
ஆடம்பரமான இரட்டை படுக்கையறையில், குப்புறப் படுத்திருந்த, வயலட் கட்சித் தலைவர் ஆனந்த தீர்த்தன், திடீரென்று தூக்கம் கலைந்து, தலையை மட்டும் தூக்கி, தலையணையை முறைத்தார்.
'ஸ்பாஞ்சு மாதிரி இருக்க வேண்டிய தலயாணி, பாறாங்கல்லா கனக்குது; தூத்தேறி...' என நினைத்து, தலையணையை, 'மடார் மடார்' என்று அடித்தார்.
''என்ன... காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா...'' என்றபடி, படுக்கையறைக்குள் பிரவேசித்தாள் தலைவரின் மனைவி பாமா. அவள் கையில், ஸ்மால் விஸ்கி நிரப்பப்பட்ட மதுக்கிண்ணம்.
''பெட் காபி மாதிரி உங்களுக்கு பெட் விஸ்கி; இந்தாங்க, குடிங்க,'' என்று மதுக்கிண்ணத்தை நீட்டினாள்.
வாங்கி குடித்தார் ஆனந்த தீர்த்தன். பைஜாமாவை இடுப்புக்கு மேலே இழுத்து விட்டவாறே, கழிவறை கூடிய குளியலறைக்கு நடந்தார்.
உள்ளே, வெள்ளை நிற பளிங்கு சுவரில்...
பாஸ்... எங்க கூட கூட்டணி வைங்க; உங்க வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம்.
— இப்படிக்கு,
வெகுஜன மறுவாழ்வு கூட்டணி.
— என்று லிப்ஸ்டிக்கால் எழுதி வைத்திருந்தனர்.
கோபத்துடன் பாய்ந்து, கையால் வாசகங்களை தேய்த்து அழித்தவர், பற்பசை டியூப்பை பிதுக்க போனார்...
தித்திக்கும் பைந்தமிழே... எங்களோடு உறவாட வா... தம்பி... துப்புவதில் நீ டைட்டானிக் ஹீரோவை விட, படு டாப்பு! - கி.மு.க., தலைவர்.
மதுரைத் தமிழில், நூறு கெட்ட வார்த்தைகளை உதிர்த்தபடி, காலைக் கடன்களை முடித்து, படுக்கையறைக்கு திரும்பினார், தீர்த்தன். கழிவறையை சுத்தம் செய்து, கையெழுத்துக்காக நோட்டை நீட்டினான் சுகாதார பணியாளன்.
நீட்டிய பக்கத்தில்...
எங்களோடு நீங்கள் கூட்டணி சேருவது காலத்தின் கட்டாயம். - தா.ஜ.க., மாநிலத் தலைவர்.
''கையெழுத்தும் வேணாம்; கிய்யெழுத்தும் வேணாம் ஓடிரு மக்கழே...''
படுக்கையறைக்குள் பாமாவும், பாமாவின் தம்பி சத்தீஷும் பிரவேசித்தனர்.
''காலை வணக்கம் முதல்வர் மாமா...''
''காலை வணக்கம் உள்துறை அமைச்சர் மச்சினரே...''
இருவரும் தீர்த்தனுக்கு எதிரில் அமர்ந்து, அவரை வெறித்தனர்.
''நடப்பு அரசியல பத்தி, நாங்க சொல்லிக் கொடுத்தத எல்லாம் மறக்காம நினைவுல வச்சிருக்கீங்களா சி.எம்.,?''
''ஓரளவு...''
''முதல்ல உங்க நாக்கு குழறாம இருக்க, சிறு பயிற்சி தரேன்,'' என்றவள், ''எங்க சொல்லுங்க... சிக்ஸ்டி சிக்ஸ்!''
தீர்த்தனின் நாக்கு, சன்னி லியோன் போல, வளைந்து குழைந்து கழைக் கூத்தாடியது.
''சிச்சிடி சிச்!''
''ம்ஹூம்... சரியா சொல்லுங்க.''
''ஸிஸ்டி ஸிஸ்!''
