தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 19, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பகுத்தறிவு வெளிச்சம்!

என் நண்பரின் மகளுக்கு, உற்றார் உறவினர் முன்னிலை யில், ஒரு கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாள் நட்சத்திரம் குறித்து, பத்திரிகை எழுதி, தட்டில் வைத்து, சம்பந்திகள் இருவரும் தட்டுக்களை மாற்றிக் கொள்ளும்போது, மின்வெட்டு ஏற்பட்டு, கோவிலே இருளில் மூழ்கிப் போனது.

நண்பரோ, 'என்னங்க இது... சகுனமே சரியில்லை. ஆண்டவனே இந்த சம்பந்தத்தைத் தடுக்கிற மாதிரி இருக்கே! இதையும் மீறி, இந்தப் பெண்ணை மருமகளா கொண்டு வந்தா குடும்பம் விளங்குமா?' என்று தரகரின் காதில் கிசுகிசுக்க, அது, பெண்ணின் தகப்பனாருக்கு எட்டியது.

அவரோ, 'இந்த மின் வெட்டுங்கறது நானோ, நீங்களோ செய்யலீங்க சம்பந்தி. மின் பற்றாக்குறையால், நாளொன்றுக்கு ரெண்டு, மூணு முறை இந்த மின்வெட்டை அரசாங்கம் நிகழ்த்துது. வெற்றிலைப் பாக்குத் தட்டை மாத்தறப்ப நிகழ்ந்த மின் வெட்டுங்கறது, ஏதோ காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதைதான். நீங்க உங்கப் பையனோட வாழ்க்கையைப் பார்க்கறப்ப, நான் உங்களை விட, என் பெண்ணோட வாழ்க்கையைப் பார்ப்பேன்ல... என்னைப் பொறுத்தவரையில், மின் வெட்டுங்கறது சமுதாய நிகழ்வு தானே ஒழிய, அது, அபசகுனம் இல்லை. வேணும்னா ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டைப் பத்த வெச்சு, அதன் வெளிச்சத்துல தட்டை மாத்திக்கலாமே...' என்று விளக்கம் சொல்ல, நண்பரது அறியாமை நீங்கி, பகுத்தறிவு வெளிச்சம் வந்ததும், அந்த விழா மீண்டும் களை கட்டியது.

— ஜக்கி, கோவை.

கற்றுக் கொடுங்க வாழ்க்கையை!

தோழியின் மகள், புகுந்த வீட்டில் சண்டை போட்டு, பிறந்த வீட்டுக்கு வந்து, தன் அம்மாவிடம் அடுக்கடுக்காய் புகார் கூறி இருக்கிறாள். தோழி, 'இதெல்லாம் ஒரு பிரச்னையா? நான், உன் அப்பாக்கிட்ட படாத கஷ்டமா... அவருக்கு, எல்லா கெட்ட பழக்கமும் உண்டு. அவர், அம்மா, அக்கா, தங்கச்சி சொல்றதைக் கேட்டுக்கிட்டு, என்னை மொத்தி எடுப்பார். மாமியார்காரி, என் சாப்பாட்டுத் தட்டை நாய்க்கு தூக்கி போடுவா. நீ என்னடான்னா இதுக்குப் போய் கோவிச்சுக்கிட்டு வந்துட்டியே... என்று எடுத்துச் சொல்லி, மகளை உடனே புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்...' என்றாள். 'உன் புருஷனும், அவர் குடும்பத்து ஆட்களும் ரொம்ப நல்லவங்களாச்சே... உன் மகளிடம் ஏன் இப்படி பொய் சொன்னே?' என்று வியப்பாக கேட்டேன். 'இப்ப உள்ள பொண்ணுங்க சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் புருஷன் வீட்டோட சண்டை போட்டுட்டு, பிறந்த வீட்டுக்கு வந்திடறாங்க; இது தவறு. பெரியவங்கதான் இப்படி ஏதாவது தைரியம் சொல்லி, அனுசரிச்சு வாழ வழி காட்டணும். அதான் இந்த பொய் பேச்சு...' என்று சொல்லி, சிலிர்க்க வைத்தாள். பெண்ணைப் பெற்றோரே... இதை, நீங்களும் மனசுல வச்சு செயல்படுங்கள்.

— க.தேவந்தி, காயக்காடு.

தன்வினை தன்னைச் சுடும்!

நான்கு உதவி யாளர்களை வைத்துக் கொண்டு, 'வொர்க் ஷாப்' நடத்திவரும் நண்பன், யாரையும் தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் பணியில் நீடிக்க விட மாட்டான். உதவியாளர்களை அவ்வப் போது மாற்றிக் கொண்டே இருப்பான். 'இன்கிரிமென்ட் கேப்பானுவ, வுட்டா இ.எஸ்.ஐ., பி.எப்., கிராஜு விடி எல்லாம் கேப்பானுவ... அதனால், அப்பப்ப கழட்டி விட்டுக்குனே இருக்கு றேன்...' என்று அதற்கு ஒரு சூப்பர்காரணமும் சொல்வான்.

இவன் மட்டும், சர்வீஸ் சார்ஜுகளையும், லேபர் சார்ஜுகளையும் வருடா வருடம் கூடுதலாக்கிக் கொள்வான். அதற்கும், 'வெலவாசி ஏறி போச்சுபா... கட்டுப்படி ஆக வேணாமா?' என்று காரணம் சொல்வான். 'வேணாம்டா... விசுவாசமா இருக்கிற வேலைக்காரங்களோட வயிற்றெரிச்சலைக் கொட்டிக் காதே; அவுங்க சாபம் உன்னைச் சும்மா விடாது...' என்று நண்பர்களான நாங்கள் சொன்ன புத்திமதி, அவன் செவிகளில் ஏறவே இல்லை.

சமீபத்தில், வண்டியை சர்வீசுக்கு விட, அவன் வொர்க் ஷாப்பிற்குச் சென்ற எனக்கு, பயங்கர அதிர்ச்சி... பிசியாக இயங்கும் வொர்க் ஷாப், காலியாக இருந்தது. உதவியாளர்கள் ஒருவரும் இன்றி, ஒரு மொபெட்டை அவனே பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான். 'எல்லாரும் மொத்தமா நின்னுட்டானுவபா. வேற யாரும் வேலைக்கு வந்தாலும், தடுத்துடறானுவ. பொழப்பே நாறி போச்சுபா...' என்றான் கண்ணீர் மல்க. 'தன் வினை தன்னைச் சுடும்...' என்று, பட்டினத்தார் சொன்னது இதைத்தானோ!

— பி.துரைராஜ், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us