தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இசை மழையில் நனைவோம்!

இசை மழையில் நனைவோம்!

இசை மழையில் நனைவோம்!


PUBLISHED ON : ஜூன் 19, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



ஜூன் 21 - உலக இசை தினம்!

இசை, மனிதனை மட்டுமல்ல, இறைவனையும் மயக்கும் தன்மை கொண்டது. தேவார மும்மூர்த்திகளின் இசை கேட்க, சிவபெருமான் நடத்திய நாடகங்கள் சுவையானவை... நாகப்பட்டினம் அருகிலுள்ள வேதாரண்யம் சிவாலயம், ஒரு காலத்தில் சில காரணங்களால் மூடப்பட்டது. அவ்வூருக்கு சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வந்தனர். கதவு அடைக்கப்பட்டிருந்ததால், கோவிலுக்கு பக்கவாட்டு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வந்ததைக் கண்டு,

அவர்கள் வருத்தம் அடைந்தனர். கதவு திறக்க வேண்டுமென சம்பந்தர் ஒரே ஒரு பாட்டைத் தான் பாடினார்; கதவு திறந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டனர். திறந்த கதவை அடைக்க அவர்களால் முடியவில்லை; எனவே, கதவை மூடுவதற்காக, தொடர்ச்சியாக, 11 பாடல்கள் பாடினார் நாவுக்கரசர்; கதவு மூடிக் கொண்டது.

'சம்பந்தரே... நீங்கள் ஒரே பாட்டில் கதவைத் திறந்து விட்டீர்கள். உங்கள் சக்தியின் முன், நான் மிகச் சாதாரணமானவன் என்பதை நிரூபிக்க நினைத்த சிவன், என்னை, 11 பாடல்கள் பாட வைத்து விட்டான்...' என, தன்னடக்கத்துடன் சொன்னார் நாவுக்கரசர்.

'நாவுக்கரசரே... தாங்கள் நினைப்பது தவறு. என்னுடைய, ஒரு பாட்டே இறைவனுக்கு சலித்து விட்டது போலும்; அதனால், அவன் கதவைத் திறந்து விட்டான். உங்கள் பாடல்களைக் கேட்க, கேட்க தேனாய் தித்தித்ததால் தான், அவன் உங்களை தொடர்ந்து பாட வைத்திருக்கிறான்...' என்றார் சம்பந்தர்.

இப்படி, இசை கேட்க ஆசைப்பட்டு, சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்; மற்றொரு நிகழ்வும் சுவையானது... சுந்தரர் எனும் வாலிபருக்கு, திருமணம் முடிவானது. மணவறைக்கு வந்து விட்டாள் மணப்பெண். தாலி கட்டும் வேளையில் முதியவர் வேடத்தில் நுழைந்தார் சிவன். திருமணத்தை தடுத்து நிறுத்திய அவர், 'இந்த மணமகன் எனக்கு அடிமை என, இவனது முன்னோர் சாசனம் எழுதித் தந்துள்ளனர். இவனோ திருமணம் செய்து, தப்பிக்க எண்ணுகிறான். இவனை என்னுடன் அனுப்புங்கள்...' என்றார்; மறுத்தார் சுந்தரர்.

'இந்தக் கிழவன் ஒரு பித்தன்; அதனால் தான், பைத்தியம் பிடித்து என்னை அடிமை என்கிறான்...' என்று கத்தினார்; ஆனால், முதியவர் தகுந்த ஆதாரங்களைக் காட்டியதால், ஊர்ப் பெரியவர்கள் சுந்தரரை முதியவருடன் அனுப்பி வைத்தனர். திருவெண்ணெய்நல்லூருக்கு அவரை அழைத்துச் சென்று, சிவலிங்கத்துடன் ஐக்கியமாகி விட்டார். இதைக்கண்டு ஆனந்த மடைந்த சுந்தரர், 'இறைவா... நீயா என்னை அடிமை கொண்டது...' என மகிழ்ந்தார். அப்போது, சிவன் அவர் முன் தோன்றி, தன்னைப் பாடும்படி, வேண்டினார். எப்படி பாடுவது என சுந்தரர் கேட்கவே, 'நீ என்னை பித்தன் என திட்டினாய். அந்த வார்த்தையை முதலாவதாகக் கொண்டே பாடு...' என சொல்லவே, 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...' என பிரபலமான பாடலைப் பாடினார். இவரே சிவபெருமானை, 'ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே...' என்று பாடியுள்ளார்.

தியாகராஜர் எனும் இசைமேதை, ராமபிரானை வாழ்த்திப் பாடிய கீர்த்தனைகள் பேரின்பம் தருபவை. சங்கீத மாணவர்கள் தியாகராஜருக்கு தேன் அபிஷேகம் செய்கின்றனர். இங்கு வந்து அரங்கேற்றம் செய்பவர்கள் ஏராளம். இவரது ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனைகளை பிரபல இசைக் கலைஞர்கள் பாடுவர். தியாகராஜர் இந்த கீர்த்தனைகளை பாடிய போதுதான், ராமபிரான் அவருக்கு காட்சி கொடுத்தார். உலக இசை தினத்தன்று, இசையால்

இறைவனைப் பாடிய மாணிக்க வாசகர், அருணகிரியார், நக்கீரர், குமரகுருபரர் உள்ளிட்ட இசைஞானிகளின் பாடல்கள், மழை போல் நம் இல்லங்களை நனைக்கட்டும்.

***

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us