''விடுக்கா அவர... ஒரு சி.எம்.,மை துன்புறுத்தாத... குழந்தையின் மழலைய ரசிப்பது போல, மாமாவின் வாழைப்பழ தமிழை ரசிப்போம்.''
மனைவி, மைத்துனருடன் வரவேற்பறைக்கு நடந்தார் தீர்த்தன். ஆங்கில, தமிழ் தினசரிகளை எடுத்து மாமாவுக்கு வாசித்து காட்ட ஆரம்பித்தான் சத்தீஷ். தினசரிகளுக்கு இடையே இருந்த, 'பிட்' நோட்டீஸ் நழுவியது. நோட்டீஸை எடுத்து வாசித்தான் சத்தீஷ்.
அதில், மதுரை பெற்றெடுத்த கடை தமிழ் சங்க தமிழா...
உன்னை நினைத்தாலே நெஞ்சு பூரிக்கிறது. புறநானூற்றுத் தலைவி, தலைவனோடு சேரத் துடிப்பது போல, நான், உன்னுடன் சேர துடிக்கிறேன்; பிரிவுத் துயரால், என் உடலில் பசலை படிகிறது. ஒரு யுவதியை, ஒரு யுவன் காதலிப்பான். யுவதியோ காறித் துப்புவாள்; செருப்பை தூக்கி காட்டுவாள்; அப்பாவிடம் கோள் மூட்டி, உதை வாங்கி தருவாள்.
அத்தனையையும் பொறுத்து, அவளை தொடர்ந்து காதலிப்பான், அந்த யுவன். அப்படித்தான் நானும்! வா... வந்துவிடு; தா... தந்துவிடு உன் ஆதரவை.
எங்கள் கூட்டணியில் நீ இணைந்தால், என் கதை வசனத்தில், ஆண்டிற்கு மூன்று படங்கள், உன் மகனை கதாநாயகனாக வைத்து படம் எடுப்பேன். சிறந்த, 'காக்டெயில்' உற்சாக பானம் கலந்து தரும் ஒரு நிபுணரை, எங்கள் செலவில், உன் வீட்டிற்கு அனுப்புவோம். நீ நாக்கை துருத்தும் அழகே அழகு; அப்படி துருத்தும் போது, உன்னுடன், 'செல்பி' எடுக்க ஆசை. யோசிக்காம கூட்டணிக்கு வா!
- உன் நினைவால் வாடும், கி.மு.க., தலைவர்.
நோட்டீஸை கிழித்தெறிந்தார் தீர்த்தன்.
தமிழ் தினசரிகளை படித்துக் காட்டினான் சத்தீஷ். ஆங்கில தினசரிகளை படித்து பொருள் கூறினான். பாதி புரிந்தும், புரியாமலும் தலையாட்டினார் ஆனந்த தீர்த்தன்.
அப்போது, தீர்த்தனின் கைபேசி சிணுங்கியது. எடுத்து பார்த்தாள் பாமா. அதில், உங்களை முதல்வர் வேட்பாளராக மட்டுமல்ல, பிரதம வேட்பாளராகவும், அமெரிக்க அதிபர் வேட்பாளராகவும் அறிவிக்கிறோம்; ஆனால், அதை தேர்தலுக்கு முன் அறிவிக்க முடியாது. தேர்தல் முடிவுகள் வெளியான பின் அறிவிப்போம்...
- தா.ஜ.க., மத்திய தலைமை.
வந்த குறுஞ்செய்தியை வாசித்து காட்டினாள் பாமா. அப்போது, கணினி இயக்கும் இளைஞன் ஒருவன் வந்து கும்பிட்டான்.
''வணக்கம் பாஸ்...''
'என்ன?''
''உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது.''
''பாமா... வாங்கி, படி.''
