PUBLISHED ON : அக் 18, 2020

எவ்வளவு தான் விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும், அது நம்மிடம் இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இழந்த பிறகு, அதற்காக அலையாய் அலைவோம். இழந்ததை மீட்க வழி...
காசியில் வாழ்ந்து வந்த, பெரும் செல்வந்தரான வியாபாரி ஒருவர், குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டார். மன வருத்தம் அடைந்த அவர், 'மனைவி, மக்கள், ஏராளமான செல்வம் எல்லாம் இருந்தும், ஆரோக்கியம் இல்லாவிட்டால் என்ன பலன்...' என்று புலம்பினார்.
ஒருநாள் மனைவி, மக்கள், சுற்றத்தார் என, அனைவரையும் அழைத்து, 'இனிமேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கும் தொல்லை. என்னை அழைத்து போய், கங்கையில் போட்டு விடுங்கள்...' என்றார்.
முதலில் மறுத்த உறவினரும், மற்றவர்களும், வேறு வழியின்றி, செல்வந்தரின் வற்புறுத்தலுக்கு இணங்கினர்.
செல்வந்தரை துாக்கிப்போய், அவர் தலையிலும், கால்களிலும் காலி பானைகளை கட்டி, கங்கையில் மிதக்கவிடத் தயாராகினர்.
அந்த நேரத்தில், கபீர்தாசரின் சீடரான பத்மநாபர், அங்கு வந்து, விபரம் அறிந்தார்.
'என்ன அக்கிரமம் இது... புல்- பூண்டு என, பல பிறவிகள் எடுத்த பின்பே, அரிதான இந்த மானுடப் பிறவி கிடைக்கிறது. அப்படிக் கிடைத்த இந்தப் பிறவியை, தற்கொலை செய்வதில் ஈடுபடுத்தலாமா...' என, அறிவுரை கூறினார்.
'ஐயா... பரிகாரங்கள் பலவும் செய்து விட்டேன்; பலன் ஏதும் இல்லை. அதனால் தான் இந்த முடிவு...' என்றார், செல்வந்தர்.
'நடந்ததை விடுங்கள்; இப்போது நீங்கள், 'ராம ராம ராம' என்று, மூன்று முறை சொல்லுங்கள். பகவான் அருளால் உங்கள் நோய் குணமாகும். ஆத்மார்த்தமாக, 'தெய்வமே... நீ தான் இந்த நோயைத் தீர்த்து, பழையபடி மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்' என்ற எண்ணத்தோடு சொல்லுங்கள்...' என்றார், பத்மநாபர்.
அதன்படியே செல்வந்தரும், சுற்றி இருந்தவர்களும் சொல்ல, அவரின் நோய் நீங்கியது.
பத்மநாபரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார், செல்வந்தர்.
'அனைத்தும் ஈசன் செயல்...' என்றபடியே அங்கிருந்து போய் விட்டார், பத்மநாபர்.
தகவல் அறிந்து, பத்மநாபரை அழைத்து, 'சீடனே... வியாதி நீங்க, 'ராம' நாமத்தை, ஆத்மார்த்தமாக ஒருமுறை சொன்னாலே போதுமே... நீ, மூன்று முறை ஏன் சொல்லச் சொன்னாய்...' எனக் கேட்டார், கபீர்தாசர்.
'குருநாதா...
தங்கள் திருவடிகளைப் பணியாத அச்செல்வந்தரின் குறை தீர, ஒருமுறை; அவருடைய நோயும், பிறவியும் தீர, ஒருமுறை; சுற்றியிருந்த மக்கள் நல்வழியில் நடக்க, ஒருமுறை என்பதற்காகவே, மூன்று முறை, 'ராம' நாமா சொல்லச் சொன்னேன்...' என்றார், பத்மநாபர்.
தம் சீடனை வாழ்த்தினார், கபீர்தாசர்.
இப்போதுள்ள நிலையில், தெய்வத்தைத் தவிர வேறு துணையே இல்லை. அவரவர் இஷ்ட தெய்வ நாமாவை, ஆத்மார்த்தமாகச் சொல்வோம்; துயர் தீர்க்க வேண்டுவோம். படுத்தும் நோய் பறந்து போய் விடும்.
ஆன்மிக தகவல்கள்!
செல்வத்திற்குரிய தெய்வங்களான, வெங்கடாஜலபதி மற்றும் குபேரன் படங்களை, வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
பி. என். பரசுராமன்
