PUBLISHED ON : செப் 19, 2010

பிரியமான ஜட்ஜ் அம்மா அவர்களுக்கு —
பணிவான வணக்கம். நான் ஒரு பெண். சிறுவயதிலேயே போலியோ தாக்கி, வலது காலை இழந்து விட்டேன். உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள், ஒரு தங்கை; அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
ஊனமுற்றோர் மற்றும் முதியோர், ஆதரவற்றோருக்கு இல்லம் நடத்த வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளேன். அதற்காக ஒரு அமைப்பை (என்.ஜி.ஓ.,) ஏற்படுத்தி, உடல் ஊனமுற்றோருக்கு அடையாள அட்டை பெற்றுத்தருவது, மூன்று சக்கர சைக்கிள் பெற்றுத் தருவது, விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம் பெற்றுத் தருவது போன்ற, என்னால் இயன்ற உதவிகளை செய்து தருகிறேன்.
அன்புள்ளம் கொண்ட பெரியோரின் நன்கொடையால், ஆதரவற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகம் வாங்கியும் தருகிறேன்.
என் வயது 39. குடும்பத்தில் உள்ள என் தம்பி மனைவிகளை நான் நேசிக்கிறேன். தம்பி குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொள்வேன்.
சிறு வயதிலிருந்தே, நான் ஹாஸ்டலில் தான் இருந்தேன். கடந்த ஏழு வருடங்களாகத்தான் வீட்டிலிருக்கிறேன். என் தாயிடம் எனக்கு பிடித்தமான குணம் என்னவென்றால், யார் என்ன திட்டினாலும், அடுத்த நிமிடம் அவர்களிடம் போய் பேசுவார்; உடனே மன்னித்தும் விடுவார். அந்த மனப்பக்குவம் எனக்கு இல்லை. யாரும் என்னை ஏதேனும் சொன்னால், அதை நினைத்து அழுவேன். என்னால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.
என் வருமானத்திற்காக, ஒரு தையல் பயிற்சி மையம் நடத்தி வருகிறேன். எனக்கு தேவையான எதையும் நானே பார்த்துக் கொள்வேன்.
இரண்டு தம்பிகள் இருக்கின்றனர், அப்பா இருக்கிறார் நம்மை கவனித்துக் கொள்வர் என்று, என் எதிர்காலத்தைப் பற்றியோ, என் திருமணத்தைப் பற்றியோ யோசிக்கவே இல்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் அப்பா இறந்து விட்டார். கடந்த ஓராண்டுக்கு முன்பாக, எனக்கு அரசுத் துறையில் தற்காலிக வேலை கிடைத்தது. இந்நிலையில், என் தங்கைக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஆகையால், என் தங்கை கணவரை என்னை திருமணம் செய்யச் சொல்கின்றனர். என்னை விட 14 வயது சிறியவன். அவனை, என் <உடன் பிறந்த சகோதரனாகவே பாவிக்கிறேன்.
அவனிடம், யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. அவன் தற்போது என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான். நான் பலமுறை கண்டித்தும், அவன் தொடர்ந்து என்னை துன்புறுத்துகிறான். 'நீ, பேருக்கு ஒரு கயிறை கட்டிக் கொண்டு, நீ இங்கேயேயிரு. தங்கை அவனுடன் இருக்கட்டும்...' என்று என் தாயார் சொல்கிறார். என் தங்கையும், 'நான் உன்னை கடைசி வரை பார்த்துக் கொள்வேன்...' என்கிறாள். எனக்கு துளியும் இதில் விருப்பமில்லை.
என் அமைப்பிற்கு ஒருவர் கணக்கு எழுதிக் கொடுப்பார். அவருக்கு திருமணமாகி மூன்று பையன்கள் இருக்கின்றனர். நல்ல திறமைசாலி; சமூக சிந்தனையாளர் விருது கூட வாங்கியிருக்கிறார். எதிர்பார்ப்புகளின்றி உதவி செய்யக்கூடியவர்; லட்சியவாதி. எனக்கு செய்யும் உதவிகளுக்கு, நான் என்னால் இயன்ற பணத்தைத் தந்து விடுவேன்.
