தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சோதனை சாதனையாகட்டும்!

சோதனை சாதனையாகட்டும்!

சோதனை சாதனையாகட்டும்!


PUBLISHED ON : ஆக 28, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக., 31 - இளையான்குடியார் குருபூஜை

மனிதர்கள் தமக்கு நல்லது நடந்தால், பால், பன்னீர் அபிஷேகம் செய்து, கடவுளை பாராட்டி, சீராட்டுவர். என்றாவது ஒரு கஷ்டம் வந்து விட்டால் போதும்... செய்ததையெல்லாம் சொல்லிக் காட்டி, கடவுளை திட்டி தீர்ப்பர்; இதுதான் மனிதர்களின் குணம். ஆனால், மகிழ்ச்சி, வேதனை, சோதனை என, எந்நிலையிலும் குணம் மாறாமல், சோதனைகளை எதிர்த்து போராடியதற்கு பரிசாக, கடவுளின் தரிசனத்தையே பெற்றிருக்கின்றனர், சில ஆன்மிக பெரியோர்கள். அவர்களில் ஒருவர் தான், இளையாங்குடி மாறர்!

சிவகங்கை அருகில் உள்ள கிராமம், இளையாங்குடி; வயல்கள் சூழ்ந்த செழிப்பு மிக்க ஊரான இங்கு, வாழ்ந்து வந்தார், மாறர். இளையாங்குடியில் வசித்ததால், 'இளையாங்குடி மாறர்' எனப்பட்டார். பெரும் பணக்காரான இவர், தீவிர சிவபக்தர். இவரது மனைவியும், கணவரின் சிவத்தொண்டுக்கு துணை நின்றார். வீடு தேடி வரும் சிவனடியார்களுக்கு, இல்லை என சொல்லாமல் உணவிடுவது, மாறரின் வழக்கம். ஆனாலும், அதைப் பற்றி அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை.

செல்வந்தர்கள், ஏழைகளுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதையும், தன் பக்தரான மாறரின் பெருமையையும் உலதிற்கு வெளிப்படுத்த சித்தம் கொண்ட சிவபெருமான், மாறரின் செல்வத்தை வற்ற செய்தார். இதனால், வீட்டில், வறுமை தாண்டவமாடியது. இருப்பினும், மனம் கலங்காத மாறர், மிஞ்சிய தொகைக்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில், நெல் பயிரிட்டு, அதை வைத்து தர்மம் செய்து வந்தார்.

ஒருநாள், காலையில் வயலில் நெல் விதைகளை விதைத்து விட்டு வீடு திரும்பினார் மாறர். அன்றிரவு மழை கொட்டியது. அப்போது, துறவி உருவில் அவரது வீட்டுக்கு வந்தார், சிவன். வந்தவரை வரவேற்ற மாறர், உணவருந்தும்படி வேண்ட, துறவியும் சம்மதித்தார். ஆனால், வீட்டில் பொட்டு அரிசி கூட இல்லை. இரவாகி விட்டது; யாரிடமும் கடனும் கேட்க முடியாது.

இந்நிலையில், மாறரின் மனைவி, தன் கணவரிடம், 'உடனே வயலுக்குச் சென்று, காலையில் விதைத்த நெல் மணிகளை சேகரித்து வாருங்கள்; அதை வறுத்து, காய வைத்து, குத்தினால் அரிசி தயாராகி விடும். இது, சாதாரண செயல் அல்ல; மிகுந்த சிரமம் தான். இருப்பினும், நம் வீட்டுக்கு வந்த அடியவர் பசியாற வேண்டுமே...' என்றாள்.

கொட்டும் மழையில், கும்மிருட்டில் வயலுக்கு ஓடினார் மாறர். வயலிலே நீர் நிறைந்து, விதை நெல் மிதந்தபடி இருந்தது. வெளிச்சம் இல்லாததால், சேகரிக்க சிரமமாக இருந்தது. ஆனாலும், மின்னல் வெட்டும் போது கிடைத்த வெளிச்சத்தில், மிதந்த நெல்லை, ஓரளவுக்கு சேகரித்து, வீட்டுக்கு கொண்டு வந்தார். அதை, வறுத்து காய வைக்க, விறகு இல்லை. உடனே, வீட்டுக் கூரையில் இருந்த கம்புகளை ஒடித்துக் கொடுத்தார். எப்படியோ ஈரநெல்லை வறுத்து, குத்தி கிடைத்த அரிசியில், ஒருவர் சாப்பிடும் அளவு சோறு தயாரானது. வீட்டுக்கொல்லையில் இருந்த கீரையை பறித்து, கூட்டு வைத்து, பரிமாற தயாரான போது, துறவியைக் காணவில்லை.

அவர்கள், அவரைத் தேடிய போது, வானத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளித்த சிவன், பெரும் சோதனைகளைத் தாண்டி, தர்மம் செய்ய நினைத்த அவர்களை வாழ்த்தி, இழந்த செல்வத்தை திரும்ப வழங்கி, தர்மத்தொண்டு தொடர ஆசிர்வதித்தார்.

மாறரின் குருபூஜை, ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் நடைபெரும்.

கஷ்டம் வரும் காலத்தில், அவற்றை எதிர்த்து போராடுவதுடன் பிறருக்கும் உதவ வேண்டும் என்பதே, மாறரின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us