
பனிக்காலத்தில், உடல் சூடு, குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்; அதற்காக, நிறைய சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியம் உள்ள அனைவருக்குமே, விரைவாக பசி எடுக்க இதுவே காரணம்.
* உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பதுடன், உடல் புஷ்டிக்குரிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணலாம். வேர்க்கடலை, பாதாம் மற்றும் முந்திரிப் பருப்பு போன்றவற்றையும், அரிசி மற்றும் கோதுமை வகை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம், உடல் சூடு பாதுகாக்கப்படும்.
* உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, குளிப்பது நல்லது. இதன் மூலம், உடல் வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் தேய்த்து குளிப்பதும் சிறந்தது.
* சோப், உடல் வறட்சியை அதிகப் படுத்தும் என்பதால் சோப்பு போட்டு குளிர்ப்பதை தவிர்க்கவும். கடலை மாவு, பாசிப்பயறு மாவு இரண்டையும் சம அளவு எடுத்து, அதில், ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து பொடியாக்கி கலந்து, தண்ணீர் விட்டு, 'கிரீம்' போல் உடலில் பூசிக் குளித்தால், சருமத்திற்கு அழகும், மிருதுத் தன்மையும் உருவாகும். சோப்பு உபயோகித்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளவர்கள், கிளிசரின் சோப்பை பயன்படுத்தலாம்.
* வாரத்தில் இரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளியுங்கள். ஷாம்பு வேண்டாம்; அதற்கு பதில் சீகைக்காய்ப்பொடி அல்லது பாசிப்பயறு மாவு இல்லையென்றால் செம்பருத்திப்பூ போன்றவற்றை பயன்படுத்தலாம்.
* குளிக்கும் நீரில் சிறிதளவு, 'யூடி கோலான்' சேர்த்தால், உடலுக்கு உற்சாகம் கிட்டும். கடலை மாவு தேய்த்துக் குளித்தால், அந்த மாவின் வாடையையும் இது போக்கி விடும்.
* குளித்தபின், 'மாஸ்ச்சரைசிங் கிரீம்' தடவி கொள்வது நல்லது. இரவில் தூங்க செல்வதற்கு முன், உதடுகளில் வெண்ணெய் அல்லது பாலாடையைத் தேய்த்து, மெதுவாக வருடிக் கொடுங்கள். அவ்வாறு செய்தால், உதடுகளில் வெடிப்பு ஏற்படாது.
* தூங்கும் முன், பன்னீர் மற்றும் கிளிசரின் கலந்த கலவையை கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால், சருமம் மிருதுவாகி, அழகு பெறும்.
* இரவு தூங்கச் செல்வதற்கு முன், உப்பு கலந்த நீரில், பாதங்களை, 10 நிமிடம் வைத்த பின், 'வாஸ்லின்' தேய்த்து வந்தால், வெடிப்பு குறையும்.
* தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாவதுடன், உடலின் தட்ப வெப்ப நிலையும் பராமரிக்கப்படும். முறை யான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், சுரப்பிகள் ஓரளவு பணி செய்யும். அதன்மூலம் சருமத்திற்கு ஈரம் மற்றும் எண்ணெய் தன்மை கிடைக்கும்.
* குளிர் காலத்தில், 'டார்க்' நிற ஆடைகளை அணியலாம்; கறுப்பு நிற ஆடை, குளிருக்கு இதமாக இருக்கும்.
* தோல் வறண்டு இருந்தால், பால் ஏட்டை அடிக்கடி பூசி, உலர வைத்து, பின் குளித்தால், சருமம் மென்மையாகி, தோல் வறட்சி போய் விடும்.
* படுக்கையறையில் சாம்பிராணி புகை போட்டு, பின் தூங்கச் சென்றால், கொசு மற்றும் பூச்சிகள் போய் விடுவதுடன், சுகமான தூக்கம் வரும். சாம்பிராணி தூபம் போடும் போது, ஜன்னல் மற்றும் நுழைவாயில் கதவுகளை இறுக மூடி விட வேண்டும்.
* குளித்தவுடன், உடல் முழுவதும் சிறிது பவுடர் போட்டுக் கொண்டால், புத்துணர்ச்சி அதிகரிக்கும்.
நான்கு பருவங்களில் ஒன்றான குளிர்காலத்தை வரவேற்று, எந்த பாதிப்பும் இல்லாமல், 'என்ஜாய்' செய்யலாமே!