பாஸ்களின் பாஸே... கவுண்டமணி, செந்திலை அடிப்பது போல, உங்களிடம் குறைந்தபட்சம், 10 பளார், 10 கும்மாங்குத்து, 10 உதை வாங்கினவுங்களுக்கு தான், எம்.எல்.ஏ., சீட். இது உங்க வேட்பாளருக்கு மட்டுமல்ல, நம்ம அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பொருந்தும் என அறிவித்து விடுகிறோம். நீங்கள் விரும்பினால், வருஷத்தை மூன்றாக பிரித்து, முதல் பகுதியில் நீங்களும், இரண்டாவது பகுதியில் உங்கள் மனைவியும், மூன்றாவது பகுதியில், உங்கள் மைத்துனரும் முதல்வர் பதவி வகிக்க ஏற்பாடு செய்கிறோம்.
- வெகுஜன மறுவாழ்வு கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மைகோ.
''இவன்க லந்தை தாங்க முடியலியே... போங்கடா நீங்களும், உங்க முதல்வர் பதவியும்ன்னு உகாண்டாவுக்கு ஓடி போயிரலாமான்னு மனம் நினைக்குது மக்கழே...'' என்றார் தன் மனைவி மற்றும் மத்துனனைப் பார்த்து!
''நீங்க முதல்வர் ஆகி, தமிழகத்த ஆளணும்ங்றது தமிழ்நாட்டு மக்களோட தலைவிதி; பொறுப்பை தட்டி கழிக்கக் கூடாது மாமா,'' என்றான் சத்தீஷ்.
மூச்சிரைக்க வேலையாள் ஒருவன் ஓடி வந்து, ''நம்ம தோட்டத்துல ஒரு கூத்து நடக்குது; வந்து பாருங்க,'' என்றான்.
மூவரும் ஓடினர்.
அங்கு, இசையமைப்பாளர் கிரிகாந்த்பாவா, தன் இசைக்குழுவுடன் நின்று, குத்தாட்ட இசை போட்டுக் கொண்டிருந்தார். கி.மு.க., மகளிரணி மங்கைகள், புடவைகளை தூக்கி, இடுப்பில் செருகி, படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டனர்.
குத்தாட்டத்துக்கு பின்னால், ஒரு பேனரை உயர்த்தி பிடித்திருந்தனர்.
அதில், கறுப்பு மல்லிகையே... கிரானைட் நிலவே... வைகை நட்சத்திரமே... முரட்டு சூறாவளியே... எளிதில் விடை காண முடியாத அல்ஜீப்ரா கணிதமே... காவல்துறை அதிகாரி வேஷத்திற்கு மிகப் பொருத்தமான கச்சிதனே...ஆயிரம் மிமிக்ரி கலைஞர்களுக்கு பீட்சா போடுபவனே... சீரியசான அரசியலுக்கு நகைச்சுவை, 'டச்' கொடுத்த வித்தகனே... யோசிக்காமல் எங்கள் கூட்டணிக்கு வந்து விடு. தேர்தலில் ஜெயித்த பின், உன்னை கறிவேப்பிலை போல் தூக்கியெறிய மாட்டேன். சிங்காரிச்சு, மூக்கை அறுக்கும் வேலையை என் மகன் செய்ய மாட்டான். நம்பு தம்பி நம்பு!
- கி.மு.க., தலைவர்.
''பேனரில் அல்ஜிப்ரான்னு போட்டிருக்குன்னு படிச்சீயே... ஜீப்ரான்னா வரிக்குதிரை; அல்ஜீப்ரான்னா அரேபிய தேசத்து வரிக் குதிரையா? '' என்றான் தீர்த்தன்.
தலையில் அடித்தபடி, ''வாங்க சாப்பிடலாம்,'' என்றாள் பாமா.
இடியாப்பமும், பாயாவும் பரிமாறினாள். சிறு சுத்தியல் வைத்து எலும்பை உடைத்துக் கொடுத்தாள்; உறிஞ்சினார் ஆனந்த தீர்த்தன்.
இரத்தக் கொதிப்பு மாத்திரையும், நீரழிவு நோய் மாத்திரையும் போட்டுக் கொண்டார் தீர்த்தன்.
