
ஜெய்க்கு நம்பிக்கை கொடுத்த, ரஜினி!
பகவதி படத்தில், விஜய்க்கு தம்பியாக சினிமாவில் அறிமுகமானார்,ஜெய். அதன் பிறகு, பல படங்களில், 'ஹீரோ'வாக நடித்து விட்டபோதும், கடந்த சில ஆண்டுகளாக ஜெய்யின் மார்க்கெட், 'டவுண்' ஆகி கிடக்கிறது. அதோடு, அஞ்சலியுடன் காதல், 'பிரேக் - அப்' ஆனதை அடுத்து, நடிப்பிலும் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார்.
தற்போது, ரஜினி நடிக்கும், ஜெயிலர் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், உற்சாகம் அடைந்துள்ளார், ஜெய்.
'ரஜினி படத்தில் நடிக்கிறேன் என்ற பரபரப்பை முன்வைத்தே, பல படங்களில், 'ஹீரோ'வாக ஒப்பந்தமாகி, விட்ட மார்க்கெட்டை பிடித்து காட்டுகிறேன்...' என்று, உற்சாகத்துடன் சொல்கிறார்.
— சினிமா பொன்னையா
சில்க் ஸ்மிதாவாக உருவெடுக்கும், டாப்ஸி!
கடந்த, 1980களில் முன்னணி கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர், சில்க் ஸ்மிதா. இவரது வாழ்க்கை கதையை மையமாக வைத்து ஹிந்தியில், தி தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. வித்யா பாலன் நாயகியாக நடித்த அந்த படம், 'சூப்பர் ஹிட்' அடித்தது.
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட கூடுதல் கவர்ச்சிகரமான கதையில் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த, வித்யா பாலன் மற்றும் கங்கனா ரணாவத் போன்ற பாலிவுட் நடிகையர் நடிக்க மறுத்த நிலையில், ஆடுகளம் டாப்ஸி, தி தர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு, ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'என்னைப் போன்ற சக நடிகையின் வாழ்வியல் படம் என்பதால் கவர்ச்சி, ஆபாசம் என்பதை எல்லாம் மறந்து, சில்க் ஸ்மிதாவாகவே மாறி நடிக்கப் போகிறேன்...' என்கிறார்.
— எலீசா
மீண்டும் வருகிறார், எமி ஜாக்சன்!
ஏ.எல்.விஜய் இயக்கிய, மதராசபட்டினம் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார், லண்டன் நடிகை எமி ஜாக்சன். அதன் பிறகு, தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி, ஹிந்தி சினிமா வரை, பல படங்களில் நடித்தார்.
கடந்த, 2019ல், ஜார்ஜ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு ஆண் குழந்தை பெற்றுக் கொண்ட, எமி, இப்போது புதிய காதலர் ஒருவருடன், 'டேட்டிங்' செய்து வருகிறார். இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் தன்னை அறிமுகம் செய்த, ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில், 'ரீ - என்ட்ரி' கொடுக்கப் போகிறார்.
அதன் காரணமாக, மீண்டும் தன் உடலை கட்டுக்கோப்பாக்கும் முயற்சியில் தீவிரம் அடைந்து இருக்கும், எமி ஜாக்சன், தன் வருகையை, அபிமான இயக்குனர் மற்றும் 'ஹீரோ'களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளார்.
— எலீசா
முருகேசனாக, வடிவேலு!
வடிவேலு நடித்த, பல காமெடி கேரக்டர்களின் பெயர்கள், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாய் சேகர், வக்கீல் வண்டு முருகன், தீப்பொறி ஆறுமுகம் என, பல கேரக்டர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வரிசையில், சந்திரமுகி படத்தில் அவர் நடித்த, முருகேசன் கேரக்டரும், ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது. தற்போது, சந்திரமுகி- 2 படத்திலும், முருகேசன் வேடத்திலேயே மீண்டும் நடித்து வருகிறார், வடிவேலு.
'பழைய முருகேசனை மீண்டும் அப்படியே திரையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதற்காக, பழைய, 'பாடி லாங்குவேஜ் - டயலாக் டெலிவரி'யை அப்படியே வெளிப்படுத்தி வருகிறேன்...' என்கிறார்.
— சி.பொ.,
தொகுப்பாளராக மாறும், ஜீவா!
பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வரும், ஜீவா தற்போது, 'ஆஹா' என்ற ஓ.டி.டி., தளத்தில் வெளியாகும், 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'புதிய வடிவங்களை ஆராய்வது எப்போதுமே சவாலானது. அதனால், சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள தயாராகி விட்டேன். நான் எப்போதுமே, 'கேம் ஷோ'களின் தீவிரமான ரசிகன். அதனால், 'கேம் ஷோ'வுக்கான தொகுப்பாளராக என் பயணத்தை துவங்க, 'ஆஹா' தமிழ் தடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
'கமலஹாசன், அர்ஜுன், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களே தொகுப்பாளர்களாக இருக்கும்போது, அந்த பட்டியலில் நானும் இடம் பெறுவதை பெருமையாக கருதுகிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* 'ஒரு படத்திலாவது அம்மா- - மகன் சம்பந்தப்பட்ட, 'சென்டிமென்ட்' கதையில், எனக்கு அம்மாவாக, நதியா நடிக்க வேண்டும்...' என்று, தன் அபிமான இயக்குனர்களிடத்தில், வேண்டுகோள் வைத்துள்ளார், மலையாள நடிகர் பகத் பாசில்.
அவ்ளோதான்!