
துணிந்து நில்!
என்னடா வாழ்க்கை
என்பதற்காக அல்ல வாழ்க்கை...
எதிர்நீச்சல் போட்டு
நிமிர்ந்து நிற்பதற்கே வாழ்க்கை!
ஆயிரம் சவால்கள்
அடுக்கடுக்காய் வந்தாலும்,
துவண்டு போகாமல்
துணிந்து நிற்பவனே
கைதட்டல் பெறுகிறான்!
சோதனை மேகங்கள்
சூழ்கொள்ளும் போது
கவலை சிறைக்குள்
கைதியாக நிற்காமல்
சிந்தனை வெளிச்சத்தில்
தஞ்சம் புகுபவனே
சிகரம் தொடுகிறான்!
மனித சக்தியின்
மகத்துவம் உணர்ந்து
முடிவில்லா முயற்சியில்
மூழ்கி வியர்ப்பவனுக்கு
வானம் கைதட்டும்
மின்னல் மாலையிடும்
மழை வாழ்த்தெழுதும்!
அறியாமையும், அலட்சியமும்
துன்ப விருட்சத்தின் வேர்கள்!
அகந்தையும், சோம்பலும்
வளர்ச்சியை அழிக்கும்
விஷச் செடிகள்!
ஒவ்வொரு காலையும்
உழைப்பை சுவாசித்து
லட்சிய வேள்வியை
நொடிதோறும் நிகழ்த்து!
சூழ்ச்சியும், சூழ்நிலையும்
தகர்ந்துவிடும் ஓசையில்
வாழ்நாள் வரலாறு ஆகும்!
நண்பர்களுக்கு மட்டுமல்ல...
எதிரிகளுக்கும்
உன் வாழ்க்கை
பாட நூலாகட்டும்!
— கவிதாசன், கோவை.

