sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 17, 2015

Google News

PUBLISHED ON : மே 17, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு மகளே!

நான், 60 வயதைத் தாண்டிய மூதாட்டி. கல்யாணம் ஆகும் வரை, கஷ்டம் என்றால், என்னவென்று அறியாமல் வளர்ந்தவள். நான் ஏழை தான் என்றாலும், அன்புக்கும், ஆதரவுக்கும் பஞ்சமில்லை. நேர்மை, ஒழுக்கம், மன அழுக்கு இல்லாமல் வளர்ந்த சராசரிப் பெண். எனக்குக் கணவனாக வருபவரும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் கணவர், எனக்கு மட்டுமே என்று எண்ணியது பெரும் தவறு என்பதை, இப்போது உணர்கிறேன்.

மனைவி என்பவள் சமைப்பதற்கும், படுப்பதற்கும் உரியவள் என்பது அவர் கருத்து. திருமணத்திற்கு முன்பே சில கன்னிப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக அறிந்தேன். அதுகுறித்து, கேட்ட போது, அவரே, அதை ஒத்துக் கொண்டு, 'பருவக் கோளாறு; இனி, உனக்கு துரோகம் செய்ய மாட்டேன்...' என்று பைபிள் மேல் சத்தியம் செய்தார். இரண்டு நாள் சென்றதும், வழக்கம் போல் இரவில் வந்தார். 'ஏன்?' என்று கேட்ட போது, கோபமாக திட்டி, 'ஆம்பளைக்கு எத்தனையோ வேலை இருக்கும்; அதெல்லாம் உனக்கு சொல்லிக்கிட்டு இருக்க முடியாது...' என்றார்.

நானும், அவரும் ஆசிரியர்கள்; குழந்தைகளைக் கவனிக்கவும், வீட்டு வேலை செய்வதிலும், பள்ளிக்குப் போகவுமே நேரம் சரியாக இருந்தது. கவலைப்பட நேரம் இல்லை.

இப்போது குழந்தைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டது. எனக்கு வந்த மருமகள்கள், மருமகன்கள் அனைவரும் நல்லவர்கள். என்னிடம் மரியாதையாகவும், அன்பாகவும் இருக்கின்றனர். அப்பாவின் தவறுகளைக் கூறி, அவர்களையும் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை.

தன் தவறுகளை சிலசமயம் ஒத்துக் கொண்டாலும், 'ஊர் உலகத்திலே எல்லாரும் செய்ற தவறைத் தான் நானும் செய்கிறேன்...' என்று மழுப்புகிறார்.

தற்போது, நாங்கள் இருவரும் ஓய்வு பெற்று, தனியாக இருப்பதால், அவர் செய்த தப்பெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்து, என் மனம் வேதனைப்படுகிறது. இப்போதும், அவர், சேவை செய்கிறேன் என்ற போர்வையில், நடுத்தர வயது குடும்பப் பெண்களோடும், விதவைப் பெண்களோடும் பேசிப் பேசியே அவர்களை பயன்படுத்தி கொள்கிறார்.

கேட்டால், 'காசு பணத்தை அள்ளிக் கொடுத்தா போறேன்... என்னை விரும்பும் பெண்களுக்கு என்றாவது ஒரு நாள் சுகத்தைக் கொடுக்கிறேன். நானாகப் பலவந்தப்படுத்துவதில்லை; அவர்களாக வரும் போது, போவது தவறான செயல் அல்ல...' என்கிறார். அவர் பேசுவதைப் பார்த்தால் மேல்நாட்டு கலாசாரம் தோற்றுப் போகும்!

அவருக்கு வயது, 65; இனிமேல் அவரோடு என்னால் இருக்க முடியாது. பிள்ளைகள் வீட்டுக்குச் சென்றாலும், என்ன காரணத்தை சொல்ல முடியும். அவர் செய்யும் தவறுகளை பிள்ளைகளிடம் கூற முடியுமா? அப்படி கூறினால் எவ்வளவு கேவலம்!

என்னால் எந்த முடிவுக்கும் வர முடியாமல், காலம் போன காலத்தில், மன அமைதி இல்லாமல் தவிக்கிறேன். மகளே... எனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு!

இப்படிக்கு,

அம்மா. (பெயர் சொல்ல விரும்பாத வாசகி)

அன்புள்ள அம்மா,

மனைவி என்பவள் சமைப்பதற்கும், படுப்பதற்கும் மட்டுமே என்கிற எண்ணம், உங்கள் கணவனிடம் மட்டும் இல்லை; 99 சதவீத கணவன்மார்களின் கருத்தாகவும் இருக்கிறது.

