
என். ஆசைத்தம்பி, சென்னை: 'வரும், 2026ல் தமிழகத்தில், பா.ம.க., ஆட்சி அமைக்கும்...' என்று, அதன் தலைவர் அன்புமணி கூறியுள்ளாரே...
ஒருவருக்கு வரும் கனவை, யார் எப்படி தடுக்க முடியும்?
பாவம்... 2026ஐ நினைத்து, கனவு கண்டு விட்டு போகட்டும்!
மு. சுந்தரம், சிலமலை, தேனி: நடந்து செல்லும்போது, சாலையின் இடதுபுறம் செல்ல வேண்டுமா? வலதுபுறம் செல்ல வேண்டுமா?
'ஆல்வேஸ் கீப் லெப்ட்' - இடது புறம் தான் செல்ல வேண்டும் என்பது விதிமுறை... ஐரோப்பாவில் நம்மை ஆண்ட இங்கிலாந்து தவிர மற்ற நாடுகளில் வலது புறம்... அப்படி தான், வண்டி ஓட்டவும் வேண்டும்... அமெரிக்கா, கனடாவிலும் அப்படியே... இங்கெல்லாம் அப்படி கார் ஓட்டி கஷ்டப்பட்டு இருக்கிறேன்!
ஆர். சாந்தி, நெல்லை: மகளின் படிப்புக்கு எதிராக இருந்த மாணவனை, விஷம் வைத்து கொன்ற தாய் சாதித்தது என்ன?
இதுபோன்ற எண்ணமுடைய மற்ற பெற்றோருக்கு பாடமாய் அமைந்து, சிறை சென்றது தான் சாதனை!
* என்.ஏ. நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி: சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், 'ஆன்லைன் ரம்மி' சூதாட்ட விளம்பரங்களில், அது தரும் கெடுதிகள் தெரியாதது போல் பேசுகின்றாரே...
சினிமாவில் வருமானம் இல்லை... கட்சியினாலும் வருமானம் இல்லை... 'டிவி'யிலும், பத்திரிகைகளிலும் சூதாட்ட தற்கொலைகள் பற்றி, பார்த்தவரும், படித்தவர் என்றாலும், அதை மறந்து, வருமானத்திற்காக, விளம்பரங்களில் தோன்றுகிறார்!
பி. பரத், கோவிலாம்பூண்டி, சிதம்பரம்: தமிழக அரசு நுாலகங்களில், 'தினமலர்' கிடைப்பதில்லையே ஏன்?
தினமும் முதல் பக்கத்தில், தி.மு.க., செய்தியும், குறைந்தபட்சம் நான்கு பத்தி முதல்வர் ஸ்டாலினின் படமும் வரவேண்டும்... தி.மு.க.,விற்கு எதிரான செய்திகள் நம் நாளிதழில் வரக்கூடாது என எதிர்பார்க்கின்றனர்...
நம் நாளிதழில் அதை எதிர்பார்க்க முடியுமா? அதனால், 'தினமலர்' வாங்கக் கூடாது என, அரசு நுாலகங்களுக்கு உத்தரவு போட்டு விட்டனர்!
சி. கார்த்திகேயன், சாத்துார்: 'எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் நல்ல சூழல் உருவாகும்...' என்கிறாரே, பீஹார் மாநில ஐக்கிய ஜனதாதள கட்சியின் முதல்வர் நிதிஷ்குமார்...
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலிலேயே இவர்கள் முகம் வெளுத்து விட்டதைத் தான் அறிவீர்களே... ஒவ்வொரு திசை நோக்கி நிற்கும் எதிர்க்கட்சிகள் இணையவே வாய்ப்பில்லை!
* ஜி. ஜெயபாலன், மதுரை: 'தேசிய தலைவராக, ஸ்டாலின் ஆகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது...' என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சொல்கிறாரே...
ஹிந்தி புலவரல்லவா, முதல்வர் ஸ்டாலின்... அதனால் தான் திருமாவளவன் இப்படி சொல்கிறார் போலும்!