PUBLISHED ON : பிப் 23, 2020

புத்தியிருந்தால், எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்கு அடையாளமாக , சென்னையில் ஒருவர், நிஜ யானை போலவே, பொம்மை யானை செய்து, வாடகைக்கு விட்டு வருகிறார்.
முன்பெல்லாம், கோவில் விழா, திருமண விழா, மாநாடு என்று, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம், யானை நின்று வரவேற்பது வழக்கம். சென்னை போன்ற பெரு நகரங்களில், நிஜ யானைக்கு அனுமதியில்லை.
வேண்டுமானால், செங்கல்பட்டை தாண்டி, நிஜ யானையை, விழாவிற்கு அழைக்கலாம். பொது இடங்களில் நிற்க வைக்க, ஒரு நாள் வாடகையாக, 60 ஆயிரம் ரூபாயும், 25 கிலோ அரிசி, 25 கிலோ அவல், தென்னை மட்டை மற்றும் யானை வந்து போக, வண்டி வாடகை தரவேண்டும்.
இப்படியெல்லாம் கொடுத்து அழைத்து வந்தாலும், யானையால் மக்களுக்கு எந்த தொந்தரவும் நேர்ந்திடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்.
சென்னை போன்ற பெருநகரங்களில், இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்தார், பீமராஜா. நிஜ யானை போலவே, பொம்மை யானையை தயார் செய்ய முடிவெடுத்தார்.
யானைகள் அதிகமுள்ள கேரள மாநிலத்திற்கு சென்றார். அவர்கள் மூலம், யானைகளின் தேசமான தாய்லாந்திலிருந்து பொருட்களை தருவித்து, கேரளாவில், யானை பொம்மையை உருவாக்கி, சென்னைக்கு எடுத்து வந்தார்.
இந்த பொம்மை யானை, பார்ப்பதற்கு நிஜ யானை போலவே இருக்கிறது. 10 அடி உயரம் கொண்ட இதன் தோல், தும்பிக்கை எல்லாம் தத்ரூபமாக காணப்படுகிறது.
யானையை போலவே தலை, காது, தும்பிக்கையை ஆட்டும்; கண்களை உருட்டும், தண்ணீரை பீய்ச்சும், பிளிரும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக, யானைக்குள் கருவிகள் இருக்கின்றன. இந்த யானையின் பெயர், தங்க சண்முகராஜா.
எந்த விசேஷத்திற்கு கேட்டாலும் வாடகைக்கு வந்து விடும். யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. சாப்பாடு செலவு இல்லை; பயமின்றி பக்கத்தில் நின்று, 'செல்பி' எடுத்துக் கொள்ளலாம் என்பதால், குழந்தைகளும், பெரியவர்களும் போட்டி போட்டு, இந்த பொம்மை யானையுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த பொம்மை யானை, சென்னைக்கு வந்து, ஆறு மாதம் ஆகிறது. சமீபத்தில், ஹெல்மெட் விழிப்புணர்வை வலியுறுத்தி, அண்ணா நகர் வளைவு அருகே, ஹெல்மெட்டுடன் நின்று, பலரது கவனத்தையும் கவர்ந்தது.
மாற்றி யோசித்தால், வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழும், பீமராஜாவிடம் பேச: 98402 66234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எல். முருகராஜ்

