
அளவிடுவதில் பல விதங்கள் உண்டு. துணியை, மீட்டர் கணக்கில்; டீசல் முதலானவைகளை, லிட்டர் கணக்கில்; காய் முதலானவைகளை, கிலோ கணக்கில்; துாரத்தை, கி.மீ., கணக்கில்- என, அளவிடுகிறோம்.
கங்கைக் கரையில் முனிவர்கள் எல்லாம் கூடி, ஏதோ கணக்கிட்டு அளந்து பார்க்கின்றனராம்; அது என்ன கணக்கு, என்ன அளவு என்று பார்க்கலாம்...
கங்கைக் கரையில் முனிவர்கள் எல்லாம் கூடியிருந்தனர்; கூட்டத்திற்கு, தலைமை வகித்தார், வசிஷ்ட முனிவர். அவர்களிடையே, 'மனிதன் உயர்வை அடைய வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும்?' என, வாதம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது, அந்த பக்கமாக வந்தார், மார்க்கண்டேயர். ஏழு கல்பங்களாக வாழ்பவர், மார்க்கண்டேயர்; நான்கு யுகங்கள் சேர்ந்தது, ஒரு கல்ப காலம் என்பது, ஒரு கணக்கு; இதற்கு மாற்றாக கணக்கதிகாரமும், வாயு புராணமும் வேறு கணக்கை சொல்லும்.
அப்படிப்பட்ட மார்க்கண்டேயர் வருவதை பார்த்ததும், முனிவர்கள் அனைவரும் எழுந்து, அவருக்கு ஆசனம் கொடுத்தனர். மார்க்கண்டேயர் உட்கார்ந்ததும், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தார். அவருடைய பார்வை, வசிஷ்டரின் அருகில் உட்கார்ந்திருந்த, அவரின் பேரனான, பராசரர் மீது விழுந்தது.
அப்போது, உபநயனம் முடிந்திருந்த, பராசரருக்கு, 7 வயது. பராசரரை பார்த்ததும், மார்க்கண்டேயர் எழுந்து போய், அவரை வணங்கினார்.
அதை பார்த்ததும், முனிவர்கள்
அனைவரும் திகைத்தனர். பராசரும் திகைத்து, வணங்கிய மார்க்கண்டேயருக்கு, பதில் வணக்கம் செலுத்தினார்.
'தாங்கள், என்னை விட வயதில் மூத்தவர். அதனால் தான், தங்களை வணங்கினேன். தாங்கள், என்னை வணங்க வேண்டாம்...' என்றார், மார்க்கண்டேயர்.
கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள் குழம்பினர்.
'மாமுனிவரே... என்ன சொல்கிறீர்கள், உங்கள் பேச்சு வேடிக்கையாக இருக்கிறது. 7 வயதே ஆன சிறுவன் நான். தாங்களோ, ஏழு கல்பங்கள் கண்டவர். அப்படிப்பட்ட தாங்கள், என்னை பெரியவன் என்கிறீர்களே...' என கேட்டார், பராசரர்.
'இந்த முறைப்படி, வயதை கணக்கிடுவது தவறு. தெய்வ சிந்தனையில் நாம் செலவிடும் நேரத்தை கொண்டே, நம் வயதை கணக்கிட வேண்டும். உதாரணமாக, நெல்லை அளப்பதாக வைத்துக் கொள்ளுங்கள், பதரை நீக்கி விட்டுத்தானே அளக்கிறோம்...
'அதுபோல, தெய்வ சிந்தனையில் செலவிடும் நேரத்தை தவிர, மற்ற செயல்களில் செலவிடும் நேரத்தை நீக்கி தான், வயதை கணக்கிட வேண்டும். அதன்படி பார்த்தால், எனக்கு, 5 வயது தான் ஆகிறது. தங்களுக்கோ, 7 வயதாகிறது. அதன் காரணமாகவே, தங்களை வணங்கினேன்...' என்றார், மார்க்கண்டேயர்.
பணிவில் மட்டுமல்ல; தெய்வ பக்தியிலும், முனிவர்கள் எவ்வளவு தலை சிறந்தவர்களாக இருந்தனர் என்பதை விளக்கும், நிகழ்வு இது.
அப்பர் சுவாமிகள், 'அரியானை' என, துவங்கும் பதிகத்தில், 10 முறை, 'பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவாத நாளே' என்கிறார்.
தெய்வத்தை நினைப்போம், தீங்குகள் விலகும்!
பி. என். பரசுராமன்