
பா - கே
சமீபத்தில், அலுவலகத்தில், மருத்துவ முகாம் நடைபெற்றது. நம் உடல் உறுப்புகள், எந்தெந்த நேரத்தில், வீரியமாக செயல்படும் என்பதற்கு ஒரு அட்டவணையை கூறினார், முகாமுக்கு வந்திருந்த, தலைமை மருத்துவர். அது:
* விடியற்காலை, 3:00 முதல் 5:00 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில், தியானம், மூச்சு பயிற்சி செய்தால், ஆயுள் நீடிக்கும்
* காலை, 5:00 முதல் 7:00 மணி வரை - பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில், காலைக் கடன்களை முடிக்க வேண்டும். இதனால், மலச்சிக்கல் ஏற்படாது
* காலை, 7:00 முதல் 9:00 மணி வரை - வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது, நன்கு ஜீரணமாகும்
* காலை, 9:00 முதல் 11:00 மணி வரை - மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவை செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது
* காலை, 11:00 முதல் 1:00 மணி வரை - இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாக பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்
* பிற்பகல் 1:00 முதல் 3:00 மணி வரை - சிறுகுடல் நேரம். மிதமான சாப்பாட்டுடன் ஓய்வு எடுக்க வேண்டும்
* பிற்பகல் 3:00 முதல் 5:00 மணி வரை - சிறுநீர் பையின் நேரம். நீர்க் கழிவுகளை வெளியேறச் செய்யும்
* மாலை 5:00 முதல் 7:00 மணி வரை - சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறை வழிபாடு செய்வதற்கு ஏற்றது
* இரவு 7:00 முதல் 9:00 மணி வரை - பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றியிருக்கும் ஒரு ஜவ்வு - இரவு உணவுக்கேற்ற நேரம்
* இரவு, 9:00 முதல் 11:00 மணி வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். உறங்க செல்லலாம்
* இரவு, 11:00 முதல் 1:00 மணி வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்
* இரவு 1:00 முதல் 3:00 மணி வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் துாங்க வேண்டும்.
என்ன வாசகர்களே...உடல் நலனில் அக்கறை உள்ளவரா நீங்கள்... அப்படியானால், மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றுங்களேன்!
ப
ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் போன்ற, வி.ஐ.பி.,களுக்கு தனி மருத்துவர் இருப்பர். வி.ஐ.பி.,களை கவனமாக பார்த்துக் கொள்வதே, இவர்களது முக்கிய பணி.வி.ஐ.பி.,களை பற்றி சகல விஷயங்களும் இவர்களுக்கு தெரிந்து இருந்தாலும், அவர்கள் பற்றிய விபரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதோ அல்லது எழுதுவதோ மிகவும் அரிது.சில மருத்துவர்கள், தான் எந்த வி.ஐ.பி.,க்கு மருத்துவராக இருந்தாரோ, அவர் இறந்த பின், அவரை பற்றி புத்தகம் எழுதுவதுண்டு. அப்படி சில மருத்துவர்கள், குறிப்பிடும், வி.ஐ.பி.,கள் பற்றிய தகவல்கள் தான் இது:
* பிரிட்டன் முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு, தனி டாக்டராக இருந்தவர், லார்ட் மோரன். டாக்டரின், டைரி குறிப்புகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்தபோது, அதில் ஒரு அதிர்ச்சி தகவல் இருந்தது. 'சர்ச்சிலுக்கு,1942ல், 'ஸ்டிரோக்' வந்தது. அதன்பின், அவர் ஒரு நோயாளியாகதான் வலம் வந்தார்...' என்பது தான் அது.சர்ச்சிலுக்கு, 'ஸ்டிரோக்' வந்தது என்ற தகவலே, அதுவரை வெளியே கசிந்ததில்லை. இதனால், இந்த விஷயம் இங்கிலாந்தில் பரபரப்பாக பேசப்பட்டது.பிரபலங்கள் என்றாலே அவர்களைப் பற்றி, 'ஆஹா ஓஹோ' என்ற தகவல்களை மட்டுமே வெளியிட்டு, அவரை விஸ்வரூப மனிதராக மாற்றி வைத்திருப்பர். அந்த, 'இமேஜ்' உடையும்போது...
