PUBLISHED ON : ஜன 31, 2016

பிப்., 5 ரதசப்தமி திருவிழா ஆரம்பம்
நம் கஷ்டத்தை, நாம் தான் அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து தப்பி ஓட நினைத்து, பிறரை கஷ்டத்துக்குள்ளாக்குவது மகாபாவம். இதை உணர்த்தவே, ரதசப்தமி விழா நடத்தப்படுகிறது.
தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள், வடதிசை நோக்கி தன் பயணத்தை துவக்குகிறது சூரியன். அது, தன் சுற்றுப்பாதையில் சரியாக கால் வைக்கும் நாளே, ரத சப்தமி!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து, 17 கி.மீ., தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது. இங்கே ரதசப்தமி விழா, பிப்.,5ல் துவங்கி, 10 நாட்கள் நடைபெறும்.
ஒரு சமயம், காலவ முனிவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடைய, நவக்கிரகங்களை வழிபட்டார்; அவரை குணமாக்கின கிரகங்கள். இதையறிந்து, கோபமடைந்த பிரம்மா, 'உங்கள் பணி, அவரவர் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன் வழங்குவதே! முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனை அடையவே, காலவ முனிவருக்கு தொழுநோயைக் கொடுத்தேன். அதை, அவரை அனுபவிக்க விடாமல் தடுத்ததால், நீங்கள் பூமியில் பிறப்பெடுத்து, அந்நோயின் வேதனையை அனுபவியுங்கள்...' என்று சாபமிட்டார்.
இதனால், பூலோகம் வந்த கிரகங்கள், சிவனை நோக்கி, தவமிருந்தன. சிவனும், அவர்களுக்கு சாப விமோசனம் அளித்ததுடன், அவ்விடத்திலேயே அவர்கள் கோவில் கொள்ள ஆசியளித்தார். அதுவே, சூரியனார் கோவில்!
தங்களை வழிபடும் பக்தர்களின் துன்பங்களை தாங்கள் தாங்கி, அவர்களுக்கு அருள் செய்கின்றன இங்குள்ள கிரகங்கள்.
தமிழகத்தில், நவக்கிரகங்களுக்கு என்று அமைந்த ஒரே கோவிலான இது, சூரியனார் கோவில் என்று அழைக்கப்பட்டாலும், எல்லா கிரகங்களுக்கும், இங்கு சன்னிதி உண்டு. கருவறையில், சிவசூரியன் எனும் சூரிய பகவான், தன் துணைவியரான உஷா தேவி மற்றும் சாயாதேவியுடன் காட்சி தருகிறார். இவருக்கு உக்கிரம் அதிகம் என்பதால், அதைக் குறைக்க, சன்னிதி எதிரே, குரு பகவானை ஸ்தாபித்துள்ளனர்.
கருவறையை சுற்றி, மற்ற கிரகங்களான சந்திரன், அங்காரகன், புதன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது சன்னிதிகள் உள்ளன. இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
இங்கு ரதசப்தமி திருவிழா, பிப்., 5ல் துவங்கி, ரதசப்தமி தினமான, 14ம் தேதி நிறைவு பெறுகிறது. இது தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறன்று, சிவசூரியனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு என்பதால், அன்று, ஏராளமான பக்தர்கள் வருவர்.
ஜாதக ரீதியாக சூரியனின் இருப்பிடம் சரியில்லாதோரும், சூரிய திசையால் பாதிக்கப் படுவோரும் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம், செந்தாமரை மலர் சாத்துவர். எல்லா கிரகங்களுமே இங்கு உள்ளதால், அந்தந்த கிரக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபட்டு செல்லலாம்.
மனிதனாகப் பிறந்து விட்டால், கஷ்டம் நிச்சயம். இதற்கு ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர், அசுரர், முனிவர் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. நம் பாவ, புண்ணியத்தை கழிக்கவே, பூமியில் பிறந்துள்ளோம். நமக்கு வரும் கஷ்டங்கள், நம் விதிப்பயனால் வருபவை. அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால், அவற்றை தாங்கும் சக்தியை தரவும், அந்த கஷ்டங்கள் மூலம், 'அனுபவம்' என்னும் கற்கண்டை பெறவும் ரதசப்தமி நன்னாளில் நவக்கிரகங்களை வேண்டிக் கொள்வோம்!
தி.செல்லப்பா
