
டிச., 21 -வைகுண்ட ஏகாதசி
ஏகம் + தசம் என்பது ஏகாதசம் என்றாகி, ஏகாதசி என்றானது. 'ஏகம்' என்றால் ஒன்று; 'தசம்' என்றால் பத்து. பத்தும், ஒன்றும், பதினொன்று. அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்த பதினொன்றாம் நாளே, 'ஏகாதசி' திதி. மாதத்திற்கு இரு முறை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் இது வரும். இதில், தெய்வ வழிபாட்டுக்குரிய மாதமான மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசியை, 'வைகுண்ட ஏகாதசி' என்பர்.
இந்நாளில் திருமாலின் இல்லமான வைகுண்டம், முழுமையாகத் திறந்திருக்கும். இதனால் தான், வைகுண்ட ஏகாதசியன்று மரணமடைவோர் நேராக வைகுண்ட பதவியை அடைவர் என்றும், இவர்களுக்கு மறுபிறப்பில்லை என்றும் கூறுவர்.
மனிதன் பிறக்கிறான்; பணத்தை தேடி அலைகிறான்; பெண்ணாசை, மண்ணாசை அவனை வாட்டி வதைக்கிறது. இதற்கெல்லாம் அடிமையாகி, இந்த உலக வாழ்வே நிரந்தரம் எனக் கருதி இங்கேயே தங்கி விட நினைக்கிறான். தன் ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, பல பாவங்களையும் செய்கிறான். தான் வாழ வந்த இந்த உலகம், ஒரு வாடகை வீடு என்பதை அவன் உணர்வதில்லை.
பிறந்து விட்டால், அவன் மரணித்தே ஆக வேண்டும். திருமாலே, ராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரம் என இந்த பூமிக்கு மனித அவதாரம் எடுத்து வந்த போது, அவர்களுமே ஒருநாள் மரணத்தை தழுவியே இருக்கின்றனர். ஆனால், அவர்கள் வாழ்ந்த காலத்தில் மனித சமுதாயத்துக்கு செய்த தொண்டு ஏராளம். ராம ராஜ்யத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அந்தளவுக்கு நியாயமாக ஆட்சி நடத்தினார்.
கிருஷ்ணரோ, தர்மத்தைக் காக்க பல விதங்களிலும் போராடினார். அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில், மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தனக்கும், மற்றவருக்கும் பயன்படும் விதத்தில் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால், நமக்கும் வைகுண்ட பதவி நிச்சயம். பிறப்பே இல்லாமல், பசியே இல்லாமல், தூக்கம், விழிப்பு என்ற நிலையே இல்லாமல், நிரந்தர இன்பத்துடன், 'நித்யசூரி' என்ற பட்டத்துடன், வைகுண்டத்தில் பரந்தாமனைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.
பூமியில் தர்ம நெறி பிறழாமல் வாழ்ந்து, மற்றவர்களுக்கு நல்லதைச் செய்து இறைவனை அடைவதே, வைகுண்ட ஏகாதசி விழாவின் நோக்கம்.
கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவியிடம், 'ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு; அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். 30 முக்கோடி தேவர்களும் அனுஷ்டிக்கும் விரதம் இது...' என்றார்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், முதல் நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்க வேண்டும். அன்று துளசி இலையைப் பறிக்கக் கூடாது. பூஜைக்கு வேண்டிய துளசியை முதல் நாளே பறித்து விட வேண்டும்.
மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடியபின், துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். 'பாரணை' என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ண வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக்கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம்.
எட்டு முதல், 80வயது வரை உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மரபு.
நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து, நல்ல ஒரு இடத்திற்கு பயணப்பட, வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்போம்.
தி.செல்லப்பா

