
ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல்!
'வந்தே மாதரம்' என்ற, தேசப்பற்று பாடலை அடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், விழிப்புணர்வு பாடல்களை வெளியிட்டுள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது, தண்ணீர் பாதுகாப்பு குறித்து, ஒரு பாடல் வெளியிடப் போகிறார். தண்ணீர் தேவை மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படுத்தவே, இப்படியொரு பாடலை தான் உருவாக்கியிருப்பதாக சொல்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான்.
சினிமா பொன்னையா
நயன்தாராவின், 'சென்டிமென்ட்' நடிகர்!
கதையின் நாயகியாக நடித்த சில படங்கள், நயன்தாராவுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தபோது, கோல மாவு கோகிலா படம் கை கொடுத்தது. அந்த படத்தில் அவரை, ஒருதலையாக காதலிப்பது போல் நடித்திருந்தார், யோகிபாபு. அதையடுத்து, அவர் இணைந்த, தன் படங்களெல்லாமே வெற்றி பெற்றிருப்பதால், 'நான் நடிக்கும் படங்களில், கண்டிப்பாக, யோகிபாபு இருக்க வேண்டும்...' என்று, இயக்குனர்களிடம், அவரது பெயரை சிபாரிசு செய்கிறார். இச்சித்த காரியம் ரகசியம் இல்லை!
எலீசா
அஞ்சலியை அடியோடு மாற்றிய, அனுஷ்கா!
நடிகை அனுஷ்கா, வாய் பேசாத மாற்றுத் திறனாளியாக நடித்துள்ள, நிசப்தம் படத்தில், போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார், அஞ்சலி. இந்த படத்தில் நடித்தபோது, அனுஷ்காவுடன் போட்டி மனநிலையுடன் நடித்து வந்தார், அஞ்சலி. ஆனபோதும், அதை பொருட்படுத்தாத, அனுஷ்கா, அவருக்கு நிறைய நடிப்பு, 'டிப்ஸ்' கொடுத்திருக்கிறார். இதனால், மனம் உருகிப்போன அஞ்சலி, 'அனுஷ்கா மீது, எனக்கு இருந்த போட்டி மனப்பான்மை, அடியோடு போய் விட்டது. இனி, என்னுடன் நடிக்கும் எந்த நடிகைகளையும், போட்டி, பொறாமையுடன் பார்க்க மாட்டேன். அதை வைத்து, எதையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன்...' என்கிறார். சொன்னால் போல் கேட்டால், சுட்டாற் போல் கொடுப்பேன்!
— எலீசா
மீண்டும், டி.ராஜேந்தர்!
வீராசாமி படத்திற்கு பின், படம் இயக்கி, நடிப்பதை தவிர்த்திருந்தார், டி.ராஜேந்தர். 13 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும், இன்னிசை காதலன் என்றொரு படத்தை இயக்கி, 'ஹீரோ' ஆக நடிக்கிறார். வழக்கம் போல், இந்த படத்திலும், ஒன்பது பாடல்களை வைத்துள்ள, டி.ஆரிடம், '64 வயதில், 'ஹீரோ'வா...' என்று, சிலர் கேட்க, '70 வயதில், ரஜினி, 'ஹீரோ' ஆக நடிக்கும் போது, நான் நடிக்கக் கூடாதா...' என்று, எதிர் கேள்வி விடுத்துள்ளார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* 'கிசுகிசு'வும், சுள்ளானும் பிரிக்கவே முடியாத இரட்டையர்களாகி விட்டனர். ஏற்கனவே கேரளத்து பால் நடிகை உட்பட, பலருடன் 'கிசுகிசு'க்கப்பட்டு வந்தவர், கடந்த ஒரு ஆண்டாக எந்த பிரச்னையிலும் சிக்காமல் இருந்து வந்தார். சமீபத்தில் வெளியான, அவரது புதிய படத்தில் அறிமுகமான, வடமாநில நடிகை, சுள்ளானின் காலை சுற்றிக்கொண்டுள்ளார். இதையடுத்து, அம்மணியின் அன்பில் நனைந்த நடிகர், பல நாட்களில், ஸ்டார் ஓட்டலில் தான், 'டேரா' போடுகிறார். கூடவே, அம்மணிக்கு, 'கால்ஷீட்' பேசும் அளவுக்கு, மேனேஜராக மாறி விட்டதாகவும் சொல்கின்றனர்.
'நீங்க தானே, 10ம் வகுப்பு, 'இ' பிரிவுக்கு, வகுப்பு ஆசிரியர். உங்க வகுப்பில், தனுஷ் என்ற பையன், பள்ளியில், புதிதாக வந்து சேர்ந்த பெண்ணுக்கு, வீட்டுப்பாடமெல்லாம் எழுதி தர்றானாம்; 'ரிக்கார்டு நோட்'ல படம் வரைஞ்சு தர்றானாம்; பள்ளி நேரம் முடிந்தால், அவ வீடு வரைக்கும், சைக்கிளில் அழைத்து போய் விட்டுட்டு வர்றான். ஏற்கனவே, வகுப்பு தோழி ஒருத்திக்கு, இது மாதிரி செய்து, பிரச்னையாயிடுச்சு...
திரும்பவும் ஆரம்பித்து விட்டானா... என்னவென்று விசாரியுங்கள்...' என்றார், தலைமை ஆசிரியர்.
சினி துளிகள்!
* தனுஷின், பட்டாஸ் படத்தில் அறிமுகமான, மெஹ்ரின் பிர்சாடா, 'நயன்தாரா தான், என் ரோல் மாடல்...' என்கிறார்.
* கோப்ரா என்ற படத்தில், 11 வேடங்களில் நடித்து வருகிறார், விக்ரம்.
* கடந்த, 1990-களில், கதாநாயகியாக இருந்த, சுமா ரங்கநாத், கபடதாரி என்ற படத்தில், 'ரீ - என்ட்ரி' கொடுத்துள்ளார்.
அவ்ளோதான்!