''இன்னைக்கி பொதுக்குழு கூடப் போகுது; யாரோடு கூட்டணிங்கிறத அறிவிக்கப் போறோம். கூட்டத்துல என்ன பேசணும்ன்றத சொல்லிக் குடுக்கவா?'' என்றாள் பாமா.
''வேணாம்...''
''நா சொல்லித் தரவா மாமா?''
''நீ கொஞ்சம் அடங்கு; இன்னைக்கி என் சொந்த சரக்கை வச்சு பேசப் போறேன். இன்னும் ஒரு லார்ஜ் விஸ்கி கொடு; அப்பத்தான், நல்லா பேச வரும்!''
''கொடுக்கிறேன்; குடிச்சு தொலைங்க!''
அழைப்பு மணி சிணுங்கியது. வாசலில், சர்வதேச கூரியர் பையன் நின்றிருந்தான்.
''சார் பேருக்கு ஒரு பார்சல் வந்திருக்கு,'' என்றான்.
கையெழுத்து போட்டு வாங்கினான் சத்தீஷ்; பிரித்தாள் பாமா.
உள்ளே, 20 சிவப்பு ஒயின் பாட்டில்கள். பாட்டில்களுக்கிடையே ஒரு கடிதம் கிடந்தது. பிரித்தாள் பாமா. அதில், பிரதமர் கோடியின் நமஸ்காரம்; ஆண்டின், 366 நாட்களிலும் வெளியூர், 'டூரில்' இருக்கும் நான், தற்சமயம் பிரான்சில் இருக்கிறேன். இங்கு, சிவப்பு ஒயின் பாட்டில்களை பார்த்தேன். உங்கள் ஞாபகம் வந்தது; அனுப்பியுள்ளேன். குடித்தால், கறுப்பு நிறம் சிவக்கும். ஒயின்ஸ் ஆர் மேட் பார் இண்டியா.
இது எங்க கூட்டணிக்கு உங்களை வரச்சொல்லி நான் கொடுக்கும் சிறு கையூட்டு அல்ல; இன்னும் நீங்கள் எங்கள் கூட்டணியில் இருப்பதாக நம்பும், பிரதமர் கோடி...
''நெஞ்சை நெகிழ வச்சிட்டான்யா மனுஷன்,'' நெக்குறுதி போனார் தீர்த்தன்.
பொதுக்குழு கூடியது; பாமா, சத்தீஷ் மற்றும் யார் யாரோ பேசினர். கடைசியில் பேச எழுந்தார், ஆனந்த தீர்த்தன்.
''மக்கழே... உங்க எல்லாருக்கும் வணக்கம். நம்மோடு கூட்டணி சேர, தமிழகத்தின் மூன்று பிரதான அணிகள், முட்டி மோதுது. என் கவனத்த ஈர்க்க, தினந்தினம் ஆயிரம் விதமாய் முயற்சிக்கிறாங்க. அவர்கள பாக்க பாவமா இருக்கு. மூணு பேரில் யாரையும் ஏமாத்த நான் விரும்பல. அதனால, 234 தொகுதிகள மூணா பிரிச்சு, முதல், 78 தொகுதிகள்ல கி.மு.க.,வுடனும், அடுத்த, 78 தொகுதிகளில், வெகுஜன மறுவாழ்வு கூட்டணியோடும், மூன்றாவது, 78 தொகுதிகள்ல தா.ஜ.க., அணியோடயும் கூட்டு. என்ன திருப்தியா மக்கழே!''
பொதுக்குழு உறுப்பினர்கள், 'ஞே' என விழித்தனர். பின், ''பாஸ் வாழ்க... உலகத்தின் எந்த தேர்தலிலும் காணமுடியாத ராஜதந்திரத்த, நம்ம பாஸ் செய்துட்டார். ஈஸ்ட் ஆர் வெஸ்ட் அவர் பாஸ் இஸ் பெஸ்ட்!'' என்று கோஷமிட்டனர்.
பாமாவும், சத்தீஷும் நெற்றியில் அடித்துக் கொண்டனர்.
'உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா!'
நிலாமகன்

