தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஹைட் பார்க்கில் பேசலாம் வாங்க....- ஜே.எம்.சாலி

ஹைட் பார்க்கில் பேசலாம் வாங்க....- ஜே.எம்.சாலி

ஹைட் பார்க்கில் பேசலாம் வாங்க....- ஜே.எம்.சாலி


PUBLISHED ON : செப் 19, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன் ஹைட் பார்க்கில்—

ஒரு குழுவினரிடையே ஆங்கிலேய மாது பேசுகிறார்.

'மக்கள் அனைவரும் சமம். ஏற்றத்தாழ்வுக்கு நாம் இடம் தரக்கூடாது... ஒப்புக் கொள்கிறீர்களா?' சற்று நேரம் அமைதி.

'பதில் வரவில்லையே... நான் சொன்னதை நீங்கள் மறுக்கவா முடியும்? நம் அனைவரையும் படைத்தவன் பரம்பொருளான கடவுள்!'

கை தட்டல்கள்.

'சரி... நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எங்கே திரும்பிச் செல்வீர்கள்?'

'நீங்கள் தான் சொல்ல வேண்டும் மேடம்... சொல்லுங்கள்...' என்று குரல் கொடுக்கிறார் ஓர் ஆடவர்.

கேள்வி பதில் தொடர்கிறது.

அருகில் மற்றொரு விவாதம். பத்து பன்னிரண்டு பேர் திரண்டுள்ளனர்.

'வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?' பேச்சாளர் கேட்கிறார்.

'நீங்களே சொல்லுங்கள்!' என்றார் ஒரு ரசிகர்.

'நாளை என்ன நடக்கும் என்பது தெரியுமா?'

'தெரியாது...'

'விசாரணை நாள் உண்டு. ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவர்!'

'எங்கே நடக்கும் விசாரணை? நீதிமன்றத்திலா?'

'கடவுள் முன்னிலையில் விசாரணை நடக்கும். நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் அப்போது தெரியும். கிடைக்க வேண்டிய பதில் உங்களுக்குக் கிடைக்கும். மரணத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவர்!'

அடுத்து பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற பிரசாரம்.

'இயேசுவின் பிள்ளை யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்ற கேள்வி.

எல்லா கேள்விக்கும் பதில் இருக்கிறது பைபிள்-விவிலியத்தில் என்று உரையை முடிக்கிறார் பிரச்சாரகர்.

பக்கத்தில் இன்னொருவர் ஒரு பெட்டி மேல் நின்றபடி பாடுகிறார்.

பிரான்சிலிருந்து வந்தவர். பாட்டு ஒன்று, இரண்டல்ல... 'இசை மழை பொழிய வந்திருக்கிறேன்; ரசித்து மகிழுங்கள்!' என்கிறார் அவர்.

தெற்கு ஜெர்மனியிலிருந்து வந்த மற்றொருவர், கொடியை உயர்த்திப் பிடித்து அசைக்கிறார்.

'ஒரே உலகம்... மக்களோ பலர். மறுக்கவா முடியும்? அதனால் தான், பல நாட்டுக் கொடிகளை இதோ கையில் வைத்திருக்கிறேன். இதில் கருத்து வேறுபாடு இருந்தால் நீங்கள் சொல்லலாம்.'

பதில் இல்லை.

'நான் அரசியல் பேசவில்லை. உலகம் ஒன்றே என்றாலும், சமயங்கள் பற்பல. அவற்றை நாம் மதிக்க வேண்டும். இயற்கையும், பருவநிலையும் இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு மாறிக் கொண்டே இருக்கும். இயற்கையை நாம் மதிக்க வேண்டும். ஒப்புக் கொள்கிறீர்களா?'

பேச்சாளர் முனையத்தில், ஒரே நேரத்தில் இப்படி பல நிகழ்ச்சிகள்.

இங்கு பேசலாம், சொற்பொழிவு, உரையாடல், விவாதம், நகைச்சுவைப் பேச்சு, பாட்டு எதையும் அரங்கேற்றலாம். அரசியல், ஆன்மிகம், சமய போதனைப் பேச்சுகளே அதிகம்.

இந்த கென்சிங்டன் பார்க் பகுதியில், தொடக்கமாக 1866ல், 'சீர்திருத்தவாதிகள் லீக்' என்ற அமைப்பு, மரத்தடியில் அரசியல் பிரசாரக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1872ல் பேச்சாளர் முனையம் முறையாக வடிவமைக்கப்பட்டது.

ஹைட் பார்க் பேச்சாளர் முனையத்துக்கு 150 ஆண்டு சரித்திரம் உண்டு. உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள பல முக்கிய தலைவர்கள், இந்த முனையத்தில் பேசியிருக்கின்றனர். கார்ல் மார்க்ஸ், லெனின், பிரெடரிக் ஏஞ்சல்ஸ் முதலானோர். முடியாட்சி முறை முடிவுக்கு வர வேண்டும் என்று போராடிய ஆலிவர் கிராம்வெல் என்ற சீர்திருத்தவாதி கொலை செய்யப்பட்டு, அவருடைய சடலம் இங்கு தான் தொங்கவிடப்பட்டதாம். பல பிரபலங்களின் ஆவிகள் இங்கு நடமாடுவதாகவும் சொல்கின்றனர். லார்ட் சோப்பர் என்பவர், 95 வயதில் மரணமடையும் வரை பேச்சாளர் முனையத்தில் பேசிக் கொண்டேயிருந்தாராம்.

எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சுதந்திரமாக இங்கு யாரும் பேசலாம். நின்றபடி பேசுவதற்கு வசதியாக, ஒரு பெட்டியை அல்லது சிறிய நாற்காலியை பேச்சாளர் கொண்டு வர வேண்டும்.

படித்தவர், பாமரர் என்ற பேதம் இல்லாமல், எந்த நாட்டவரும் பேசும் சரித்திரச் சிறப்புடைய இடம் உலகில் இது ஒன்று தான். உலகின் ஒரே பேச்சுப் பல்கலைக்கழகம் என்று இந்த ஹைட் பார்க் முனையத்தைச் சொல்லலாம் என பெருமை பாராட்டுகின்றனர்.

பேச்சாளர் முனையத்துக்கு ஒருமுறை வந்தவர்கள், திரும்பத் திரும்ப வருவது வழக்கமாகி விட்டது. சிலர் ஆண்டுக்கு ஐந்து முதல் 10 முறை வருகின்றனர். இங்கு உணவு, தண்ணீர் எதுவும் விற்கப்படுவதில்லை. வருபவர்கள், கையோடு தேவையான பொருட்களை எடுத்துவர வேண்டும். மழைக்கு ஒதுங்க இடமில்லாததால், குடையையும் கொண்டு வருவது நல்லது.

நீங்கள் லண்டனுக்குச் சென்றால், ஹைட் பார்க் பேச்சாளர் முனையத்தைப் பார்க்கத் தவறாதீர்கள். நீங்கள் பேசலாம்; பாடத் தெரிந்தவராக இருந்தால் பாடலாம்; ஆடத் தெரிந்தவர்கள் ஆடலாம். பெருங்கூட்டம் இல்லாவிட்டாலும், பலர் ஆர்வத்துடன் சூழ்ந்து கொள்கின்றனர்.

நல்ல ரசிகராக, பேச்சையும், பிற நிகழ்ச்சிகளையும் கேட்டும், பார்த்தும் சுவைக்கலாம்; மகிழலாம். அந்த அனுபவம் எனக்கும் கிடைத்தது.                                    ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us