
எம்.ஓ.மத்தாய் -ஜவஹர்லால் நேருவின் உதவியாளர் எழுதிய, 'நேரு நினைவுகள்' நூலிலிருந்து: லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தது. கட்ச் பகுதியில் கொஞ்சம் நிலப்பகுதி பறி போயிற்று. இச்சிறு போரில் நாம் வெற்றி பெறும் சமயம், ரஷ்யாவின் தூண்டுதலின் பேரால், போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
அப்போர் நடந்த சமயத்தில், சில பத்திரிகைகள் லால்பகதூரை, 'இரும்பு மனிதர்' என்று, வர்ணித்து எழுதியிருந்தன. நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். நம் நாட்டு போர் படைகள் எங்கு இருக்கின்றன என்பது கூட அவருக்கு தெரியாது. போர் சமயத்தில் பிரதமரான லால்பகதூரும், அவரது குடும்பமும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள, 'அண்டர் கிரவுண்ட்' அறையில் வசித்தனர். ஜனாதிபதியான ராதா கிருஷ்ணனோ, அவ்விதம் இருக்க மறுத்து, 'மற்றவர்களோடு நானும். நல்ல காற்றை சுவாசித்தபடி இறந்து போகிறேன்...' என்று கூறினார்.
'விடுதலை சிறுத்தைகள்' தலைவர் திருமாவளவன் ஒரு பேட்டியில் கூறியது: விருத்தாசலம் கல்லூரியில், இளங்கலை படித்து முடித்து, மேற்படிப்புக்காக சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தேன். சென்னை கொத்தவால் சாவடியில், என் உறவினர் ஒருவர் மூட்டை தூக்கும் வேலை செய்தார். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நானும் அவருடன், மூட்டை தூக்குவேன். வெங்காய மூட்டை, உருளைக்கிழங்கு மூட்டை தூக்கினால், 20 ரூபாய் கிடைக்கும். அதை வைத்து வாழ்ந்தேன்.
'முயற்சியால் முன்னேறியவர்கள்' நூலிலிருந்து: இந்தியத் தொழிலதிபர்களில் முடிசூடா மன்னர்களாக திகழ்வோர், டாட்டா குழுமத்தினர். இவர்களது தொழில் சாம்ராஜ்ஜியம், இந்தியப் பொருளாதாரத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இன்று, இவர்களுக்கு சரிசமமான பெரும் பணம்படைத்தோர் பலர் இந்தியாவில் இருந்தாலும், மக்களிடையே, 'டாட்டா' என்ற பெயருக்குரிய சிறப்பு வேறொருவருக்கு இல்லை.
இந்தியர்கள் தங்கள் தேவைகளுக்கு வெளிநாட்டினரின் கைகளை எதிர்பார்த்திருந்த நிலையில், நம் மக்களின் தேவைக்கு, முன் நின்று தோள் கொடுத்த நிறுவனம் டாட்டா குழுமம்!
டாட்டா தொழில் நிறுவனத்தை உருவாக்கியவர், ஜாம்ஷெட் ஜி டாட்டா. உழைப்பால் உயர்ந்தவர்; பார்சி இனத்தவர். கிராமத்தில் வியாபாரம் செய்து வந்த இவர், தொழில் நிமித்தமாக மும்பை சென்றார். அப்போது,(1857) பிரிட்டிஷாருக்கும், ஈரானியருக்கும் போர் ஏற்பட்டது. பிரிட்டிஷ் படைகளுக்கு, தளவாடங்கள் சப்ளை செய்யும் கான்ட்ராக்ட்டை எடுத்து நிறைய லாபம் பார்த்தார் ஜாம்ஷெட். பின், இந்தியாவிலிருந்து, சீனாவுக்கு தானியங்களையும், பருத்திகளையும் ஏற்றுமதி செய்து, அங்கேயிருந்து தேயிலை, பட்டு, கற்பூரம் மற்றும் செம்பு இறக்குமதி செய்தார்.
இந்திய விடுதலை போராட்ட இயக்கத்துக்கு, பலவகையிலும் உதவி புரிந்தார் டாட்டா. இந்தியாவின் வருங்காலத்தை உணர்ந்த டாட்டா, பீகார் மாநிலத்தில் சாகசீ எனும் கிராமத்தை விலைக்கு வாங்கி, அங்கே, 'டாட்டா அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி' என்ற இரும்பு உருக்கு ஆலையை ஆரம்பித்தார்.
இன்று அதுவே அக்கம், பக்கத்து கிராமங்களையும் சேர்த்து, 'ஜாம்ஷெட்பூர் டாட்டா நகர்' எனும் தொழில் நகரமாக விரிவடைந்துள்ளது. இதற்காக, இந்தியாவில், ௭,௦௦௦ பங்குதாரர்களிடமிருந்து, ஒரு கோடியே, 32 லட்சம் ரூபாயை பங்குத் தொகையாக சேகரித்தனர். 1907ல் டாட்டா நிறுவனம் ஏற்பட்ட போது, அதைக் காண, ஜாம்ஷெட் டாட்டா உயிருடன் இல்லை. 1904ல் அவர் காலமானார்.
இன்று, பத்திரிகைகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு என்று இரு வகை சந்தா தானே உண்டு. ஆனால், பாரதியார் தன், 'இந்தியா' பத்திரிகைக்கு செய்திருந்த சந்தா அறிவிப்பைப் பாருங்கள்:
அரசு அதிகாரிகளுக்கு, 50 ரூபாயும், ராஜாக்கள் மற்றும் ஜமீன்தார்களுக்கு, 30 ரூபாயும், மாதம், 20 ரூபாய்க்கு மேற்பட்ட வருமானமுள்ளோருக்கு, 15 ரூபாயும், மற்றவர்களுக்கு, மூன்று ரூபாயும் சந்தா அறிவிப்பு செய்திருந்தார்.
நடுத்தெரு நாராயணன்