சில ஆண்கள், திருமணத்திற்கு முன், நிறைய தவறுகள் செய்வர்; திருமணத்திற்கு பின் திருந்தி விடுவர். சில ஆண்கள் திருமணமான, 10 ஆண்டுகள் திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடுவர். பின், குழந்தைகளின் நலனுக்காக தங்களை திருத்திக் கொள்வர்.

இந்த வயதிலும் உங்கள் கணவர், நடுத்தர வயது குடும்பப் பெண்களையும், விதவைப் பெண்களையும் நாடுகிறார் என்பது, காதுகளை கூச வைக்கும் விஷயம் தான். 40 வயது வரை பெண் வேட்டை நடத்தும் ஆண்களின் துர்நடத்தை, உயர் ரத்த அழுத்தத்தாலும், சர்க்கரை நோயாலும் மெதுமெதுவாக குறைகிறது. 50 வயதுக்கு பின், பெரும்பாலான ஆண்கள் புத்தர்களாய், காந்திகளாய் செயல் அளவில் மாறி விடுகின்றனர். ஆனால், உங்கள், 65 வயது கணவருக்கு, ஆண்மை கொப்பளிப்பது அபூர்வமான விஷயம்.

உங்களுக்கு வாய்த்த மருமகள்களும், மருமகன்களும் நல்லவர்களாய், அன்பானவர்களாய் இருப்பது ஆறுதலான விஷயம். இறைவன் ஒரு விஷயத்தில் கதவை மூடி வைத்தார் என்றால், வேறொரு கதவை திறந்து வைப்பார்.

நீங்களும், உங்களது கணவரும் ஆசிரியராய் இருந்திருக்கிறீர்கள். ஓர் ஆசிரியர், தன் மாணவர்களுக்கு நல்லதொரு ரோல் மாடலாய் திகழ வேண்டும். உங்களின் கணவர் ஒரு மோசமான ஆசிரியர். அவரால் எத்தனை மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்ததோ?

உங்கள் கணவரின் துர்நடத்தையை மகன், மகள் மற்றும் குடும்பத்தாரிடம் சொல்வது தவறில்லை; அவர்கள் கண்டித்தால் தான், உங்கள் கணவர் திருந்துவார் என, எழுதி இருந்தால், யாரால் மாற்ற முடியும்?

மகன்களும், மகள்களும் கண்டித்தும், உங்கள் கணவர் திருந்தாவிட்டால், உங்கள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு செய்யுங்கள். விவாகரத்து கிடைக்கும் முன்னும், கிடைத்த பின்னும் முறை வைத்து மகன்கள் வீட்டிலும், மகள்கள் வீட்டிலும் தங்குங்கள். பென்ஷன் பணத்தில் பேரன், பேத்திகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுங்கள்.

விவாகரத்துக்குப் பின், உங்கள் கணவர் தனிமை துயரில் வாடுவார். அவரின் காசு, பணத்துக்காக படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்கள், காலம் முழுக்க துணையாக வர மாட்டார்கள். கட்டின மனைவிக்கு நீண்ட ஆண்டுகள் தொடர்ந்து துரோகம் செய்ததை நினைத்து, உங்கள் கணவர் தன் தவறை உணரலாம்.

வயோதிகத்தில் அனுசரணையாக துணை நிற்க ஒரு ஆணுக்கு, மனைவி தேவை. மனைவி என்கிற துணை இல்லாவிட்டால், வாழ்க்கை படுநரகம்.

ஆன்மிகச் சுற்றுலா சென்று வாருங்கள். வாய்க்கு ருசியான உணவை, மருமகள்களை சமைத்து போடச் சொல்லி சாப்பிடுங்கள். நீங்கள் பணி செய்த பள்ளிக்கு சென்று, பழைய நினைவுகளை அசைபோட்டு பரவசப்படுங்கள். உங்களுக்கு எந்த பாடம் சிறப்பாக வருமோ அந்தப் பாடத்தை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்துங்கள். ஒரு கெட்ட கணவரிடமிருந்து விடுபட்ட சுதந்திரத்தை மனசார அனுபவியுங்கள். இளம் வயது பெண்கள், தங்களின் கணவன்மார்களை கட்டுக்குள் வைத்திருக்க தகுந்த அறிவுரை வழங்குங்கள்.

மீதி ஆயுள், உபயோகமாய் கழிய வேண்டுகிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us