அவர் என்னிடம், 'நீங்கள் ஒரு துணையை தேடிக் கொள்ளுங்கள்... அது தான் உங்களுக்கு நல்லது!' என்று அடிக்கடி சொல்வார். மிகுந்த அக்கறையுடன் என் வேலைகளை செய்து கொடுப்பார். என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்.
நான் இதை தவறாக புரிந்து கொண்டேன். 'உங்களைப் போல யாராவது எனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்...' என்று சொல்வேன். நாட்கள் செல்லச் செல்ல மனம் விட்டு பேசினேன். என் மனதை அவரிடம் பறிகொடுத்து விட்டேன். அலுவலக வேலை நிமித்தமாக ஒரு கூட்டத்திற்கு சென்ற இடத்தில், இருவரும் தவறாக நடந்து கொண்டோம். அதன் பிறகு, அவரை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
இந்த விவரத்தை அவர் மனைவியிடம் சொல்லியிருக்கிறார். முதலில் மறுத்தவள், தற்போது, 'எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை; உங்களுக்கோ, குழந்தைகளுக்கோ எந்த பிரச்னையும், பாதிப்புகளும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...' என்று சொல்லியிருக்கிறாள்.
ஒரு நாள் இரவு 11 மணிக்கு, அந்த பெண் எனக்கு போன் செய்து, 'எப்படி இருக்கிறீர்கள்... வேலை எப்படி போகிறது... எப்போது வீட்டிற்கு வருகிறீர்கள்?' என, சாதாரணமாக பேசினாள். நான், 'என்னை மன்னித்து விடுங்கள். <உங்களை நேரில் பார்த்தால் உங்கள் காலில் விழுந்து அழுது விடுவேன்...' என்று சொன்னேன். அதற்கு, 'எதற்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம்... நானும் ஒரு பொண்ணு தானே!' என்று சொன்னாள்.
எனக்கு அழுகை தாங்க முடியவில்லை. அந்த பெண் என்னை திட்டி இருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அவள் சம்மதித்தது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இப்படி அப்பாவியான பெண்ணுக்கு நாம் எப்படி துரோகம் செய்வது என்று, மிக மனவேதனையாக இருக்கிறது.
அவர் என் மீது உயிரையே வைத்திருக்கிறார். 'என்னை, எப்படி கவனித்துக் கொள்வீர்கள்... உங்கள் மனைவி, பிள்ளைகளுக்குத்தானே முதலிடம் கொடுப்பீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'பையன்கள் வளர்ந்து விட்டனர். மனைவிக்கு உதவி தேவையில்லை. ஆனால், உனக்கு கட்டாயம் உதவி தேவையல்லவா? ஆகவே, உன்னுடன் தான் அதிகமாக இருப்பேன்!' என்று சொல்கிறார்.
அவரை விட்டு என்னால் வாழவும் முடியாது. அம்மா... நான் அவரை திருமணம் செய்து கொள்ளலாமா? இல்லையென்றால் மனவருத்தத்தோடு இன்னும் கொஞ்ச காலத்தை கடத்திவிட்டு, என் வாழ்நாட்களை முடித்துக் கொள்ளட்டுமா?
— உங்கள் பதிலுக்காக காத்திருக்கும், சிறகொடிந்த சிறைப்பறவை.
அன்புள்ள மகளுக்கு, உன் விரிவான கடிதம் கிடைத்தது.
நீ, 32 வயது வரை விடுதி வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறாய். நீண்டநாள் விடுதி வாழ்க்கை வாழ்ந்தவர்கள், குடும்பத்துடன் எளிதில் ஒட்ட மாட்டார்கள். எல்லா உறவுகளுடனும், அந்நியப்பட்டு நிற்பர். எதிராளிகளின் வார்த்தைகளை பிடித்து விடாப்பிடியாய் தொங்குபவள் நீ. உன் குடும்பத்து அங்கத்தினர்கள் சுயநலமாய் இருக்கின்றனர்; நீயோ படு சுயநலமாய் இருக்கிறாய். பரஸ்பரம் அதிகம் எதிர்பார்க்கிறாய்.
