sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்தியில் பூத்த மலர்கள்

/

அந்தியில் பூத்த மலர்கள்

அந்தியில் பூத்த மலர்கள்

அந்தியில் பூத்த மலர்கள்


PUBLISHED ON : செப் 18, 2022

Google News

PUBLISHED ON : செப் 18, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஷ்மிகா மந்தனா போல, குத்துப்பாட்டு பாடியபடி கிழக்கு திசையிலிருந்து எழுந்தது சூரியன். குரூப் டான்சர்களாய் ஆயிரம் கிரண கைகள்.

படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான், மவுனன் யாத்ரிகா. வயது, 52. 'டிவி' தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதித் தரும் பணி செய்து கொண்டிருக்கிறான். ஆள் பார்க்க, 35 வயது தான் மதிக்கத் தோன்றும். நகைச்சுவையாய் பேசுவதில் சமர்த்தன்.

நாக்கை வலதுபுறம் பத்து தடவையும், இடதுபுறம் பத்து தடவையும் சுழற்றினான். நாக்குக்கு இது ஒரு வகை பயிற்சி. தினமும் காலையில் எழுந்ததும் இந்த பயிற்சியை செய்வான், யாத்ரிகா.

அம்மா காஞ்சனாவின் அறைக்கு போனவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவரை, நீண்ட நேரம் உறுத்தான்; அவரது கால்களை தொட்டு கும்பிட்டான்.

சிறுசிறு உடற்பயிற்சிகள் செய்து, பல் துலக்கினான். அதற்குள் அம்மா எழுந்திருந்தாள். எலும்பு பொடிவு நோயால் அவதிப்படும், 80 வயது அம்மாவுக்கு, ஒரு கோப்பையில் தண்ணீரும், டூத்பிரஷில் பற்பசையும் பிதுக்கிக் கொண்டு வந்து, பல் துலக்க உதவினான். இரு கோப்பைகளில் காபி தயாரித்து வந்து, ஒன்றை தனக்கு எடுத்து, மற்றொன்றை அம்மாவிடம் நீட்டினான்.''இன்று சாயந்தரம் டாக்டர்கிட்ட போகணும். தயாரா இரு அம்மா,'' என்றான்.

''சரிப்பா.''''ராகவனின், 'கபடவேடதாரி' புத்தகம் கேட்டியே... 'ஆர்டர்' பண்ணிருக்கேன். இன்னைக்கி வந்திரும். 20 நாளைக்கு வச்சு வச்சு படி.''

''சரிப்பா.''அம்மாவை குளிக்க வைத்தான். பூத்துவாலையால் ஈரத்தை ஒற்றி மாற்று உடை உடுத்தி விட்டான்.

''காலைல என்னம்மா சாப்பிடுற?''

''எது கொடுத்தாலும் சரிதான்.''

''அப்படி சொல்லக் கூடாது. உனக்கு மிகவும் பிடிச்ச தக்காளி ஊத்தப்பம் செஞ்சு, தொட்டுக்க தேங்காய் சட்னி.''

''உனக்கெதுக்கப்பா வீண் சிரமம்?''

''அதெல்லாம் ஒண்ணுமில்ல.''

ஊத்தப்பத்தை சுட்டு, தேங்காய் சட்னி ஊற்றி, தட்டை நீட்டினான். சாப்பிட சிரமப்பட்ட அம்மாவுக்கும் ஊட்டி விட்டான்.

''மதியம் என்னம்மா செய்யணும்?''

''சாம்பார் சாதம், தொட்டுக்க அப்பளம் வச்சு சமாளிச்சுக்கலாம்.''

அம்மா சாப்பிட்டு முடித்ததும் மாத்திரைகளை கொடுத்தான். அடுத்த அரைமணி நேரத்தில் சாம்பார் சாதம் செய்து முடித்தான்.

அம்மாவின் அறையிலேயே இருக்கும் கணினி முன் அமர்ந்து, தொடரின் வசனங்களை டி.டி.பி., செய்ய ஆரம்பித்தான். நாவல் படிக்க ஆரம்பித்தாள், அம்மா.வாசலில், 'ஓலா' டாக்சி வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இளம் பெண் இறங்கினாள். அவள், 'டிவி' தொடர்களில் கதாநாயகியாக நடிப்பவள்.

''எக்ஸ்க்யூஸ் மீ... உள்ளே வரலாமா?'' என கேட்டபடி வீட்டுக்குள் பிரவேசித்தாள். அம்மா - மகன் முன் வந்து நின்றாள்.

''காலை வணக்கம் மவுனன்... காலை வணக்கம் அம்மா.''

''நீ எதுக்கு இப்ப இங்க வந்த தேன்மொழி?''

