PUBLISHED ON : டிச 17, 2017

பசியில் சிலர், 'என்னை நானே தின்னுட்டு இருக்கேன்...' என்று சொல்வது வழக்கம். இதற்கான விடையை கூறும் கதை இது:
விதர்ப்ப நாட்டை ஆட்சி செய்து வந்தார், சுதேவன் என்பவரின் மகன் சுவேதன். செல்வ வளம், நற்குணம் இருந்தாலும், பொருளில் மிகுந்த பற்று கொண்டிருந்ததோடு, அறச் செயல்களில் ஈடுபடாமல், தான் மட்டும் நன்றாக உண்டு, உடுத்தி மகிழ்வதிலேயே காலத்தை கழித்து வந்தார்.
காலம் கடந்தது; முதுமையடைந்த சுவேதன், 'இனி, தவம் செய்து, இறையருளை பெற வேண்டும்...' எனத் தீர்மானித்து, அரசாட்சியை தன் மகனிடம் ஒப்படைத்து, காட்டிற்கு தவம் செய்யச் சென்றார்.
தன் தவத்தின் பலனாக, பிரம்மலோகத்தை அடைந்தார், சுவேதன். ஆனால், அங்கு சென்றதும், அவருக்குள், அடங்காத கோரப்பசி ஏற்பட்டது. காரணம் புரியாமல், பிரம்ம தேவரிடம் தன் நிலையைச் சொன்னார், சுவேதன்.
'சுவேதா... மன்னனாக இருந்தும், அறச் செயல்களை செய்யாமல், உன் உடம்பை போஷிப்பதிலேயே கவனம் செலுத்தினாய்; உன் பசியை தீர்த்துக்கொள்ள முனைந்தாயே தவிர, அடுத்தவர் பசியை தீர்க்க முயற்சி செய்யவில்லை. அதன் காரணமாகவே, இந்த பசி பிணி உன்னை பீடித்துள்ளது...' என்றார் பிரம்மதேவர்.
'சுவாமி... கொடிய இந்த பசிப்பிணி நீங்கும் வழியை கூறுங்கள்...' என, வேண்டினார், மன்னர்.
'பூலோகத்தில் நீ தவம் செய்த இடத்திற்கு அருகில் உள்ள குளத்தில், நீ ஆர்வத்துடன் போஷித்து வளர்த்த உன் உடல் மிதக்கும். அவ்வுடலை தின்று, பசியை போக்கிக் கொள்...' என்றார்.
இதைக் கேட்டு திடுக்கிட்டு, 'சுவாமி... இது என்ன கொடுமை... என் உடலை நானே உண்பதா... இந்த அபவாதத்திலிருந்து எனக்கு விடுதலை கிடையாதா...' என்று கேட்டார்.
'எந்த ஒரு செயலுக்கும் முடிவு என்று ஒன்று உண்டு. நீ அகத்திய முனிவரை எப்போது தரிசிக்கிறாயோ, அன்று, உன்னைப் பீடித்திருக்கும் பாவம் நீங்கும்...' எனச் சொல்லி, சுவேதனின் பார்வையிலிருந்து மறைந்தார், பிரம்மதேவர்.
பூலோகத்தில் தான் தவம் செய்த இடத்திற்கு வந்தார், சுவேதன். அங்கிருந்த குளத்தில் சுவேதனுடைய உடல் மிதந்து கொண்டிருந்தது. அறம் செய்யாத தன் தீவினையை நொந்தபடி, அதை உண்ணத் துவங்கினார்.
ஒருநாள், சுவேதன், தன் உடம்பை புசிக்கும் வேளையில், அங்கு வந்தார், அகத்தியர். அவரை தரிசித்ததும், சுவேதனின் தீவினை நீங்கியதுடன், அதுவரை அவரை ஆட்டிப்படைத்த பசிப் பிணியும் நீங்கியது.
அகத்தியரின் திருவடியை வணங்கி, தன் வரலாற்றைக் கூறி, தன் துயரை தீர்த்ததற்காக, ஒரு திவ்ய ஆபரணத்தை சமர்பித்தார்.
'உண்டி கொடுத்தோர்; உயிர் கொடுத்தோரே...' என்பதை மறந்து, தன் உடலை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், இயன்றவரை அடுத்தவர் பசியை தீர்ப்போம்; இன்னல்கள் எல்லாம் தீர்ந்து போகும்!
பி. என். பரசுராமன்
தெரிந்ததும் தெரியாததும்!
காலை எழுந்தவுடன், எவற்றை பார்த்தால் நன்மை கிட்டும்?
காலை எழுந்தவுடன், சொர்ணம், கண்ணாடி, சுமங்கலி, கன்னி, மஞ்சள், நவரத்னம், பழம், பசு, ஹோமம் செய்தவன், உள்ளங்கை மற்றும் தெய்வ பிம்பம் இவற்றை பார்த்தால், நன்மை கிட்டும்.