நீ பழகும் அந்த நபருக்கு நிச்சயம் 55 வயது இருக்கும். அறுபது வயதை நெருங்கும் ஆண்கள், எப்போதும் தங்களின் தொலைந்து போன ஆண்மையை புதுப்பிக்க பாசக்கார ஆளாக வேஷம் போடுவர்.
அவர் தன் மனைவியை, அதட்டி, மிரட்டி, உருட்டி ஓர் அடிமையாய் வைத்திருக்கிறார் என நம்புகிறேன். அவரது மனைவி, படிக்காத அல்லது படித்தும் வேலைக்கு போகாத பெண். அவளிடம் நிச்சயம் பொருளாதார சுதந்திரம் இல்லை. அவள் ஒப்புக்கு உங்களின் திருமணத்திற்கு, பச்சைக்கொடி காட்டுகிறாள். இரவு 11 மணிக்கு அப்பெண் பேசியதும், பக்கத்தில் கணவன் அமர்ந்து வற்புறுத்தியதினால் தான்.
நாகப்பாம்பு கடி சரியா... கட்டுவிரியன் கடி சரியா என நீ கேட்கிறாய். இரண்டிலும் விஷம் ஏறினால் சுடச்சுட மரணமே! உன்னைவிட 14 வயது சிறிய தங்கையின் கணவரை மணந்து, தங்கைக்கு, சக்களத்தி ஆவதும், மூன்று திருமண வயது எய்திய ஆண்மகன்களின் வயோதிக தந்தைக்கு இரண்டாம் மனைவி ஆவதும் ஒன்றுதான்.
தங்கையின் கணவரை மணந்து, நீ குழந்தை பெற்றுக் கொண்டால், குழந்தையை வைத்துக்கொண்டு பணம் கட்டி வேலை செய்யும் வேலைக்காரியாக்கி விடுவர் உன்னை. நீ விரும்புபவரைத் திருமணம் செய்து கொள்ள, அவரது மகன்கள் சம்மதிக்க மாட்டார்கள்; அடிதடி, அதகளம், ரணகளம், போர்க்களம் தான்.
இரண்டையும் மறந்துவிடு. உனக்கு வயது 39. கண்ணியமான தரகர் மூலமாகவோ, பத்திரிகை விளம்பரங்கள் மூலமாகவோ, திருமணமாகாத விதவனாகாத, 45 முதல் 48 வயது வரையுள்ள வரனை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்துகொள்.
சகலத்திலும், வெறுப்புற்று தனிமையை நாடினாய் என்றால், 50 வயதுக்கு பிறகு மனரீதியாக பல பிரச்னைகளால் பாதிக்கப்படுவாய். தனிமர கனி பெற, ஆயிரம் கல்லடி, சொல்லடி முயற்சிப்பர் அற்பர்.
உன்னிடத்தில், மூர்க்கக்குணமும், மச்சத்தை மலையாக்கும், மனோபாவமும் கொட்டி கிடக்கிறது. உன்னை மாற்றிக் கொள். உனக்கு கீழே உள்ளவர் கோடி என நினைத்து, அமைதி பெறு.
உன் கடிதத்திலிருந்து நீ கிறிஸ்தவப் பெண் என்று தெரிகிறது. நடந்தவைகளிலிருந்து விடுபெற, பங்குதந்தையிடம் பாவமன்னிப்பு கேள். செகன்ட் ஹாண்ட் பொருட்கள் வேண்டவே வேண்டாம். வாராவாரம் மறக்காமல் தேவாலயம் சென்று வா. நல்ல வரன் அமைய கர்த்தர் உதவுவார்.
கர்த்தர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார். எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார் கண்மணி! அவர் கன்மலையை தண்ணீர் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார் பொன்மணி.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
