PUBLISHED ON : செப் 18, 2022

சங்கருக்கு நாடக ஆர்வம் இருப்பதை அறிந்த அவனது பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தினர். ஆனால், பெற்றோர் சொல் மேடை ஏறவில்லை; நாடக மேடை ஏறி விட்டார், சங்கர்.
ஆம், அப்போது சென்னையில் கிறிஸ்துவ மிஷினரி ஒன்று, நிறுவனத்துக்கு நிதி திரட்ட, நாடகம் நடத்த திட்டமிட்டது. தொழில் முறை நாடகக் குழுவை வைத்து நடத்தினால், வசூலில் பெரும்பகுதி அவர்களின் ஊதியமாகவே போய் விடும் என்பதால், நடிப்பு ஆர்வம் கொண்ட மாணவர்களை கொண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. மிஷினரியில், விவேகானந்தா கல்லுாரி பேராசிரியர் ஒருவரும் இருந்தார். சங்கரின் நடிப்பு ஆர்வத்தை முன்னரே அறிந்திருந்தவர். சங்கரிடம் விஷயத்தை தெரிவித்ததும், ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அதிகாரப்பூர்வமாக அவர் மேடையேறிய முதல் நாடகம் அதுதான். நாடகத்தின் பெயர், 'காதலுக்கு மருந்து!'எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடந்த அந்த நாடகத்திற்காக, முதன் முதலாக தொழில்முறை, 'மேக் - அப்' போட்டுக் கொண்டார், சங்கர். 'மேக் - அப்'புடன் கண்ணாடி முன் மீண்டும் மீண்டும் நின்று, பூரித்துப் போனார்.
நாடகத்தில், சங்கரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த ஆண்டு, கல்லுாரியில் நுண்கலை மன்றச் செயலராக போட்டியிட்டு வென்றார், சங்கர். அதுவரை வழக்கமான பாணியில் இயங்கி வந்த மன்றத்தை, எல்லாரும் ஆச்சரியப்படும்படி நடத்திக் காட்டினார். மாணவர்களிடையே கலை, இலக்கிய ஆர்வம் மேலோங்குவதற்கான பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார். ஓர் ஆண்டு நுண்கலை மன்ற விழாவுக்கு, நடிகர் ஜெமினி கணேசனையும், தனக்கு மிகவும் பிடித்த ஹிந்தி நடிகர், ராஜ்கபூரையும் அழைத்து வந்து, கல்லுாரி நிர்வாகத்தை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.
நுண்கலை மன்றத்தின் பாராட்டத்தக்க செயல்பாடுகளால், கல்லுாரியில், சங்கரின் மதிப்பு கூடியிருந்தது. கல்லுாரி முதல்வர் சுந்தரம் அய்யர், சங்கரை மிகவும் நேசித்தார்.கல்லுாரி நாடகங்களில் தவறாமல் பங்கேற்க துவங்கினார், சங்கர். பங்கேற்ற ஒவ்வொரு நாடகமும், அவரது நடிப்புக்கு கைத்தட்டலை பெற்றுத் தந்தது. கலைஞனுக்கு பலமும், பலவீனமும் இந்த கைத்தட்டல் தானே. முன்பை விட தீவிரமாக நாடக வாய்ப்பை தேடினார், சங்கர்.
நேரம் கிடைக்கும் போது, நாடக குழுக்களின் நாடகங்களை பார்ப்பது, நாடக உலகமே என, பொழுதைக் கழித்தார், சங்கர். ஆனாலும், கல்லுாரி படிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தான், பெற்றோருக்கு ஆறுதலான விஷயம்.
