
மே 22 நம்பியாண்டார் நம்பி குருபூஜை
பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என இல்லாமல், இந்த உலகம் உள்ளவரை நம்மைப் பற்றி பிறர் பேச வேண்டும் என்றால், அரிய செயல்களை நாட்டுக்குச் செய்ய வேண்டும். அவ்வகையில், அரிய பெரிய தேவாரப்பாடல்கள் நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் நம்பியாண்டார் நம்பி. கடலூர் மாவட்டம், திருநாரையூர் சவுந்தரேஸ்வரர் கோவிலில் இவருக்கு சன்னிதி உள்ளது.
இக்கோவில் சிவாலயம் என்றாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம். இவரை, 'பொள்ளாப்பிள்ளையார்' என்பர். 'பொள்ளா' என்றால், உளியால் செதுக்கப்படாத என்று பொருள். அதாவது, இச்சிலை தானாகவே (சுயம்பு) உருவானது.
இப்பிள்ளையாருக்கு பூஜை செய்து வந்தார் அனந்தசேர். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்யத்தை, பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுத்து, வெறுங்கையுடன் வீட்டிற்கு செல்வார் அனந்தசேர். வீட்டிலிருக்கும் அவரது மகன் (சிறுவன்) நம்பியாண்டார்நம்பி, அவரிடம் பிரசாதம் கேட்கும்போது, 'விநாயகர் சாப்பிட்டு விட்டார்...' எனச் சொல்லி விடுவார்.
ஒருசமயம், அனந்தசேர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார். அவர் விநாயகருக்கு நைவேத்யம் படைத்து, தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் எனக் காத்திருந்தார்.
ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. 'விநாயகரே... சாப்பிடுங்கள்...' என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனாலும்,நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால், சிலையின் மீது முட்டி மோதி, நைவேத்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழுதார் நம்பி. விநாயகரும் அவருக்கு காட்சி அளித்து, நைவேத்யத்தை சாப்பிட்டார்.
தங்களுக்கு பிரசாதம் கிடைக்கும் என காத்திருந்த பக்தர்களிடம், 'விநாயகர் சாப்பிட்டு விட்டார்; உங்களுக்கு பிரசாதம் இல்லை...' என்றார். இதை யாரும் நம்பவில்லை. விஷயம், அனந்தசேருக்கு சென்றதும், 'பிரசாதத்தை நீ சாப்பிட்டு விட்டு கடவுள் சாப்பிட்டார் என்றா சொல்கிறாய்...' என்று மகனை கடிந்து கொண்டார். அதனால், நம்பி, விநாயகரிடம், எல்லார் முன்னிலையிலும் நைவேத்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டினார்.
விநாயகரும் நம்பியின் கோரிக்கையை ஏற்று, நைவேத்யத்தை ஏற்றார். ஆச்சரியமடைந்த பக்தர்கள் நம்பியைக் கொண்டாடினர்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவார பாடல்களை மீட்க ராஜராஜ சோழன் முயற்சித்தான். ஆனால், அவனுக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை.
நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், தனக்கு உதவும்படி வேண்டினான். விநாயகரிடம் முறையிட்டார் நம்பி. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாடல்கள் இருப்பதாக அசரீரி ஒலித்தது. மன்னன், நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, புற்று மூடிக்கிடந்த சுவடிகளை எடுத்தான். அவற்றை 11 திருமுறைகளாகத் தொகுத்தார் நம்பி. இது மிகவும் அரிய பணி.
பின், பொள்ளாப்பிள்ளையாரைப் போற்றி, 'விநாயகர் இரட்டை மணிமாலை' பாடினார். இவருக்கு திருநாரையூர் கோவிலில் சிலை அமைக்கப்பட்டது. வைகாசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை நடக்கும். அன்று இரவு, தேவார பதிகங்களை பாராயணம் செய்வர். இதை, 'திருமுறை விழா' என்பர்.
தேவாரம் நமக்கு கிடைக்க காரணமான நம்பியாண்டார் நம்பி செய்தது போல, நாமும் நம்மால் முடிந்த அரிய பணியைச் செய்து மக்கள் மனதில் நிலைத்திருப்போம்.
தி.செல்லப்பா

