
மீண்டும் மோதிக்கொள்ளும், ரஜினி - கமல்!
ரஜினியும் - கமலும் சினிமாவில், எதிரும் புதிருமான போட்டியாளர்களாக திகழ்ந்தனர். சமீபகாலமாக, அவர்களுக்கிடையே இருந்து வந்த போட்டி மனப்பான்மை குறைந்து விட்டது. கடைசியாக, ரஜினியின், சந்திரமுகி, கமலின், மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள், ஒரே நாளில் வெளியாகின.
இந்நிலையில், மீண்டும் தங்களுக்கிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியாக, தற்போது, ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து வரும், இந்தியன்2, நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிக்கும், ஜெயிலர் படங்களை ஒரே நாளில் வெளியிட்டு, மீண்டும் பலப்பரீட்சை பார்க்க, இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக, ரஜினி - கமலின் சினிமா கேரியரில், மீண்டும் பரபரப்பு ஏற்பட துவங்கி இருக்கிறது.
— சினிமா பொன்னையா
'ஹீரோ'களுக்கு அதிர்ச்சி கொடுக்கும், வாணி போஜன்!
சின்னத்திரையின் நயன்தாராவாக விளங்கிய, வாணி போஜன், சினிமாவுக்கு வந்தபோது, சில, 'ஹீரோ'கள், அவருடன் நடிக்க மறுத்து விட்டனர். ஆனபோதிலும், போராடி வெற்றி பெற்று, அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டமும் உருவாகி விட்டது.
இந்நிலையில், முன்பு வாணி போஜனை தவிர்த்த நடிகர்களே, அவருடன் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அந்த பட வாய்ப்புகள் தன்னை தேடி வந்தபோது, தடாலடியாக மறுத்து, 'ஆரம்பத்தில், சின்னத்திரை நடிகை என்பதால், இந்த, 'ஹீரோ'கள் என்னை மிக மட்டமாக நினைத்தனர்.
'அதனால், எதிர்காலத்தில் இந்த நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தாலும் ஏற்க கூடாது என்று, அப்போதே முடிவெடுத்தேன். இந்த, 'ஹீரோ'களுடன் நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி, அந்த பட வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விட்டேன்...' என்கிறார், வாணி போஜன்.
இதனால், தங்களை, வாணி போஜன் அசிங்கப்படுத்தி விட்டதாக, சில இரண்டாம் தட்டு, 'ஹீரோ'கள் அவர் மீது, செம கடுப்பில் உள்ளனர்.
— எலீசா
ஜெய்யை டீலில் விட்ட, அஞ்சலி!
ஜெய் - அஞ்சலி இருவரும் காதலித்து வந்தபோது, சினிமாவில் ஏகத்துக்கு, 'பிசி'யாக இருந்தார், ஜெய். ஆனால், அஞ்சலியுடனான காதலில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, ஜெய் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் ஓடவில்லை. இதனால், அவரது மார்க்கெட் டவுண் ஆகி கிடக்கிறது. இந்த நேரத்தில் மீண்டும், அஞ்சலிக்கு நுால் விட துவங்கியுள்ளார், ஜெய்.
'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பது போன்று, என் வெற்றிக்கு பின்னால், அஞ்சலி இருந்திருப்பது இப்போது தான் தெரிகிறது. உன்னை பிரிந்த பிறகு தான், நான் நடித்த எந்த படமும் ஓடவில்லை...' என்று, அவரிடத்தில் சொல்லி மீண்டும் காதல் வரம் கேட்டுள்ளார். என்றாலும், இன்னமும் அம்மணியிடமிருந்து, 'கிரீன் சிக்னல்' கிடைக்கவில்லை.
— எலீசா
யோகி பாபுவின், இரண்டு முகம்!
தற்போது, சந்தானம், சூரி போன்ற காமெடியன்கள், 'ஹீரோ'வாகி விட்டதால், யோகி பாபு மட்டுமே, முன்னணி காமெடியனாக இருக்கிறார். இந்நிலையில், யோகி பாபு இரண்டு முகம் காட்டி வருவதாக, கோலிவுட் இயக்குனர்கள், அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
அதாவது, முன்னணி 'ஹீரோ'களின் பட வாய்ப்பு என்றால், கொடுத்த சம்பளத்தை வாங்கி, கேட்ட தேதியில், 'கால்ஷீட்' கொடுத்து நடிக்கும், யோகி பாபு, இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு 'ஹீரோ'களின் படங்கள் என்றால், கறாராக சம்பளம் பேசுவதோடு, 'நான் கொடுக்கும் தேதியில் தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும்...' என்று, நிபந்தனை போடுகிறார்.
இதனால், 'செகன்ட் கிரேடு ஹீரோ'களை வைத்து படம் இயக்குபவர்கள், யோகிபாபுவின் இந்த நிலைப்பாட்டை ரொம்பவே விமர்சிக்கின்றனர்.
சினி துளிகள்!
* ஐந்தாண்டு இடைவெளிக்கு பின், மீண்டும் கோலிவுட்டில், ரைடு என்ற படத்தின் மூலம்,'ரீ என்ட்ரி' ஆகியுள்ளார், ஸ்ரீதிவ்யா. முதல் ரவுண்டில், குத்து விளக்காக வலம் வந்தவர், இப்போது, 'குத்தாட்டம் போடுவதற்கும் நான் தயார். முக்கியமாக, 'மெகா ஹீரோ'களின் படங்கள் என்றால், 'டூ பீஸ்' உடையில் குதிக்கவும், தயார்...' என்று சொல்லி கமர்ஷியல் இயக்குனர்களை, 'அட்ராக்ட்' பண்ணி வருகிறார்.
* படங்களில் துக்கடா உடை அணிந்து நடித்தாலும், தான் கலந்து கொள்ளும் பட விழாக்களில் கேரள பாரம்பரிய புடவை அணிந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார், அமலா பால்.
* சாணிக்காயிதம் படத்தில், கான்ஸ்டபிளாக நடித்திருந்த, கீர்த்தி சுரேஷ், ஜெயம்ரவியுடனான புதிய படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவருக்கு, சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.
அவ்ளோதான்!