* 'தி பிரைவேட் லைப் ஆப் சேர்மன் மா' என்ற புத்தகம், சீன முன்னாள் அதிபர் மா சே துங்கின் தனி மருத்துவர், லிசிசுய் என்பவரால் எழுதப்பட்டது. 20 ஆண்டுகள், மா சே துங்கின் தனி மருத்துவராக பணிபுரிந்தவர்.இவர், 1990களில், அமெரிக்காவில் குடியேறியதும், மா சே துங் பற்றி புத்தகம் எழுதினார். அதில், 'மா சே துங், ஒரு அருவருப்பான நபர். வயதாக வயதாக, இளம் வயது பெண்களுடன் தான் இரவு துாங்குவது வழக்கம். குளிப்பது அபூர்வம். பல்லை தேய்க்கவே மாட்டார்...' என்று எழுதியுள்ளார்.
* கடந்த, 1966ல், இந்திரா, பிரதமர் ஆனதும், மாத்துார் என்பவர், அவருடைய தனிப்பட்ட மருத்துவர் ஆனார்.இந்திராவின் கணவர், பெரோஸின் கடைசி நாட்களில் அவருக்கு சிகிச்சை அளித்தவர், இவர்.இந்திரா, பிரதமர் ஆனபோது, அவருக்கு வயது, 49 தான். அத்துடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தார். அதனால், தனக்கென ஒரு மருத்துவர் வைத்துக்கொள்ள, முதலில் சம்மதிக்கவில்லை.பதவியேற்ற சில மாதங்களுக்கு பிறகு, ஒரு விமானத்தில் சென்றபோது, விமானம் குலுங்கியதில், அவருடன் சென்ற சிலர் காயமடைந்தனர். பலன், இந்திராவுக்கு தனி மருத்துவர் தேவை என உணர்ந்து, மாத்துாரை நியமித்தனர்.
இந்திராவின் இறப்புக்கு பின், டாக்டர் மாத்துார் எழுதிய புத்தகத்தில் இப்படி எழுதியிருந்தார். கிடைத்த பேப்பர்களில், இந்திரா ஏதாவது சின்ன சின்ன குறிப்புகளை எழுதுவதுண்டு. இவற்றை நிறையவே சேகரித்துள்ளார், டாக்டர். அதிலிருந்து ஒன்றிரண்டு...
* வீட்டிலிருந்த ஒரு பொருள் காணாமல் போய் விட்டது. குறிப்பிட்ட காங்கிரஸ்காரர் தான் அதை எடுத்துச் சென்றிருக்கணும்
* லோக்சபா, 'நோட் பேடு'களிலும் நிறைய எழுதுவது வழக்கம். அதில், தன்னைப் பற்றி, 'கரடி மாதிரி குளிர் காலத்தில் துாங்கறேன். பன்றி மாதிரி சாப்பிடறேன். பிறகு, பூனை மாதிரி வயிறு தொல்லையால் அவதிப்படுகிறேன்...' என, எழுதியுள்ளார்.
சஞ்சய் இறந்ததற்கு அடுத்தநாள், வழக்கம்போல் இந்திராவை பார்க்கப் போயுள்ளார், டாக்டர்.'டாக்டர், என்னுடைய வலது கரம் துண்டாகி விட்டது...' என்று கூறியிருக்கிறார், இந்திரா.
ஆனால், மூன்று நாட்களிலேயே இயல்பு நிலைக்கு திரும்பி பழையபடி ஆகிவிட்டதை கண்டு ஆச்சரியமானேன் என்று, பதிவு செய்துள்ளார், டாக்டர் மாத்துார்.