''இப்ப வராம இனி எப்ப வர்றது? எல்லா பிரச்னையையும் இன்னைக்கி பேசி தீர்த்திடலாம்ன்னு வந்திருக்கேன்.''

புத்தகத்தை மூடி வைத்த அம்மா, ''என் பக்கத்ல வந்து உக்காரு... என்ன பிரச்னைன்னு சொல்லு சரி பண்ணிடலாம்.''

''என் பிரச்னையே நீங்கதான்ம்மா!''

''என்னம்மா சொல்ற?''

''உங்க பேரு என்னங்கம்மா?''

''காஞ்சனா.''

''வயசு?''

''எண்பது முடிஞ்சு எண்பத்தி ஒண்ணு ஆரம்பிச்சிருக்கு.''

''உங்க வீட்டுக்காரர், அதாவது, மவுனன் யாத்ரிகாவின் அப்பா இறந்து எத்தனை வருஷமாகுது?''

''முப்பத்தி ஐந்து வருஷமாகுது.''

''உங்களை எத்தினி வருஷமா மவுனன் யாத்ரிகா பராமரிச்சுட்டு வர்றாரு?''

''அவனோட, 17வது வயசிலயிருந்து நான், அவன், 'கஸ்டடி'லதான் இருக்கேன்.''

''உங்களுக்கு உடம்புல என்ன பிரச்னை?''

''கால்சியம் குறைபாடு. அதனால, எனக்கு எலும்பு பொடிவு நோய் வந்திருச்சு. நடமாட்டமே இல்லாம படுத்தே கிடக்கிறேன்.''

''உங்களுக்கு எத்தினி பிள்ளைகள்?''

''மவுனன் யாத்ரிகாவுக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா... வசதி வாய்ப்புகளோடு சென்னைல தான் வசிக்கிறாங்க.''

''ஏன் அவங்க உங்களை பார்த்துக்க மாட்டாங்களா?''

''அதுல அவங்களுக்கு விருப்பமில்லை.''

''மவுனன் யாத்ரிகா ஏற்கனவே திருமணமாகி, 'டைவர்ஸ்' ஆனவரா?''

''இல்லம்மா... அவன் என்னை பார்த்துக்கிறதுக்காக கல்யாணமே பண்ணிக்கல.''

''யாத்ரிகாவுக்கு திருமணம் தேவைப்படாத அளவுக்கு உடம்புல எதாவது குறை.''

''வாயைக் கழுவும்மா... அவன் முழு ஆரோக்கியமா இருக்கான்.''

''உங்களை, உங்க மகன் மவுனன் யாத்ரிகா, இன்னும் எத்தனை வருஷத்துக்கு பார்த்துக்குவாரு?''குறுக்கிட்டான், யாத்ரிகா.

''இந்த கேள்விக்கு நான் பதில் சொல்றேன். என் கடைசி மூச்சிருக்கிற வரைக்கும் என் அம்மாவை பார்த்துப்பேன். எனக்காக அம்மா, அம்மாவுக்காக நான்... அம்மாவும் நானும் தனி உலகத்துல வாழுறோம்.

''எங்க உலகத்துல இலக்கியம் தான் எல்லாம். பூகம்பம் வந்தா ஒருத்தரை ஒருத்தர் கட்டிபிடிச்சுக்கிட்டு ஜோடியா செத்திருவோம்... அதத்தான் தினம் தினம் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்.''

''அம்மா தேன்மொழி... என்னை இவ்வளவு கேள்விகள் கேட்கறியே... நீ யாரும்மா?''

''உங்க மகன் வசனம் எழுதுற தொடர்களில் கதாநாயகியா நடிக்கிறவ நான்... உங்க மகனை நாலு வருஷமா துரத்தி துரத்தி காதலிக்கிறேன்... உங்க மகன் பிடி கொடுத்து பேச மாட்டேங்கறார்...

''என்னைக் கண்டா விலகி விலகி ஓடுறார். உங்க மகனுக்கு தகுந்த வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும்ன்னு உங்களுக்கு தோணலையா? இன்னும் உங்களை பார்த்துக்கணும்ன்னு நினைச்சு தான், என் காதலை ஏத்துக்காம தலைதெறிக்க ஓடுறாரு!''

''அப்படி பேசாதம்மா... அவனோட 25வது வயசிலயிருந்து திருமணம் செஞ்சிக்க சொல்லி வற்புறுத்திக்கிட்டுதான்ம்மா இருக்கேன். நான் உயிரோட இருந்தா அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டான் என சொல்லி, இருமுறை தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணினேன். இருமுறையும் என்னை காப்பாற்றி, 'இனி தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டேன்' என, என்னிடம் சத்தியம் வாங்கிட்டான்.''

