
'அண்ணாவின் உவமைகள்' நூலில், இன்றைய தேர்தல் சூழ்நிலைக்கும் பொருத்தமாக கண்ணில்பட்ட சில உவமைகள்: காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற, அபாரத் திறமை பெற்ற ஈ.வெ.ரா., பிரசாரத்திற்காகப் புறப்படுகிறார் என்றால், என்ன அர்த்தம்? நோயாளி வீட்டுத் திண்ணையிலேயே பெரிய டாக்டர் உட்கார்ந்திருக்கிறார் என்றால் என்ன பொருள்? நோய் அவ்வளவு கடுமை என்று அர்த்தம்!கழகத்திலிருந்து விலகிச் சென்றோரைப் பற்றி கவலைப்படுகிறேன் என்று கருதிவிட வேண்டாம். கையிலே இருந்த சிரங்கு ஆறி விட்டால், 'ஐயையோ... சிரங்கு போய் விட்டதே...' என்று யாரும் கவலைப்பட மாட்டார்கள்.
இங்கே எல்லா கட்சிகளும் சேர்ந்திருப்பது, ஒரே வித்வான், பல ராகங்களைப் பாடுவது போன்றது. அதற்காக கல்யாணியும், காம்போதியும் ஒன்றாகக் கலக்க வேண்டும் என்பதில்லை. அதைப் போல, கூட்டணியில் சேர்ந்துள்ள நாம், அவரவருக்கு உள்ள சொந்தக் கருத்தை விட்டுக் கொடுத்து விட்டால், கருத்துள்ள அரசியல்வாதியாக மாட்டோம்.
ஒருவனை தேள் கொட்டினால், 'ஆ...' என்று அலறுகிறான். அதனால், அவனை விட, தேள் பெரியது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதைப் போல, நான் தோற்றதால், தோல்வி என்னை அழுத்தி விடும் என்று யாரும் கருதாதீர்கள்.
மிக உயர்ந்த இடத்துக்குச் சென்ற பிறகும் கூட, சிலருக்கு மட்ட ரகப் பேச்சு தான் பேச முடிகிறது. தங்கக் கலயத்திலே ஊற்றி வைத்தாலும், கள் பொங்கி வழிந்து, நாற்றம் வீசத்தானே செய்யும்!
ரயிலில் பயணம் செய்கிற மனிதனுக்கும், பல்லிக்கும் வித்தியாசம் வேண்டாமா... இங்கிருந்து ஒரு மனிதன் திருச்சி சென்று திரும்பினால், வீட்டுக்கு ஏதேனும் பொருள் வாங்கி வருவான். பல்லியும் தான் இவன் கூட பயணம் செய்து திரும்பியுள்ளது; இருந்தும் என்ன பயன்!
ராம அரங்கண்ணல் எழுதிய, 'நினைவுகள்' நூலிலிருந்து: அண்ணாதுரை மறைந்த இரு நாட்களிலேயே, அவர் வீட்டுப்பக்கம் யாரையும் காணவில்லை. எந்நேரமும் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் என ஆலவட்டம் சுற்றிய வீடு, வெறிச்சோடிக் கிடந்தது.
இடைக்கால முதல்வரான நாவலர் வந்தார். அவரை வீட்டின் பின்கட்டுக்கு அழைத்துச் சென்று, 'பாத்தீர்களா... எப்படியிருந்த வீடு இப்ப எப்படி இருக்குன்னு... முன்போல, இங்கு ஒரு போலீஸ் செக்யூரிட்டியும், ஆள் நடமாட்டம் இருக்க, அண்ணாதுரையின் மனைவி ராணிக்கு
எம்.எல்.சி., பதவி கொடுத்து, அமைச்சரவையில் அமைச்சர் போஸ்ட் கொடுக்கும்படி செய்யுங்க; சாதாரண இலாகா கூட போதும்...' என்றேன்.
'ராணிக்கா... அதெல்லாம் எப்படிப்பா முடியும். நல்லாயிருக்காது...' என்று, 'பட்'டென்று பதில் சொன்னார் நெடுஞ்செழியன்.
நேரே கருணாநிதியிடம் போய் நடந்ததைச் சொன்னேன். 'நெடுஞ்செழியன் அப்படியா சொன்னார்... அப்போ, அவர் தான் முதல்வர்ன்னு நினைக்கிறாரா...' என்றார் கருணாநிதி.
'என்ன சொல்றீங்க...' என்றேன் ஒன்றும் புரியாமல்!
'எல்லாரும் என்னை தான் முதல்வரா இருக்கணும்ன்னு சொல்றாங்க. மதியழகன், சத்தியவாணி முத்து, நாஞ்சில் மனோகரன்,
எம்.ஜி.ஆர்., எல்லாருமே நான் தான் வரணும்ன்னு பிடிவாதமா பேசறாங்க. வேணும்ன்னா அவங்ககிட்ட போய்ப் பேசிப் பாருங்களேன்...' என்றார்.
மதியழகனைப் பார்க்கப் போனேன். உடன், சத்தியவாணி முத்துவும் இருந்தார். இருவரும், நெடுஞ்செழியன் ஏன் வரக்கூடாது என்பதற்கு பல காரணங்களை விளக்கினர். அங்கிருந்து ராமாவரம் தோட்டத்துக்கு சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தேன். அவர், என்னை தனியாக அழைத்து, ஏன் நெடுஞ்செழியன் வரக்கூடாது என்று விளக்கமாக சொன்னார்.
வீட்டுக்கு வந்தேன்; நெடுஞ்செழியன் அழைப்பதாக ஆள் வந்தது. போனேன்; நிலைமையை சொன்னேன். கண்ணீர் விட்டார்.
மறுநாள், எம்.எல்.ஏ.,களின் கூட்டம்.
சட்டப்பேரவை தலைவராக கருணாநிதி பெயர் முன்மொழிந்து, வழிமொழியப்பட்டது. சபையில் நிசப்தம்! வந்தவாசி வி.டி.அண்ணாமலை முன்மொழிய, அரக்கோணம் எஸ்.ஜே.ராமசாமி வழிமொழிய, நெடுஞ்செழியன் பெயரும் சொல்லப்பட்டது. மேலும், நிசப்தம்! நெடுஞ்செழியன் எழுந்து, 'போட்டியில்லாமல் என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால், ஏற்கிறேன்; இல்லையென்றால் விலகிக் கொள்கிறேன்...' என்றார். தமிழக முதல்வராக, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார், கருணாநிதி.
நடுத்தெரு நாராயணன்

