PUBLISHED ON : ஜன 08, 2017

மவுனம், சம்மதத்தின் அறிகுறி என்று, யாரோ சொல்லி வைக்க, இதை, பலரும் தவறாகவே புரிந்து கொள்கின்றனர்.
ஒரு பெண்ணிடம், 'என்னம்மா, உனக்கு திருமண பேச்சு பேசலாமா...' என்று, அப்பா கேட்க, மகள் அசட்டு சிரிப்பு சிரிக்க, இதை, சம்மதம் என்று புரிந்து, திருமண ஏற்பாட்டில், பல கட்டங்களுக்கு, அப்பா, காய்களை நகர்த்த, வீட்டை விட்டே ஓடி விட்டாள் மகள்.
இப்பெண் காண்பித்த மவுனத்தின் பொருள், சம்மதமில்லை!
கடன், கைமாத்து என, ஒருவரிடம் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அவரோ மவுனம் காக்கிறார். இதற்கு, சம்மதம் என்றும், தரப்போகிறார் என்றா பொருள் கொள்வது?
'என்னிடம் பணம் இல்லை; இருந்தால் கூட, உனக்கு கொடுக்க மாட்டேன். நான் கேட்ட நேரத்தில், நீ எனக்கு கொடுக்க மறுத்து விட்டாய். உனக்கு ஏன் நான் கொடுக்க வேண்டும்...' என்றெல்லாம், இந்த மவுனத்திற்கு பல பொருள் உண்டல்லவா!
வேலை மற்றும் கல்லூரியில் படிக்க இடம் என்று, பெரிய மனிதர் ஒருவரிடம் சிபாரிசுக்கு நிற்கிறோம்; அவரோ, மவுனம் காக்கிறார்.
இதற்கும் பல பொருள் உண்டு. 'நீ என்னிடம் வந்து நிற்கலாம்; நான், ஏன் அவர்களிடம் போய் நிற்க வேண்டும்... உனக்கு செய்த உதவிக்கே, நீ நன்றி காட்டவில்லை; உன் மகனுக்கு வேறு வந்து விட்டாயா... இதற்கெல்லாம், நிறைய பணம் செலவாகும்; யாரு கொடுப்பாங்க, உன் பாட்டனா...' என்று, பல மன கேள்விகளை உள்ளடக்கியது தான், இவரது மவுனம்.
எதிராளியின் மவுனம், ஊகம் செய்ய முடியாதபடி இருந்தால், வெளிப்படையாகவே, 'தயக்கத்தை விட்டு பேசுங்க; சும்மா சொல்லுங்க...' என்று கூறி, நாம் தான் இவர்களது மவுனத்தை கலைக்க வேண்டும்.
இது, அப்பா - மகள் மற்றும் வேலை சிபாரிசு போன்றவை இதில் அடங்கும்.
'தர முடியாவிட்டாலும் பரவாயில்லை; மறுப்பை கூட, மனம் திறந்து சொல்லுங்க...' என்று, நாம், நம் மனதை தேற்றி, கேட்டு விடலாம்; கடன், கைமாத்திற்கு இது பொருந்தும்!
மாறாக, மவுனத்திற்கு பதில் நாமும் மவுனம் காப்பது நல்லதல்ல. அப்புறம், 'நீங்க, அது விஷயமா வரல; பேசலை. என்னை என்ன செய்ய சொல்றீங்க...' என்று, எதிராளி நம்மை குறை காண்பர். அதேபோல், பிறரது மவுனத்திற்கு, தவறான அர்த்தங்களை கற்பித்துக் கொள்வதும் சரியல்ல.
மவுனத்தை, ஊகத்திற்கு விட்டு விடாமல், துணிந்து கலைப்போம்; வருவது வரட்டும்!
லேனா தமிழ்வாணன்
