sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 23, 2020

Google News

PUBLISHED ON : பிப் 23, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

வயது: 30, படிப்பு: எம்.ஏ., கணவர் வயது; 31. படிப்பு: எம்.பி.ஏ., நான், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கணவர், வங்கியில் பணிபுரிகிறார். எங்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

சிறு வயது முதலே எனக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். பள்ளி இறுதி வகுப்பு முடிப்பதற்குள், தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும் படித்துள்ளேன்.

படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், விவாதிக்கவும் ஆர்வம் அதிகம்.

வேலையில் சேர்ந்த பின், படிப்பதற்கோ, படித்ததை விவாதிப்பதற்கோ வாய்ப்பு கிட்டவில்லை. கணவருக்கு, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் இல்லை. எதையோ இழந்தது போல உணர்கிறேன்.

அலுவலக தோழியரிடம் புத்தக வாசிப்பு பற்றி பேச முடிவதில்லை. வீடு மற்றும் அலுவலக பிரச்னை குறித்து பேசவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

இச்சூழலில் தொடர்ந்து இருக்கவே அலுப்பாக இருக்கிறது. என் மனதில் உள்ள நேர்மாறான எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது போல் உணர்கிறேன்; மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

ஏதாவது ஒரு புத்தகத்தை படிக்காமல் என்னால் இருக்க முடிவதில்லை. வீட்டு வேலையில் எந்த குறையும் வைக்காமல் இருந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்தாலே, கணவருக்கு பிடிப்பதில்லை. புத்தக படிப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் அம்மா.

இப்படிக்கு, உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

'ஒரு வாசகன் சாவதற்குள், ஆயிரம் முறை வாழ்ந்து விடுகிறான். ஒரு பண்பாட்டை அழிக்க, புத்தகங்களை எரிக்க வேண்டியதில்லை; வெறுமனே மக்களின் வாசிப்பு பழக்கத்தை நிறுத்தினால் போதும். தனித்துவமான கையடக்க மந்திர விளக்கு, புத்தகங்கள்...

'ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தை அறிந்துகொள்ள, அவன் என்ன புத்தகங்களை வாசிக்கிறான் என, புலனறிந்தால் போதும். வாசிப்பின் முடிவில், நாம் எல்லாருமே கதைகளாக மாறி விடுகிறோம். புத்தகம், கையில் பிடித்திருக்க கூடிய இனிய கனவு...' போன்ற பொன்மொழிகளை, உன் கடிதத்தை வாசிக்கும் இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

பொதுவாக, கல்லுாரி படிப்பு, வேலை மற்றும் திருமணத்திற்கு பின், ஒட்டுமொத்தமாக வாசிப்பை நிறுத்தி விடுகின்றனர், வாசகர்கள். ஆனால், நீ, ஒரு குழந்தை பெற்ற பிறகும் வாசகியாக தொடர்வது பாராட்டக் கூடிய விஷயம்.

மகளே, வாசிப்பு உன் வாழ்க்கையை பலவிதங்களில் மேம்படுத்தி இருக்கும். உன் அலுவலக பணியை அர்ப்பணிப்புடன் செய்வாய். சிறந்த குடும்ப தலைவியாக விளங்குவாய். ஒரு முன்மாதிரி தாயாக, மகனின் மீது பாசத்தை கொட்டி வளர்ப்பாய். உன் வாழ்க்கையில் குறுக்கிடும் பிரச்னைகளை சாமர்த்தியமாக தீர்த்து வைப்பாய்.

வாசிப்பு என்பது, அந்தரங்க நண்பனை போல. அந்தரங்க நண்பனிடம் கதைப்பதை எல்லாம் பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயமில்லை.

உன் மகனுக்கு, வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்து. அவனிடம், தமிழ் சிறுவர் கதைகளை கொடுத்து வாசிக்க சொல். நீ வாசித்த கதைகளில் தகுதியானவற்றை மகனிடம் கூறு.

'வாசிப்பு, என் தனி மனித உரிமை. அதில் குறுக்கிடாதீர்...' என, கணவருக்கு நாசூக்காக அறிவுறுத்து.

புகைப்படத்தை போடாமல், முகநுாலில் உறுப்பினராகு. எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நட்பு விண்ணப்பம் கொடு. அவர்கள் எழுதின, படித்த கதைகளை உன்னிடம் பகிரட்டும்; நீ படித்த கதைகளை அவர்களிடம் பகிர்.

வாசிக்கும் ஆர்வமுள்ள தோழியரை, 'வாட்ஸ் - ஆப்' குழு மூலம் சேர். அவர்களுடன் அளவளாவு.

தினமும் நடந்ததை, அன்றைய இரவில், டைரியாக எழுது. படித்த புத்தகங்களை பற்றிய விமர்சனங்களை கூட எழுதலாம். 21 வயதான நீ, ஏழெட்டு ஆண்டுகள் டைரி எழுதி பழகினால், நீயே எழுத்தாளராக மாறலாம்.

நுாலகத்தில் உறுப்பினராக சேர். விரும்பிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசி. தினமும், வீட்டுக்கு, 'தினமலர்' போன்ற தமிழ் தினசரி ஒன்றை வரவழை. வாசிப்பு பழக்கம் இல்லாத கணவரும், வாசிப்பின் வாசலில் நிற்கும் மகனும், வாசிப்பு பழக்கத்தில் நீந்த ஆரம்பித்து விடுவர்.

பெண் எழுத்தாளர்கள், பெண் கவிஞர்களுடன் பேனா நட்பு பாராட்டு. நீ வாசித்த கதை நன்றாக இருந்தால், பத்திரிகைக்கு, வாசகர் கடிதம் எழுது.

நல்ல வாசிப்பு உள்ள மனிதரின் மனங்களில், ஒருபோதும் எதிர்மறை எண்ணங்கள் பூக்காது. உன்னை போன்ற வாசகியர் தான், எழுத்துலகின் பொக்கிஷங்கள். நீங்கள் இருக்கும் வரை, எழுத்துலகின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும். 100 வயது வரை வாசித்துக் கொண்டே இரு மகளே, வாழ்த்துக்கள்!

- என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us