PUBLISHED ON : மே 17, 2015

நாம் அனைவருமே உடல்நலத்தில் அக்கறை இருப்பது போல் நடிக்கிறோம். ஆனால், உண்மையில், நமக்கு அதில் அக்கறையோ, ஈடுபாடோ இருப்பதில்லை.
என் வகுப்புத் தோழர் இருவரில் ஒருவருக்கு, உயர் ரத்த அழுத்தம்; மாத்திரை எடுத்துக் கொண்டாலும், ஊறுகாய், அப்பளம் என்று எதையும் விட்டு வைக்க மாட்டார். நல்லவேளை, அவர் சைவம் என்பதால், கருவாட்டை மட்டும் விலக்கி விட்டார். சரி... நடைபயிற்சி செய்தாவது ரத்த அழுத்தத்தை குறைக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. கேட்டால், 'இதெல்லாம் இல்லாம சாப்பிட்டா சாப்பிட்ட மாதிரியே இல்ல...' என்பார்.
அடுத்தவரோ இனிப்பு நண்பர்; தம்மைக் கடந்து போகிற இனிப்பு பண்டங்கள் அனைத்தும், பருந்திடம் சிக்கிய கோழிக்குஞ்சின் கதை தான் இவரிடம்! கேட்டால், 'உடம்புக்கு வந்த பின் பாத்துக்கலாம்...' என்பார்.
சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், கட்டுப்பாடு அற்ற உணவுமுறை! இதில், உ.பா., சமாசாரம் வேறு தண்ணி பட்டபாடு. உடம்பில் சர்க்கரையின் அளவோ, 300க்கும் குறையாத நிலை. முன்னவரைக் காட்டிலும் இவர் கொஞ்சம் பரவாயில்லை; சாமி பேரை சொல்லி கோவிலை சுற்றியோ அல்லது கோவிலை நோக்கியோ நடப்பார்.
இவை, என் நண்பர்களின் கதைகள் மட்டுமல்ல, பலரது கதையும் இதுதான்! 'கடைவாய்ப் பல் ஆடுது; ஒண்ணையும் மென்னு சாப்பிட முடியல. பல்லை பிடுங்கலாம்ன்னு பாத்தா எங்கே நேரம் இருக்கு... டாக்டருக்கு வேற, 1,000 ரூபா அழணும். அதுதான் அதுவா விழட்டும்ன்னு விட்டுட்டேன்...' என, ஏற்க முடியாத வாதங்களை அடுக்குவர்.
'ரெண்டு நாளா நெஞ்சுல ஏதோ குத்துது; போனா ஹார்ட் அட்டாக்குன்னு படுக்கச் சொல்லிடுவாங்க. அநேகமா வாயுப் பிடிப்பா தான் இருக்கும். ரெண்டு நாள்ல தானா சரியாயிடும். லட்சக் கணக்குல செலவழிக்க எங்க போறது...' என்று சொல்லி, மருத்துவமனைக்கு போகாமல், நேரே மயானத்திற்கு போனவர்களும் உண்டு!
பெரும் செல்வந்தர் ஒருவர், 'எதுக்கு இந்த சொத்து... பாக்க முடியல; வாரிசுக்கும் ஆர்வமில்லை...' என்று ஒரு எஸ்டேட்டை விற்றார். சாக்கு மூட்டையில் கட்டும் அளவுக்கு பணம் வந்தது.
ஆனால், அவர் என்ன சொன்னார் தெரியுமா...'எவ்வளவு பணம் இருந்து என்ன செய்ய... உடம்புல இல்லாத வியாதியை பட்டியல் போட்டுடலாம். மருத்துவர்கள் உயிரை காப்பாத்துனாலும், நல்ல ஆரோக்கியத்தை தர மாட்டேங்குறாங்க. 'வயசாயிடுச்சுல்ல அப்படித்தான் இருக்கும்'ன்னு சொல்றாங்க. எந்த உடற்குறையும் இல்லாம ஆரோக்கியமா இருக்கானேன்னு பிச்சைக்காரன பாத்தாக் கூட பொறாமையா இருக்கு. இவ்வளவு பணம் இருந்து என்ன பயன்... அனுபவிக்க வழியில்லயே...' என்கிறார்.
இதன் மூலம் இவர் நமக்கு சொல்வது, உலகத்திலே தலையாய சொத்து வீடோ, எஸ்டேட்டோ, வளாகங்களோ, தொழிலோ, பணமோ அல்ல; நல்ல உடல் நலமே சொத்து!
நம் ஜீரண உறுப்புகளின் முன், ஜப்பானிய மிக்சி கூட தோற்று விடும். வேண்டாத உணவுகளை உள்ளே தள்ளி, அதற்கு ஏகப்பட்ட கெடுதல்களை செய்கிறோம். 10 - 15 ஆண்டுகள் மட்டுமே உழைக்கும் ஒரு நீரிறைக்கும் இயந்திரத்தை விட, நம் இதயம் எனும் ரத்தம் இறைக்கும் இயந்திரம், 100 ஆண்டுகள் பழுது இன்றி உழைக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், அதை, சிகரெட் புகையாலும், குடியாலும், கொழுப்பு சத்தாலும் சரிவர இயங்க விடாமல், குறுக்கே கட்டைகளை நுழைக்கிறோம்.
எந்த வட்டி கட்டி இயந்திரத்தையும் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், கிட்னி எனும் அருமையான வடிகட்டி இயந்திரத்தை வைத்திருக்கிறோம். அதைக் கெடுத்தே தீருவது என, வாய்க்கட்டுப்பாடு இன்றி அதன் செயல்பாட்டை குறைக்கிறோம்.
உலகின் அதிசயம் ஏழு என்கின்றனர். அதை எட்டாக்கி, அவற்றில் ஒன்றாவது இடத்தில் வைக்க வேண்டியது மனித உடல். அத்தகைய உடலை முறையாக செயல்பட வைத்தால், அதன் போக்கில் இயங்க வைத்தால், அதுவே நல்ல உடல் நலம்!
லேனா தமிழ்வாணன்

