தேடிப் புறப்பட்டார் சேந்தனார். வயது முதிர்ந்த அடியார் ஒருவர் அகப்பட, அவரை அழைத்து வந்து, களியமுதை படைத்தார்.

மிகுந்த பசியுடன் வந்த முதியவரோ, வயிறு நிறைய சாப்பிட்டு, சிறிதளவு களியை மேல் துண்டில் கட்டி எடுத்துச் சென்றார். அதன்பின், மீதி இருந்ததை, சேந்தனாரும், அவர் மனைவி, மக்களும் உண்டனர்.

அதே நேரம், அரண்மனையில், சிவ பக்தியில் சிறந்தவரான செல்வச்சோழ மகாராஜா, தூக்கமின்றி தவித்தார். காரணம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், இரவு பூஜை முடிந்த பின் ஒலிக்கும் மணியோசை கேட்ட பின்னரே, உணவு உண்பது அவர் வழக்கம். அன்று, நள்ளிரவைத் தாண்டியும் மணியோசை கேட்கவில்லை.

இதனால், மன வருத்தம் அடைந்த மன்னர், சிறிது நேரத்தில் தன்னை அறியாமல் தூங்கி விட்டார். அப்போது அவர் கனவில், நடராஜப் பெருமான் காட்சியளித்து, 'மன்னா... என் அன்பன் எனக்கு களியமுது படைத்தான்; அதனாலே தாமதமானது...' என்று கூறி, மறைந்தார்.

பொழுது விடிந்ததும், தன் ஆசார அனுஷ்டானங்களை முடித்த மன்னர், 'இறைவனுக்கே உணவிட்ட அந்த அடியாரை நான் எப்படி தரிசிப்பது...' என்று நினைத்தபடி, சிதம்பரம் ஆலயத்தை அடைந்தார். அங்கே, திருவம்பலத்தில் முற்றம் முழுதும், களி சிதறி, இனிமையான மணம் வீசியது.

அது எப்படி வந்தது என்று எல்லாரும் குழம்ப, சோழமன்னன், தன் கனவில் நடராஜப் பெருமான் கூறியதை சொல்லி, 'அந்த அடியார் தந்த களியே, இங்கு இறைவனால் சிதறப்பட்டுள்ளது...' என விவரித்தார்.

அச்சமயம், சிதம்பரத்தில், மார்கழி திருவாதிரை திருநாள் நடைப்பெற்றது. அன்று, வெகு விமரிசையாக நடக்க வேண்டிய தேரோட்டம், தேர் கிளம்பாததால் தடைபட்டது; என்ன முயன்றும் பலனில்லை. அப்போது, 'சேந்தா... தேர் நகர பல்லாண்டு பாடுக...' என்று வானில் அசரீரி கேட்டது.

கும்பலோடு கும்பலாக நின்றிருந்த சேந்தனார், பல்லாண்டு பாட, தேர் வடம் பிடிக்காமல் தானே ஓடியது. அனைவரும், சேந்தனாரின் தூய்மையான பக்தியையும், நடராஜப் பெருமானின் கருணையையும் வியந்து துதித்தனர்.

அவர் களிப்போடு களி படைத்த அந்த வைபவத்தை முன்னிட்டே, நாமும் திருவாதிரை களி செய்து, 'திருவாதிரைக்களி ஒருவாக் களி' எனக் கொண்டாடுகிறோம்.

தன் வீட்டிற்கு உணவுண்ண வந்தது, சிவபெருமான் என்பது, சேந்தனாருக்கு தெரியாது. அடுத்த வர்களின் பசி தீர்ப்பது, பரமனுக்கே படைப்பதற்கு நிகராகும் என்பதை நிரூபித்தவர் சேந்தனார். அவருக்கு அருள் புரிந்த ஆதிரையான், நமக்கும் அருள் புரிய வேண்டுவோம்!

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

நாடகத்தால் உன் அடியார்

போல் நடித்து நான் நடுவே

வீடகத்தே புகுந்திடுவேன்

மிகப் பெரிதும் விரைகின்றேன்

ஆடகச்சீர் மணிக்குன்றே!

இடையறா அன்பு உனக்கு என்

ஊடகத்தே நின்று உருகத்

தந்து அருள் எம் உடையானே!

விளக்கம்: சிதாகாசமாகிய பொற்சபையில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானே... மாணிக்கம் பதிக்கப்பட்ட மிகுந்த புகழைக் கொண்ட பொன்மலை போன்றவனே... தூய்மையான அடியார்களை போல, உன்னிடத்தில் எனக்கு அன்பு கிடையாது. இருந்தாலும், நானும் அவர்களைப் போல் நடித்து, பக்தி கொண்டவன் போல் பாசாங்கு செய்து, அடியார்கள் அடையும் வீடு பேற்றை அடைவதற்கு, மிகவும் விரும்புகிறேன். என்னை அடிமையாக உடையவனே... உன்னிடத்தில் தூய்மையான அன்பு கொண்டு, உள்ளம் உருகும்படியான நிலையை, என் உள்ளத்தின் உள்ளே நின்று, நீ எனக்கு தந்தருள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us