நாடக வாய்ப்புகளுக்காக காத்திருந்த சங்கரை, சினிமா வாய்ப்பு தேடி வந்தது. கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்த சமயம், 'என் தெய்வம்' என்ற நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அன்று, சிறப்பு விருந்தினராக வந்திருந்தார், சினிமா உலகில் புகழ்பெற்ற இயக்குனரான, பி.என்.ரெட்டி.சினிமா உலகிற்கு ஈடாக, நாடக உலகம் இயங்கி வந்த அந்நாளில், அன்றைய சினிமா பிரபலங்களை சிறப்பு விருந்தினராக வரவழைப்பது, நாடகக் குழுக்களின் வழக்கம். காரணம், வரும் பிரபலங்களால் நாடகம், பத்திரிகை விமர்சனங்களில் இடம்பெற்று, நல்லதொரு விளம்பரம் கிடைக்கும். மற்றொன்று, சினிமா பிரபலங்கள், நாடகங்களில் நடிப்பவர்களின் நடிப்பால் கவரப்பட்டால், அவர்களுக்கு சினிமா வாய்ப்பும் கிடைக்கும்.
நாடகம் முடிந்ததும், மேடையேறிய பி.என்.ரெட்டி, சங்கரின் நடிப்பை சிலாகித்துப் பேசினார். சம்பிரதாயமான பாராட்டு என்றே அதை நினைத்தார், சங்கர்.ஆனால், அடுத்த கட்டமாக, சங்கரின், 'மேக் - அப்' அறைக்கு வந்து, மேடையில் சொன்னவற்றை மீண்டும் கூறி, கை குலுக்கி, 'உங்களை, என் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறேன். நாளை என் அலுவலகத்துக்கு வாருங்கள்...' என்றார்.
'மன்னிக்கணும் சார். நான் கல்லுாரி மாணவன். வீட்டில் கேட்டுச் சொல்கிறேன்...' என்றார், சங்கர்.'ஓ... மாணவரா நீங்கள். அப்படியென்றால் படிப்பை முதலில் முடியுங்கள்...' என்று விடை பெற்றுக் கொண்டார்.
நாடக நடிப்புக்கு இடையே, 1958ல், அவரது கல்லுாரி படிப்பு முடிந்தது. சிறந்த மதிப்பெண் எடுத்து, தேறியிருந்தார். டிகிரி முடித்து விட்ட மகனை, பெற்றோர் நெருக்கத் துவங்கினர்.'நாடக ஆசையெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு பிழைக்கிற வழியைப் பாரு. கைத்தட்டலை வெச்சு சோறு சமைக்க முடியாது. சேர்த்து வெச்ச சொத்து எத்தனை நாளைக்கு வரும்...'நாளைக்கு உனக்கு குழந்தை, குட்டின்னு வந்துட்டா, தாத்தா சொத்துல தான் அவங்களுக்கும் சோறு போடுவியா. ஒழுங்கா, லா காலேஜ்ல விண்ணப்பம் போடு. தேர்வு கமிட்டியில என் நண்பர்கள் சிலர் இருக்காங்க, 'சீட்' வாங்கிடலாம்...' என, ஆற்றாமையில் பொங்கினார், தந்தை சுப்ரமணியன்.
அதேசமயம், கல்லுாரி படிப்பு முடிந்த நிலையில், அவரது நண்பர்கள் வட்டம் குறைந்திருந்தது. தனிமை பல சிந்தனைகளுக்கு வித்திட்டது. பெற்றோர் சொற்படிதான் நடந்தாக வேண்டும்.வேறு வழியில்லாமல், சட்டக் கல்லுாரிக்கு விண்ணப்பித்தார். அவர் கெட்ட நேரம், தகுதியின் அடிப்படையிலேயே, 'அட்மிஷன்' கிடைத்தது. தன் பரிந்துரையின்றி, மகனுக்கு சட்டக் கல்லுாரியில் இடம் கிடைத்ததில், அப்பாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
முதல் ஆண்டு சுமூகமாகவே சென்றது படிப்பு.ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? நடிப்பு ஆசையை மறக்க மறக்க, அதுவே தான் கண் முன் வந்து படுத்தியது. அதன் பின் நடந்தது என்ன?
- தொடரும்.
இனியன் கிருபாகரன்