
'டாட்டூ' மோகம் வேண்டாமே!
உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். திருமண வயதை கடந்தும், பெண்ணுக்கு வரன் அமையவில்லை என புலம்பினார், உறவினர்.
தேவதை போல் பெண் இருந்தும் வரன் அமையவில்லையே ஏன் என்று யோசித்தேன். அவள் அருகில் சென்று பார்த்த எனக்கு, அதிர்ச்சி தான் ஏற்பட்டது. அவள் உடல் முழுவதும், காளி, நீலி, சூலி, ரத்தம் குடிக்கும் டிராகன் என, 'டாட்டூ' மயம். 'டாட்டூ குத்தினால், தோஷம் நீங்கும் என, ஜோசியர் ஒருவர் சொன்னதை கேட்டு குத்தினோம்.
அதுவே, இப்போது வரன் அமையாததற்கு காரணமாகி விட்டது...' என சங்கடப்பட்டார், பெண்ணின் தாய்.மூட நம்பிக்கையுடன், கை, கால், உடம்பெல்லாம், 'டாட்டூ' குத்திக்கொண்டால், யார் அவளை திருமணம் செய்து கொள்வர்! இந்த, 'டாட்டூ' குத்திக்கொள்ளும் பழக்கம் இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக, பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, வரன் அமையாமல் போவது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து, இளைய தலைமுறையினர், திருந்த வேண்டும். 'டாட்டூ' மோகம், இதுபோன்ற பல பிரச்னைகளுக்கும் வழிவகுத்து விடும், ஜாக்கிரதை!
- பி. பூங்கோதை, சிவகங்கை.
போலி சாமியாரின், புதுவித மோசடி!
எங்கள் பகுதியிலுள்ள ஒரு வீட்டினர், குறி சொல்ல வந்த நடுத்தர வயது சாமியார் ஒருவரை பிடித்து வைத்து, போலீசுக்கு தகவல் சொல்லி இருந்தனர்.
'என்ன காரணத்திற்காக, சாமியாரை போலீசிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள்...' என்று, விசாரித்தேன்.'இவன் நிஜ சாமியார் இல்லை; போலி...' என்றனர்.'போலி சாமியார் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்...' என்றதற்கு, காலி கண்ணாடி பாட்டில் ஒன்றை காண்பித்தனர்.
'இவன் இந்த பாட்டிலில், 'ஆசிட்' எடுத்து வந்து, எங்கள் வீட்டு முன்புறமுள்ள மரத்தின் வேர் பகுதியில் ஊற்றிக் கொண்டிருக்கும் போது, கையும் களவுமாக பிடித்து, விசாரித்தோம். அப்போதுதான், இவன் போலி சாமியார் என்பதும், இவனின் புதுவிதமான மோசடியையும் அறிந்து கொண்டோம்...' என்றனர்.
'புதுவிதமான மோசடியா... அப்படியென்ன மோசடி அது...' என்றேன்.'வீட்டில் யாருமில்லாத நேரத்தில், மரத்தின் வேர் பகுதியில், 'ஆசிட்'டை ஊற்றி, மரத்தை பட்டுப்போக செய்வான். சில நாட்களுக்கு பிறகு, குறி சொல்வது போல் வந்து, 'வீட்டில் செய்வினை வைத்திருப்பதால் தான், மரம் பட்டுப் போய் விட்டது' என்று பயமுறுத்தி, பரிகாரம் எனும் பெயரில், நம்மிடம் பணம் கறப்பது தான், இவன் வேலை...' என்றனர்.
உழைத்து பிழைக்க யோசிக்கின்றனரோ இல்லையோ, பிறரை ஏமாற்றி பிழைக்க, நன்கு யோசிக்கின்றனர். நாம் தான் உஷாரா இருக்கணும், நண்பர்களே!
- எஸ். நாகராணி, மதுரை.
'லக்கேஜ்' எடுத்துச் செல்வதற்கு முன்...
சென்னைக்கு, ஆம்னி பேருந்தில் பயணம் செய்தேன். பஸ், அவிநாசியை தாண்டியதும், ஒரு பெண், 'அய்யய்யோ...' என, அலறினார்.
இதனால், அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். உடனே, பஸ்சை ஓரம்கட்டச் சொல்லி, அந்த பெண்ணிடம் என்னவென்று கேட்டோம். 'கரப்பான் பூச்சி காலில் ஏறி விட்டது...' என்றார்.
'இதுக்கு போய் இப்படி கத்துனீங்களா...' என கேட்டு, அந்த கரப்பான் பூச்சியை தேடி பிடித்து, வெளியே துாக்கிப் போட்டோம்.
பின்னர், பஸ் கிளீனரிடம், 'என்னப்பா இது... கரப்பான் பூச்சி மட்டும் தானா... இல்ல, பாம்பு ஏதாவது இருக்கா...' என, கேட்டோம்.
'நாங்க, முழுமையாக சோதனை செய்த பின்னரே பஸ்சை எடுப்போம். இது, பயணியர், 'லக்கேஜ்' மூலம், அவர்களது வீட்டிலிருந்து வந்திருக்கக் கூடும். சிலர், பயணத்திற்கு ஒருவாரத்துக்கு முன்பே பொருட்களை எடுத்து வைப்பதுண்டு.
'அப்படி, 'பேக்' செய்து எடுத்து வைக்கப்பட்ட பொருட்களில், நொறுக்கு தீனிகள் இருந்து, பையின், 'ஜிப்' திறந்திருக்கும் பட்சத்தில், கரப்பான் பூச்சிகள் எளிதாக புகுந்து விடும். அதை கவனிக்காமல், பையை எடுத்து வரும்போது, இப்படி வில்லங்கமாகி விடுகிறது...' என்றார்.
கரப்பான் பூச்சி என்றால் பரவாயில்லை. இவ்வாறு, 'பேக்' செய்யப்பட்ட, 'லக்கேஜு'க்குள், விஷ ஜந்துக்கள் நுழைந்து, பயணத்தின்போது வெளியே வந்தால், அபாயகரமாக மாறி விடுமே!
இனிமேல், பயணத்திற்கு முன், 'பை'களை நன்கு சோதனை செய்த பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும் என, முடிவு செய்தேன். அப்ப நீங்க?
— ம.மொவன் குட்டி, கோயம்புத்துார்.