''நடந்ததெல்லாம் விடுங்கம்மா. இப்ப நான் உங்ககிட்ட மடிபிச்சை கேட்டு வந்திருக்கிறேன். உங்க பையனின் மனசை மாத்தி எனக்கே எனக்கானவரா என் திருவோட்ல பிச்சை போட்ருங்க!''

''தேன்மொழி!'' என, கத்தியவன், ''என் அம்மாகிட்ட இப்படி பேச யார் உனக்கு உரிமை கொடுத்தது? திருமணமும், தாம்பத்யமும் எனக்கு தேவைப்படாத விஷயங்கள். இரு மனம் ஒத்த நண்பர்கள் போல நானும், என் அம்மாவும்.

''அம்மாவின் கதை படிக்கிற பழக்கம் தொத்தி தான், நான் எழுத்தாளனாக மாறி சீரியல்களுக்கு கதை வசனம் எழுதிக்கிட்டு இருக்கேன். எங்க ரெண்டு பேரோட விளையாட்டு பொம்மைகள் எதுன்னு தெரியுமா உனக்கு?

''ரா.கி.ரங்கராஜன் கதைகள், சாண்டில்யன் கதைகள் அம்பை கதைகள், சிவசங்கரி கதைகள் மற்றும் தி.ஜானகிராமன் கதைகள் தான், எங்க விளையாட்டு பொம்மைகள். குடி, வெற்றிலை பாக்கு சீவல், பான்பராக், புகழ் மற்றும் அதிகாரம் சிலருக்கு போதை தரலாம். எனக்கு அம்மாவின் அன்பு தான் போதை.''

''நீங்க ஒரு, 'பெனடிக்!' நாளைக்கே உங்க அம்மா இறந்திட்டா அல்லது நாளைக்கே நீங்க இறந்திட்டா உங்க இலக்கியம் சார்ந்த தாய்- - மகன் உலகம் என்னவாகும்?''

''நாளை உயிரோடு இருப்போம்ன்றதே உனக்கும் வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயம் தானே? எங்கள் இலக்கியம் சார்ந்த தாய் - மகன் பாச உலகத்தை எப்போது முடித்து வைப்பது என்பது இறைவனுக்கு தெரியும்.''

''நான் சொல்வதை கேளுங்க, உங்க அம்மாவின் செலவுகளை, 'ஸ்பான்சர்' செய்து, முதியோர் இல்லத்தில் சேர்ப்போம். ஒரு சுபயோக தினத்தில், நாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வோம்.

''வாரம் ஒருமுறை உங்க அம்மாவை போய் பார்ப்போம். அம்மா படிக்க நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம். அம்மாவுக்கு மொபைல்போன் வாங்கிக் கொடுங்க. தினம் இருமுறை அவருடன் அளவளாவுங்க!''

''ஒரு நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கும்போது அதை ஏன் கலைக்கப் பார்க்கிறாய்? பெற்ற தாயையும், வளர்த்த தந்தையையும் பழைய காயலான் கடை பொருட்களாக துாக்கி எறியும் இளைய தலைமுறைக்கு, என் வாழ்க்கை பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமாக திகழட்டுமே... என் மீதான காதலை உதறிட்டு, தாம்பத்யம் சாராத உறவுமுறைகளை தலையில் துாக்கி வைத்து கொண்டாடு.''

தேன்மொழிக்கு, மவுனன் யாத்ரிகாவின் வார்த்தைகள் போதி மரமாயின. 'சீரியல்' வாய்ப்புகளுக்காக வயதான பெற்றோரை துாத்துக்குடியில் விட்டு வந்தது ஞாபகம் வந்தது. 'சென்னையில் ஒரு பிளாட் பார்த்து பெற்றோரை அங்கு குடியமர்த்தி அவர்களை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சுயநலமில்லாத வாழ்க்கைதான் கொஞ்சம் வாழ்ந்து பார்ப்போமே...' என நினைத்துக் கொண்டாள்.

''என் அறிவுக்கண்ணை திறந்து விட்டீர்கள், யாத்ரிகா!''

''எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறாய். காபி குடி,'' என்றான்; குடித்தாள், தேன்மொழி. அமர்நிலையில் நகர்ந்து, யாத்ரிகாவின் இலக்கிய தோழி காஞ்சனாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

''அடுத்த தடவை உங்களை பார்க்க வரும்போது மனுஷ்யபுத்திரனின், 'மிஸ் யூ' கவிதை தொகுப்பை கொண்டு வந்து தருகிறேன்.'' பதிலுக்கு தேன்மொழியை நெற்றியில் முத்தமிட்டாள், காஞ்சனா.துளசி வாசனையடித்தது.

ஆர்னிகா நாசர்






      Dinamalar
      Follow us